ஐயரை வைத்து பூஜை போட்டு வண்டியை கையில் வாங்கிய 7வயது சிறுவன்! வித்தியாசமா இருக்கும் இந்த வண்டியோட விலை இவ்வளவா
நம்முடைய சிறு வயது பருவத்தில் நாம் பொம்மை காரை வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கும். குறிப்பாக, ரிமோட் காரை அப்பாகிட்ட வாங்கி தர சொல்லி ஒரு பிரளயத்தையே உருவாக்கிய காலம் எல்லாம் உண்டு. 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் சூழல் இப்படியாக இருக்க, 2கே கிட்ஸ்களுக்கே சவால் கொடுக்க கூடியவர்களாக மாறி இருக்கின்றனர் இன்றைய கால சிறுவர்கள். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 7 வயது சிறுவன் தன்னுடைய புத்தம் புதிய வாகனம் ஒன்றிற்கு பூஜை போடும் காட்சிகளே தற்போது வெளியாகி இருக்கின்றன.
கேரளா மாநிலத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பார்க்க அந்த வாகனம் சற்று விநோதமாக இருப்பதனால் அந்த வீடியோ கூடுதலாக பலரின் கவனத்தை கவர்ந்திருக்கின்றது. சிறுவனுக்காக வாங்கியிருக்கும் அந்த வாகனம் ஓர் ஏடிவி (ATV) ரக வாகனம் ஆகும். இந்த வாகனத்தையே வாங்கிய கையோடு வந்து கோவிலில் வைத்து சிறுவனும், அவருடைய தந்தையும் பூஜை போட்டிருக்கின்றனர்.

சிறுவனின் தந்தையான அனூப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் பீச்சுக்கு சென்றிருக்கின்றார். அங்கேயே முதன்முதலில் ஏடிவி வகை வாகனத்தை அவர்கள் பார்த்திருக்கின்றனர். வாடகைக்கு விடப்படும் அந்த வாகனத்தில் சில ரவுண்டுகளையம் அவர்கள் அடித்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே அவ்வாகனம் அவர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, சிறுவன் அந்த வாகனம் தனக்கு வேண்டும் என நீண்ட காலமாக பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், ஏடிவி வாகனத்திற்கு பதிலாக அவர் குவாட் (Quad) வகை பைக்கையே வாங்கிக் கொடுத்திருக்கின்றார். இந்த பைக் கேரளாவில் எங்குமே விற்பனைக்குக் கிடைக்காத காரணத்தினால், ஆன்லைனில் தேடிப்பிடித்து குஜராத்தில் இருந்து அதை அவர் வாங்கியிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே தற்போது அவர் ஏடிவி வகை வாகனத்தையும் மகனுக்கு வாங்கிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்திற்கே அவர்கள் பூஜை போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. கோவிலில் வைத்து பூஜாரியைக் கொண்டே இந்த வாகனத்திற்கு அவர் பூஜை செய்திருக்கின்றனர்.
மேலும், அதே குஜராத் டீலரை தொடர்புக் கொண்டே இந்த வாகனத்தை அனூப் வாங்கியதாக கூறியுள்ளார். இந்த ஏடிவி வகை வாகனம் 'யுடிவி 200' (UTV 200) என்கிற பெயரிலேயே விற்கப்படுகின்றது. இந்த வாகனத்தில் 200 சிசி ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கியர்பாக்ஸைப் பொருத்த வரை சிவிடி டிரான்ஸ்மிஷனே பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். ஆனால், இந்த வேகத்தில் செல்லும் வாகனத்தை சிறுவர்கள் ஓட்ட இந்தியாவில் அனுமதியில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இந்த வாகனத்தை மணல் பாங்கான சாலை மற்றும் கரடு-முரடான பாதை உள்ளிட்டவற்றில் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான பிரத்யேக வாகனமே இது ஆகும். இதனால்தான், இந்த வாகனத்தை கடற்கரையோர காவல் பணியில் உள்ள காவலர்களிடத்தில் அதிகளவில் பார்க்க முடிகின்றது. அவசர கால நேரங்களில் அவர்கள் விரைந்து செயல்பட இந்த வாகனம் உதவியாக இருக்கும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 2.5 லட்சம் என தெரிகின்றது.
மேலும், இதன் ஒட்டுமொத்த எடை 245 கிலோவாகும். இதில், 9 லிட்டர் வரை எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். நீர் மற்றும் சகதிகள் நிறைந்த சாலைகளையிலும் ஆபத்தின்றி இயங்கும் திறன் கொண்ட வாகனமே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வாகனத்தையே மிகுந்த ஆர்வத்துடன் சிறுவன் இயக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏடிவி ரக வாகனங்கள் பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த வாகனம் வாடகை வாகனமாக பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில ரவுண்டுகளுக்கே நூற்றுக் கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. இதேபோல், காவலர்களும் இந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடற்கரை மற்றும் வன பகுதியில் உள்ள காவலர்களிடத்தில் இந்த வாகனத்தைக் காணலாம்.


Click it and Unblock the Notifications








