ஷோரூமில் இருந்து கொண்டுவந்து 3 மாசம் கூட ஆகி இருக்காது! மாருதி கார்கள் பாதுகாப்பில் சுமார்னு யாருங்க சொன்னா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் டிசைர் (Dzire) ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் ரக கார், மாருதி சுஸுகி டிசைர் ஆகும். இத்தகைய காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனை கடந்த ஆண்டு இறுதியில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்த நிலையில், புதிய டிசைர் கார் ஒன்று இங்கு பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு தரத்தில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்ற புதிய டிசைர் கார் இந்த விபத்தை எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். தினந்தோறும் செய்தித்தாள்களை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதனாலேயே முடிந்தவரையில் கார்களை நன்கு பாதுகாப்பு தரத்தில் வழங்கிட கார் கம்பெனிகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதன் விளைவாக, சமீப காலங்களில் உருவாக்கப்படும் மாடர்ன் கார்கள் அனைத்தும் நல்ல பாதுகாப்பு தரத்தில் உள்ளன. இதன் மூலமாக, பாதுகாப்பு சோதனைகளில் இன்றைய கால இந்திய கார்கள் வெளிநாடுகளில் கூட நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்று மேட்-இன்-இந்தியா கார்களின் பெருமையை காப்பாற்றி உள்ளன.
ஆனால், மாருதி சுஸுகி கார்கள் அந்த அளவிற்கு பாதுகாப்புமிக்க கார்களாக மக்களால் பார்க்கப்படுவதில்லை. ஏனெனில், கடந்த காலங்களில் மாருதி சுஸுகி கார்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அவ்வாறானதாக இருந்தது. இந்த நிலையை மாற்றும் முயற்சியாகவே, கடந்த 2024 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிசைர் காரை மிகவும் பாதுகாப்புமிக்கதாக மாருதி சுஸுகி உருவாக்கியது.

4ஆம் தலைமுறை டிசைர் காரான அது, உலகளாவிலான என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (NCAP Crash Test)-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்று எல்லாருக்கும் பெரிய ஷாக் கொடுத்தது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5க்கு 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டது. இதற்கு, புதிய டிசைர் காரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும், நவீன பாதுகாப்பு தொழிற்நுட்ப வசதிகளும் தான் காரணம் ஆகும்.
இருப்பினும், என்னதான் 5க்கு 5 என முழு மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், நிஜ வாழ்வில் அந்த கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதே முக்கியமாகும். அதற்கு, உத்தர பிரதேச மாநில நம்பர் பிளேட்டை கொண்ட இந்த டிசைர் கார் விபத்தை பார்ப்போம். இந்த விபத்தானது அதிக வேகத்தில் நடந்து முடிந்துள்ளது என்பதை, இந்த டிசைர் காருடன் மோதலுக்கு உள்ளான மற்றொரு காரின் நிலையை பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது.
வெள்ளை நிறத்திலான அந்த கார் எந்த நிறுவனத்துடையது என்பதை அடையாளம் கூட காண முடியாத அளவுக்கு அதன் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. ஆனால், சிவப்பு நிறத்திலான பிராண்ட்-நியூ டிசைர் காரில் அதன் முன் மற்றும் பின்பக்கத்தில் மட்டுமே சிறு சிறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்தின் பாதிப்புகள் இந்த டிசைர் காரின் உட்புறம் வரையில் செல்லவில்லை. ஏர்பேக்குகள் ஆறும் முறையாக விபத்தின்போது விரிந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த குறிப்பிட்ட மாருதி சுஸுகி டிசைர் காரை சரிச்செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். விபத்தின் அதிர்வுகள் இந்த டிசைர் காரின் கேபின் வரையில் போகாததில் இருந்து இந்த காரின் வலிமையான உடலமைப்பை நம்மால் அறிய முடிகிறது. இருப்பினும், சம்பவத்தின்போது இந்த டிசைர் காரினுள் எத்தனை பேர் இருந்தனர், அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த விபரங்களை பெற முடியவில்லை.


Click it and Unblock the Notifications








