எமன் லீவில் போய்ட்டார் போல, கொஞ்சம் தான் மிஸ்!! வாங்கினால் டாடாவில் இப்படியொரு காரை வாங்கணும்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஹெரியர் (Harrier) ஆகும். 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட விலைமிக்க டாடா காராக இருப்பினும், அதற்கு இணையாக மிகவும் பாதுகாப்பானது டாடா ஹெரியர் கார் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Global NCAP Crash Test) மட்டுமின்றி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் 5க்கு முழு 5 நட்சத்திர ரேட்டிங்கை டாடா ஹெரியர் பெற்றுள்ளது. அதனால்தான், இங்கு ஒருவர் டாடா ஹெரியர் காரை ஓட்டி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.
டெல்லியில் அட்சினி என்கிற சாலையில் ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ள இந்த விபத்தின் போது காரினுள் ஒரு ஆண், ஒரு பெண் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்த விபரங்கள் பிரதீக் சிங் என்பவரது யூடியூப் (Youtube) சேனலில் இருந்து நமக்கு கிடைக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபெற்றுள்ள இந்த விபத்து தொடர்பாக பல கருத்துகள் நிலவுகின்றன. அதாவது, இந்த ஹெரியர் காரை அந்த நேரத்தில் பெண் ஒருவர் வேகமாக தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்றாலும், காரில் இருந்த ஆண் நபர் காரை தான் ஓட்டியதாக கூறுகிறார்.
மேலும், அந்த நேரத்தில் கார் அதிவேகமாக செல்லவில்லை என்றும், மணிக்கு 40-50கிமீ வேகத்தில் தான் சென்றதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விபத்து தொடர்பான காட்சிகளை எல்லாம் பார்த்தால், அந்த நபர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில், சம்பவத்தின்போது இந்த ஹெரியர் கார் சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து, சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது.
மணிக்கு 40-50கிமீ வேகத்தில் இவ்வளவு பெரிய விபத்து நடக்க வாய்ப்பில்லை. இதை வைத்து, அந்த பெண்ணை காப்பாற்ற இந்த ஆண் நபர் பழியை ஏற்க முயற்சிப்பதை அறிய முடிகிறது. விபத்து நடந்த கொஞ்ச நேரத்தில் காரில் விபத்தில் சிக்கியவர்களின் பெற்றோர்கள் பி.எம்.டபிள்யூ (BMW) கார்களில் வந்துள்ளனர். வந்தவர்கள் எந்தவொரு பரபரப்பும் இன்றி சாதாரணமாக விபத்தில் சிக்கியவர்களை அழைத்து சென்றதாக அப்போது அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
நல்லவேளையாக இந்த சம்பவத்தில் டாடா ஹெரியர் காரை தவிர்த்து எவருக்கும், எந்த வாகனத்திற்கும் பெரியதாக எந்த பாதிப்பும் இல்லை. விபத்துக்கு உள்ளான ஹெரியர் காரில் இருந்த ஆண் நபரது கை விரலில் வெட்டு விழுந்துள்ளது. காரில் இருந்து வெளியே வந்ததும் உடனே அவர் பேன்டேஜ் ஒட்டிக் கொண்டார்.
நிச்சயமாக மணிக்கு 50கிமீ வேகத்திற்கு மேல் சென்று கரப்பான் பூச்சி போல் தலைக்கீழாக கவிழ்ந்த காரின் உள்ளே இருந்து இருவரும் பத்திரமாக வெளியே வந்திருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். இது டாடா ஹெரியர் காரின் பாதுகாப்பு தரத்தையும், வலிமையையும் காட்டுகிறது. 5-ஸ்டார் ரேட்டிங் சும்மாவா கொடுப்பார்கள்?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா ஹெரியர் கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.08 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.54 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. அதுதான், டெல்லியில் பணக்கார வீட்டு பசங்களுக்கு நடந்துள்ள இந்த விபத்திலும் அவர்களது உயிரை காப்பாற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications









