வாகன ஓட்டிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும் உத்தர பிரதேச காவல் துறை... என்னனு தெரியுமா?
விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உத்தர பிரதேச போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து தேசிய அளவிலான ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக அன்றைய தினம் முதல் இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகள் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. தனியாருக்கு சொந்தமான கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் மிக கடுமையான கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்தது.

இதனை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதனால் நாட்டில் வாகன போக்குவரத்து ஓரளவிற்கு சீரடைந்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இன்னமும் காவல் துறையின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

வாகனங்களை தேவையில்லாமல் இயக்குபவர்கள், 144 தடை உத்தரவை மீறுபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் ஆகியோரின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய 2 முக்கிய நகரங்களும் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில்தான் உள்ளன. கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் ஒரு சில இடங்கள் சிகப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. எனவே கௌதம புத்தா நகர் மாவட்டத்தில், தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியதால், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களிலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 611 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

இதுதவிர 5 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதலும் செய்துள்ளனர். இதுகுறித்து கௌதம புத்தா நகர் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 144 தடை உத்தரவை மீறியதால், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1,809 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதில், 611 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நொய்டா-டெல்லி எல்லைக்கு இன்னும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தியவாசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

அதேபோல் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இ-பாஸ் வைத்திருப்பவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நொய்டா-டெல்லி எல்லையில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








