இளமை பருவமே கண்முன் வந்துருக்கும்... 90 வயது தந்தைக்கு செம்ம ஷாக் பரிசு கொடுத்த மகன்!! இதெல்லாம் வேற லெவல்...
சில வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருளை மீண்டும் பார்க்க நேர்ந்தாலோ அல்லது தொலைந்துபோய் மீண்டும் கிடைத்தாலோ யார் தாங்க சந்தோஷமும், பூரிப்பும் அடையாமல் இருப்பார்கள்? புதியதாக அதிக பணம் கொடுத்து வாங்கும்போது கூட அத்தகைய வித்தியாசமான மகிழ்ச்சி உணர்வு கிடைக்காது, ஆனால் மீண்டும் காண நேரும் பழமையான பொருட்களில் அந்த உணர்வு ஒளிந்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தாலே இப்படியென்றால், கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பிறகு பயன்படுத்திய ஒரு பொருளை காண நேர்ந்தால்? ஆம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் சுமார் 60 வருடங்களுக்கு பிறகு தான் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மீண்டும் பெற்றுள்ளார். இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பில் ஜாண்ட்பெல்ட் (வயது 90), நெதர்லாந்தை சேர்ந்தவரான இவர், தனது இளமை பருவ காலக்கட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டி.கே.டபிள்யூ தயாரித்த மோட்டார்சைக்கிள் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் அதன்பின் கனடாவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்ததால் பில் ஜாண்ட்பெல்ட்டால் தொடர்ந்து அந்த மோட்டார்சைக்கிளை பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அதே மோட்டார்சைக்கிளை மீண்டும் தந்தையின் கண் முன் கொண்டுவந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் பில் ஜாண்ட்பெல்ட்டின் மகன் வின்ஸ்.
பில் ஜாண்ட்பெல்ட் பயன்படுத்தி வந்தது 1956ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டி.கே.டபிள்யூ மோட்டார்சைக்கிள் ஆகும். இதனை அவர் 1960ஆம் ஆண்டில் வாங்கியிருந்தார். வாங்கிய பிறகு 4 வருடங்கள் மட்டுமே பயன்படுத்திய பில் ஜாண்ட்பெல்ட் அதன் பின்னர் பைக்கை நெதர்லாந்திலேயே விட்டுவிட்டு தனது மனைவி வில்மா உடன் புதிய வாழ்க்கையை துவங்க கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். சமீபத்தில்தான், வில்மா தனது 86ஆம் வயதில் மரணித்துள்ளார்.

வில்மா இறந்து வெறும் 4 வாரங்களுக்கு உள்ளாகவே பில் ஜாண்ட்பெல்ட்டை அவரது இளமை கால டி.கே.டபிள்யூ மோட்டார்சைக்கிள் வந்தடைந்துள்ளது. இதுகுறித்து பில் ஜாண்ட்பெல்ட்டின் மகன் வின்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், "அப்பா பைக்கை பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய 90 ஆவது பிறந்தநாளுக்கு ஆச்சரிய பரிசாக அதை அவருக்கு திரும்ப வழங்குவது நல்ல யோசனையாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் கனடாவுக்கு வந்தபோது நெதர்லாந்தில் தனது சகோதரர் கெர்ரிட்-டிடம் அதை விட்டுவிட்டு வந்தார்.
எனது சகோதரர் வின்செண்ட்டின் உதவியுடன் அந்த பைக் யாரிடம் உள்ளது என்பதைய கண்டறிந்தோம். பைக்கை மீண்டும் அப்பாவிடம் கொண்டுவந்தது எனக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. நான் மோட்டார்சைக்கிள்களை விரும்புகிறவன். இது அவருக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்று எனக்கு தெரியும். பைக்குடன் அவர் (பில் ஜாண்ட்பெல்ட்) புகைப்படம் எடுத்து கொண்ட நாளில் இருந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு பிறகு அதை அவரிடம் திரும்ப வழங்க முடிந்தது" என கூறினார்.

பில் ஜாண்ட்பெல்ட் பயன்படுத்திய பைக்கை மீண்டும் கண்டுப்பிடிக்க வின்ஸிற்கு ஏறக்குறைய 6 மாத காலங்கள் தேவைப்பட்டுள்ளது. பில் ஜாண்ட்பெல்ட்டால் வாங்கப்பட்ட இந்த டி.கே.டபிள்யூ பைக் அதன்பின் இத்தனை 60 வருடங்களில் வெறும் 3 உரிமையாளர்களின் கைகளுக்கு மட்டுமே சென்றுள்ளது. பொதுவாக இவ்வளவு பழமையான பைக் மீண்டும் கிடைப்பது என்பது மிகவும் அபூர்வமாகும். ஏனெனில் இவ்வளவு பழமையான பைக்கை தொடர்ந்து பராமரித்து பயன்படுத்த பெரியதாக யாரும் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் பில் ஜாண்ட்பெல்ட் வாங்கிய பைக் கடைசி உரிமையாளராக ஹிம் ஜனேசன் என்பவரிடம் சென்றடைந்துள்ளது. ஹிம் ஜனேசன் நெதர்லாந்தில் பழமையான மோட்டார்சைக்கிள்களை சேகரிப்பவராகவும், அவற்றிற்கு தேவையான பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்பவராகவும் உள்ளார். இதனாலேயே இத்தனை வருடங்களுக்கு பிறகு வின்ஸால் அந்த பைக்கை பெற முடிந்துள்ளது. புதிய படத்தில் பைக்கில் நாம் காணும் மாற்றங்கள் யாவும் ஹிம் ஜனேசன் கொண்டுவந்ததே ஆகும்.


Click it and Unblock the Notifications
