இனி ரோட்ல ஒரு பழைய வண்டி கூட ஓட கூடாது! கிடைக்கற ரேட்டுக்கு மத்தவங்க தலையில் கட்டும் உரிமையாளர்கள்
இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் (Delhi), மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ஒரு ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால், டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளது. டெல்லியில் 51 சதவீத காற்று மாசு, வாகனங்கள் மூலமாகவே ஏற்படுகிறது.

எனவேதான் டெல்லியில் பழைய வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் (ஜூலை 1), அதிரடியான திட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படாது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படாது. டெல்லியில் தற்போதைய நிலையில் சுமார் 62 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன.

இவை அனைத்துமே, முறையே 15 மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தற்போது அவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு என்னவென்றால், டெல்லிக்கு வெளியே அவற்றை பயன்படுத்தி கொள்வதுதான். ஆம், டெல்லிக்கு வெளியே இந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ள முடியும். டெல்லியில் மட்டும்தான் பயன்படுத்த முடியாது. இதற்காக போக்குவரத்து துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
இந்த தடையில்லா சான்றை பெற்ற பிறகு, டெல்லிக்கு வெளியே பழைய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது எரிபொருள் விற்பனை நிறுத்தம் என்ற முடிவு மிகவும் தீவிரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் மாற்று வழிகளை ஆராய தொடங்கியுள்ளனர்.
அவர்கள் தங்கள் பழைய வாகனங்களை டெல்லிக்கு வெளியே விற்பனை செய்து விட்டு, புதிய வாகனங்களை வாங்கி கொள்ளலாம். இது பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் முன்பு இருக்கும் முக்கியமான ஒரு வழி ஆகும். ஆனால் டெல்லிக்கு வெளியே இந்த வாகனங்கள், மிகவும் குறைவான விலையில்தான் விற்பனையாகின்றன.
பழைய வாகனங்களை வாங்குபவர்கள், மிகவும் குறைவான விலைக்கு பேரம் பேசுவதாக, அவற்றை விற்பனை செய்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் வேறு வழியில்லாமல், பழைய வாகனங்களை வைத்துள்ள பலர், அவற்றை டெல்லிக்கு வெளியே விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளனர். இதன் காரணமாக டெல்லிக்கு வெளியே மிகவும் குறைவான விலையில் தற்போது பழைய வாகனங்கள் கிடைக்க தொடங்கியுள்ளன.
இந்த சூழலில், எரிபொருள் விற்பனை நிறுத்தம் என்ற உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று மட்டும், டெல்லியில் 80 பழைய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் பழைய வாகனங்களை, பொது இடங்களில் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 80 பழைய வாகனங்களை அரசு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை நிறுத்தம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் காற்றின் தரம் அவ்வப்போது மிக மோசமான நிலைக்கு சென்று விடுகிறது. எனவே இது போன்ற மிக கடுமையான நடவடிக்கைகள் அவசியமான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








