புஷ்பா படத்தை விஞ்சிய கடத்தல்! மேற்கூரைல இருந்ததை பாத்ததும் ஷாக்! கண்டேபிடிக்க முடியாத அளவு யோசிச்சிருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்கள் என எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, மஹிந்திரா பொலிரோ பயன்படுத்தப்பட்டு கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக பொலிரோ திகழ்கிறது. சரக்குகளை கொண்டு செல்லவும், மக்களை ஏற்றி செல்லவும் மட்டுமல்லாது, ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்கு கூட, மஹிந்திரா பொலிரோ காரை பலரும் உபயோகித்து கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு ஒரு முரட்டுத்தனமான காராக மஹிந்திரா பொலிரோ கருதப்படுகிறது.
ஆனால் பீஹார் மாநிலத்தில் தற்போது வித்தியாசமான ஒரு காரணத்திற்காக மஹிந்திரா பொலிரோ கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒரு சில மாநிலங்களில் மது விலக்கு அமலில் இருந்து வருகிறது. இதில், பீஹார் மாநிலமும் ஒன்றாகும். ஆனால் இது சட்ட விரோதமான மது விற்பனைக்கு வழிவகுத்துள்ளது.

பீஹார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளதால், அதை பயன்படுத்தி கொண்டு, சட்ட விரோதமான மது விற்பனையை அனுமதிப்பதன் மூலமாக, காவல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதாக நீதிமன்றமே கடந்த காலங்களில் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது அதிக பணம் கிடைப்பதால், மது விலக்கை அரசு அதிகாரிகள் விரும்புகின்றனர் என்பது நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு.
நீதிமன்றத்தின் இந்த காட்டமான கருத்துக்கு மத்தியிலும், பீஹார் மாநிலத்திற்கு நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து, தொடர்ந்து அதிகளவில் மது பானங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. மஹிந்திரா பொலிரோ காரை வித்தியாசமான முறையில் பயன்படுத்தி, கடத்தல்காரர்கள் இந்த குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளனர்.

அதாவது மஹிந்திரா பொலிரோ காரின் மேற்கூரையில் வைத்து, 800 டெட்ரா பாக்கெட் மது பானங்களை கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளின் சோதனையில், அந்த மது பானங்கள் சிக்கி கொண்டுள்ளன. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா பொலிரோ காரின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த மது பானங்களை ஒருவர் எடுத்து கீழே வீசுவதை நம்மால் காண முடிகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து, பீஹார் மாநில அரசு அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடத்தல்காரர்களின் இந்த நடவடிக்கை, அரசின் மது விலக்கு நடவடிக்கையை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக, மஹிந்திரா பொலிரோ காரில், மாடிஃபிகேஷன்களை செய்து, அவர்கள் மது பானங்களை சட்ட விரோதமாக கடத்தியுள்ளனர்.
வீடியோவை பார்த்ததன் மூலமாக எங்களுக்கு தெரிய வருவது என்னவென்றால், கடத்தல்காரர்கள் முதலில் மஹிந்திரரா பொலிரோ காரின் மேற்கூரையை நீக்கியிருக்கலாம். அதற்கு பிறகு, மது பானங்களை வைப்பதற்காக ஒரு ஷீட்டை பொருத்தி, அதன் மேலே ஏற்கனவே நீக்கப்பட்ட காரின் உண்மையான மேற்கூரையை பொருத்தியிருக்கலாம்.
இந்த மாடிஃபிகேஷன் மூலமாக மது பானங்களை கடத்தினால், உண்மையில் அரசு அதிகாரிகள் கண்டுபிடிப்பது சிரமமே. எனவே கடத்தல்காரர்களை, வேறு யாரேனும் ஒருவர் புகார் அளித்து அரசு அதிகாரிகளிடம் சிக்க வைத்திருக்கலாம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். அயன் மற்றும் புஷ்பா போன்ற திரைப்படங்களில், விதவிதமான வழிமுறைகளை பின்பற்றி கடத்தல் சம்பவங்கள் நடக்கும்.
அதே பாணியில் இந்த கடத்தல்காரர்களும், மது பானங்களை கடத்துவதற்காக மூளையை பயன்படுத்தியுள்ளனர். இந்த மூளையை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பீஹார் மாநில அரசு கொண்டு வந்துள்ள மது விலக்கு கொள்கை நீர்த்து போய் விடும்.


Click it and Unblock the Notifications








