ஷேவாக்கின் மகன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!! ஃபெராரி கார் ஜஸ்ட் மிஸ்...
விரேந்தர் ஷேவாக் (Virender Sehwag) கிரிக்கெட் வீரர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, சச்சின் டெண்டுல்கரை போன்று விராட் கோலி வந்தார், விராட் கோலியை போன்று நாளை வேறொருவர் வருவார். ஆனால், ஷேவாக்கை போன்று ஒருவர் வருவாரா என கேட்டால், யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், ஷேவாக்கின் மகன் வருவார் போல் தெரிகிறதே என நாம் ஆச்சிரியப்படும் வகையில் அவரது மகன் ஆர்யவீர் சமீபத்திய கிரிக்கெட் போட்டியில் பிரமாதமாக விளையாடி உள்ளார். இருப்பினும், இதற்காக உனக்கு போர்ஷே கார் கிடையாது என ஷேவாக் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால், ஷேவாக் தனது மகனிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார். நம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உலக கோப்பையை வெல்வதற்கு இணையானது, பாகிஸ்தானை அவர்கள் ஊரிலேயே வெல்வதாகும். அவ்வாறு 2004ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இந்திய அணி ஆடியது ஒரேயொரு இன்னிங்க்ஸ் தான், பாகிஸ்தான் இரு இன்னிங்க்ஸ் ஆடிய போதிலும் இந்தியா அடித்த ரன்களை எட்ட முடியவில்லை. காரணம், இந்திய அணி அப்படியொரு இமாலய ரன் 675ஐ அடித்திருந்தது. அதில், வேகமாக ஷேவாக் அடித்த 309 ரன்கள் முக்கிய பங்களிப்பாகும். அதன்பின், 2008இல் சென்னையில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 319 ரன்களை ஷேவாக் அடித்தார்.
இவ்வாறு, பல வீரர்களுக்கு கனவாக இருக்கும் 300 ரன்களை 2 முறை அடித்தவரின் மகன் சமீபத்திய போட்டியில் எடுத்த ரன்கள் 297 ஆகும். கூச் பெஹர் கோப்பைக்கான போட்டியில் மேகலாயா அணியை அவர்களது இடத்திலேயே (ஷில்லாங்) டெல்லி அணியை சேர்ந்த ஆர்யாவீர் ஷேவாக் துவம்சம் செய்துள்ளார். 309 பந்துகளில் 51 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 297 ரன்களை எடுத்துள்ளார்.

இருப்பினும், 297 என்பதும் ஷேவாக்கின் 319 ரன்களை காட்டிலும் 23 குறைவாகும். அந்த 23 ரன்கள் எங்கே என்று கேட்டுதான் ஷேவாக் ஜாலியாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த எக்ஸ் பதிவில், ஆர்யவீரின் 297 ஸ்கோர்போர்டும், போட்டியின்போது அவர் கொடுத்த போஸுக்கு எடுக்கப்பட்ட போட்டோவும் உள்ளன.
மேலும் அந்த பதிவில் ஆர்யவீரின் எக்ஸ் பக்கத்தை குறிப்பிட்டு, "ஆர்யவீர் நன்றாக விளையாடினாய். 23 ரன்கள் வித்தியாசத்தில் ஃபெராரி (கார்)-ஐ இழந்துவிட்டாய். ஆனால் நன்றாக செய்தீர்கள். உள்ளுக்குள் எரியும் நெருப்பை உயிர்ப்புடன் வைத்திருங்கள். மேலும் பல டேடி சதங்கள் மற்றும் இரட்டை மற்றும் முச்சதங்களை நீங்கள் அடியுங்கள். விளையாட போ..." எனவும் ஷேவாக் பதிவிட்டுள்ளார்.
அதாவது, மகன் தனது அதிகப்பட்ச ரன்களை தாண்டிவிட்டால் புத்தம் புதிய ஃபெராரி கார் ஒன்றை பரிசாக வழங்கலாம் என்று ஷேவாக் திட்டமிட்டு இருந்துள்ளார். ஒருவேளை ஆர்யவீர் 320 ரன்களை கடந்திருந்தால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபெராரி காரை ஷேவாக் வழங்கி இருப்பாரா அல்லது வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்து இருப்பாரா? உங்களுக்கு தோன்றுவதை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.
இந்தியாவில் தற்போதைக்கு புரோசாங்கே, 296 ஜிடிஎஸ், 296 ஜிடிபி, ரோமா, எஃப்8 டிரிப்யூடோ, போர்டோஃபினோ என 6 விதமான ஃபெராரி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தாலிய கார் நிறுவனம் ஃபெராரி என்பதால் கார்களின் பெயர்கள் எல்லாம் உச்சரிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபெராரி கார்களில் விலைமிக்கது என்றால், அது புரோசாங்கே ஆகும். ரூ.10.50 கோடியாக எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய இளம் தலைமுறையினருக்கு எல்லாம் ஃபெராரி போன்ற கார்கள் சாதாரணமானவையே. குறிப்பாக, மும்பை, டெல்லியில் வளரும் இளைஞர்கள் சர்வ சாதாரணமாக ஃபெராரி, லம்போர்கினி கார்களை பார்க்கின்றனர்; ஓட்டுகின்றனர். ஆதலால், விரேந்தர் ஷேவாக்கின் மகன் இன்னும் ஃபெராரி கார் ஒன்றை கொண்டில்லை என்பது ஆச்சிரியமாக உள்ளது. அல்லது, ஃபெராரியை தவிர்த்து லம்போர்கினி, ஃபோர்டு மஸ்டங் உள்ளிட்ட கார்களை பயன்படுத்தி வரலாம்.


Click it and Unblock the Notifications









