இனிமேல் இதை பண்ணியே ஆகணும்! வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைத்த போலீஸ்! ஒருத்தர் விடாம வளச்சு வளச்சு பிடிக்கறாங்க!
உலகில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகளவில் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக அதிகளவில் நடைபெற்று கொண்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில், போக்குவரத்து விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நகரங்களில் ஒன்றாக நொய்டா இருக்கிறது. இது உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது கிடையாது என்பது வருத்தமான ஒரு விஷயம்.
எனவே போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வரிசையில் நேற்று (ஜூன் 18), மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்த காரணத்திற்காக 4,569 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த காரணத்திற்காக 247 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் டூவீலர்களில் 3 பேர் பயணம் செய்த காரணத்திற்காக, 153 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாகனங்களில் முறையான நம்பர் பிளேட் இல்லாத காரணத்திற்காக 121 பேருக்கும், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக 77 பேருக்கும், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக 66 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், நிறைய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில், 6,945 வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நொய்டா போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் வாகன ஓட்டிகள் பின்பற்றியே ஆக வேண்டும் என்ற சூழலை நொய்டா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நொய்டா மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகளும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது அவசியம். இது காவல் துறை அதிகாரிகள் விதிக்கும் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்து உயிரையும் காப்பாற்றும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சில சமயங்களில் நமக்கு என்ன நடந்து விடப்போகிறது? என்ற அலட்சியத்துடன் வாகன ஓட்டிகள் பலர் செயல்படுகின்றனர். ஆனால் சிறு அலட்சியங்கள் கூட, சில சமயங்களில் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே வாகன ஓட்டிகளாகவோ அல்லது பாதசாரிகளாகவோ சாலைக்கு என வந்து விட்டால், கவனமாக செயல்படுவதுதான் நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








