7 லட்சம் கிமீ ஓடிய பிறகும் ஷோரூம் கண்டிஷனில் ஜொலிக்குது! அந்த நிறுவனத்தோட கார் இந்த அளவுக்கு உழைக்குமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). இது மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஹோண்டா சிட்டி (Honda City), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி சியாஸ் போட்டியிட்டு வருகிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை சொல்லி கொள்ளும்படி பெரிதாக இல்லை.
இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் விற்பனையை நிறுத்த போவதாக கூட ஒரு சமயத்தில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் மாருதி சுஸுகி சியாஸ் கார் தொடர்ந்து விற்பனையில் இருந்து கொண்டுதான் உள்ளது. எனவே விற்பனை நிறுத்தப்பட போவதாக வெளியான தகவல்கள் எல்லாம் யூகங்கள் ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரை மிக நீண்ட காலமாக பெரிய அளவில் அப்டேட் செய்யாமல் விற்பனை செய்து வருகிறது. இதுவும் கூட அதன் விற்பனை மந்தமாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் விற்பனை 'டல்' அடித்தாலும் கூட, மாருதி சுஸுகி சியாஸ் அருமையான ஒரு கார்தான்.
இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ஃபேஸ்புக் (Facebook) தளத்தில், #ClubCiaz Maruti Suzuki Ciaz owners club என்ற பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில், கன்வல்ப்ரீத் சிங் பெனிபல் என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு:

''7 லட்சம் கிலோ மீட்டர்களை நிறைவு செய்து விட்டேன். இந்த செக்மெண்ட்டின் சிறந்த செடான் இதுதான். என்னுடைய சியாஸ் 2015 மாடல் டீசல் மேனுவல்'' என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தன்னுடைய மாருதி சுஸுகி சியாஸ் காருடன், கன்வல்ப்ரீத் சிங் பெனிபல் இருக்கும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
2015 மாடல் எனும்போது, சுமார் 9 வருடத்தில், 7 லட்சம் கிலோ மீட்டர்களை இந்த கார் கடந்துள்ளது. இது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். இதற்கு நாம் 2 பேரை பாராட்டி ஆக வேண்டும். முதலில் பாராட்டப்பட வேண்டியவர் கன்வல்ப்ரீத் சிங் பெனிபல் ஆவார். திறமையான ஓட்டுனர்களால்தான், காரை இப்படி பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு ஓட்ட முடியும்.
7 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய பிறகும் கூட, கார் இன்னமும் நல்ல கண்டிஷனில் உள்ளது. புகைப்படங்களை பார்க்கும்போதே, அது நமக்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தில் இரண்டாவதாக நாம் மாருதி சுஸுகி நிறுவனத்தை பாராட்ட வேண்டும். நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய இன்ஜின் உடன் கூடிய ஒரு காரை தயாரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.
கன்வல்ப்ரீத் சிங் பெனிபலின் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1,248 சிசி டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 90 பிஎஸ் பவர் மற்றும் 200 என்எம் டார்க் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி சியாஸ் காரில் தற்போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை.
சியாஸ் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்தவொரு காரிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் மாருதி சுஸுகி சியாஸ் பிரீமியமான ஒரு கார் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம், போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சியாஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை களமிறக்கினால், விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
Image Courtesy: Kanwalpreet Singh Benipal/Facebook


Click it and Unblock the Notifications








