இனி வாழ்க்கைல எப்பவும் 'ஹை பீம்' போடவே மாட்டாங்க... வெச்ச 'செக்' அப்படி... இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல!
'ஹை பீம்' பயன்படுத்தியவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரளாவின் மோட்டார் வாகன துறை 'ஆபரேஷன் ஃபோகஸ்' (Operation Focus) என்ற அதிரடி நடவடிக்கைகயை தற்போது மேற்கொண்டு வருகிறது. இரவு நேரங்களில், வாகனங்களின் ஹெட்லைட்களில் 'ஹைம் பீம்' (High Beam) பயன்படுத்துபவர்களால் ஏற்படக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான் இதன் முக்கியமான நோக்கம்.

இந்த அதிரடி ஆபரேஷனின் கீழ் தற்போது வரை, விதிமுறைகளை மீறிய 900 பேர் பிடிபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 3.49 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் தேவையில்லாமல் 'ஹை-பீம்' பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து, விபத்துக்கள் குறையும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.

கேரளாவின் மோட்டார் வாகன துறையால், வெகு சமீபத்தில்தான் 'ஆபரேஷன் ஃபோகஸ்' நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவு நேரங்கள் மற்றும் காலை நேரங்களில் இந்த அதிரடி நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை, மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.

அனைத்து வகையான வாகனங்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இரவு நேரங்களில் ஹை-பீம் போட்டு கொண்டு வாகனங்களை இயக்குபவர்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் அபாயகரமான பின் விளைவுகளை குறைப்பதுதான், இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்த சோதனையின்போது, அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை உமிழும் லைட்களை பயன்படுத்துபவர்களும், விதிமுறைகளுக்கு புறம்பான லைட்களை பயன்படுத்துபவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர். முறையான வெளிச்சம் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களும் இந்த நடவடிக்கையின் கீழ் தண்டிக்கப்பட்டு கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் தங்கள் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத வண்ண விளக்குகளை பயன்படுத்துகின்றனர். அத்துடன் ஆக்ஸலரி லைட்கள் (Auxiliary Lights) எனப்படும் துணை விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் அளவுக்கு அதிகமான வெளிச்சமும் ஒரு சிலரால் உருவாக்கப்படுகிறது. மறுபக்கம் இன்னும் ஒரு சிலரின் வாகனங்களில் பார்க்கிங் லைட்கள் (Parking Lights) இருப்பதில்லை.

இதுபோன்ற விதிமுறை மீறல்கள் அனைத்திற்கும், 'ஆபரேஷன் ஃபோகஸ்' நடவடிக்கையின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் வழங்கி கொண்டுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் தேவையில்லாமல் ஹை பீம்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், வாகன உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. தற்போது விதிமுறைகளை மீறியதாக பிடிபடுபவர்களிடம், அவர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அங்கீகாரமற்ற லைட்கள் அகற்றப்பட வேண்டும் என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத லைட்கள் அகற்றப்பட்டு விட்டது என்பதை, ஆர்டிஓ முன்பாக வாகனத்தை காட்டி உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு புறம்பான லைட்களை பயன்படுத்தினால், எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் கண்கள் அதிகமாக கூசும். இதன் காரணமாக அவர்களால் சாலையை தெளிவாக பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம். அத்துடன் எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் பதற்றம் அடையும் சூழலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டூவீலர்களில் வருபவர்கள் பேலன்ஸ் செய்ய முடியாமல், நிலை தடுமாறலாம். இறுதியில் இந்த விதிமுறை மீறல்கள் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.

எனவேதான் கேரள மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். மற்ற மாநில போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே மற்ற மாநிலங்களிலும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








