மக்களை ஏமாற்றிய பணத்தில் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்!! கேட்பாரற்று கிடக்கும் காஸ்ட்லீ பென்ஸ் கார்!
இந்தியா உள்பட உலகளவில் பல நாடுகளில், கஸ்டமர்களால் வாங்கப்படும் சொகுசு கார்கள் அனைத்தும் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. அதாவது, பல சொகுசு கார்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு ஓரங்கட்டப்படுகின்றன. அது என்ன... சொகுசு கார்கள் மட்டும்? என நீங்கள் கேட்கலாம். குறைந்த விலையிலான கார்களை வாங்கும் மக்கள் முடிந்தவரையில் அதனை அடிக்கடி பழுது பார்த்தாவது பயன்படுத்துவார்கள். ஆனால், பணக்காரர்களுக்கு அந்த அளவிற்கு நேரம் கிடைப்பதில்லை அல்லது பழுது பார்த்து பார்த்து அவர்களுக்கு வெறுப்பாகி இருக்கும். சொகுசு கார்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
அதாவது, வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்யும் கார்களுக்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை எனில் அது ஒரு கட்டத்திற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஓரங்கட்டப்படுகிறது. அதேபோல், சில பணக்காரர்கள் சில காரணங்களினால் மாத, வருட கணக்கில் கூட வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துவிடுகின்றனர்.

இங்கிருக்கும் அவர்களது சொகுசு கார்கள் கேட்பாரின்றி தூசியும், அழுக்குமாய் ஓரங்கட்டப்படுகின்றன. அந்த வகையில், கொல்கத்தாவில் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் இ350 கேப்ரியோலெட் கார் ஒன்று யாரும் தொட கூட விரும்பாத அளவிற்கு அழுக்கு படிந்து கிடக்கிறது. இந்த காருக்கு உரிமையாளர்கள் சாரதா குழுமத்தை சேர்ந்தவர்கள் ஆவார். சாரதா குழுமத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சாரதா குழுமத்தின் போன்சி மோசடி கிழக்கு இந்திய மாநிலங்களில் மிக பிரபலமானது. இந்த மோசடியில் சிக்கி கோடி கணக்கிலானோர் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர். அத்தகைய குழுமத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி விட்டுசென்ற இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் இ350 கேப்ரியோலெட் கார் தொடர்பான படங்கள் கல்கத்தா எக்ஸோடிக்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் ஷபூர்ஜி சுகோப்ரிஸ்தி நியூடவுன் என்கிற பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திற்கு கீழ் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த காரை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்த படங்களை பார்க்கும்போதே தெரிந்திருக்கும், இந்த விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் எந்த அளவிற்கு அழுக்காக உள்ளது என்பது.
காரில் ஹெட்லைட் வாஷர் கவர் இல்லை (யாராவது எடுத்து சென்றிருக்கலாம்). கார் அழுக்காக இருப்பதே தவிர்த்து, மற்றப்படி காரில் எந்த இடத்திலும் சேதங்களை காண முடியவில்லை. இவ்வளவு ஏன், காரில் துருப்பிடித்த பகுதிகளை கூட பார்க்க முடியவில்லை. இவ்வாறான விலையுயர்ந்த சொகுசு கார்களில் வழங்கப்படும் ஏர் சஸ்பென்ஷன் ஆனது பயன்படுத்தினாலும் சரி... பயன்படுத்தாவிடினும் சரி ஒரு கட்டத்திற்கு மேல் சேதமாகிவிடும்.

ஆனால், ஏர் சஸ்பெஷன் கூட இந்த காரில் நல்ல நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சாரதா குழுமத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுதிப்தா சென்னின் மகன் சுபோஜித் சென்னின் பெயரில் இந்த மெர்சிடிஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டில் சாரதா குழுமத்தின் மோசடிகளை விசாரித்த போது, போலீசாரால் இந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சுபோஜித் சென் தனது இந்த காரை அவரது நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தார். சுபோஜித் சென் தலைமறைவாகி இருந்த அந்த சமயத்தில், அவரது நண்பரது வீட்டிற்கு நேரடியாக சென்று போலீசார் இந்த மெர்சிடிஸ் காரை பறிமுதல் செய்தனர். மெர்சிடிஸின் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் காரான இதனை ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்திருந்தனர். 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த கார் இன்னும் ஏலத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாரதா குழுமத்தின் மோசடி வழக்கு விசாரணை எப்போதோ முடிந்துவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தக்க தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் வாங்கிய கார் இங்கு ஏதோ ஒரு கட்டடத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. இதற்கு பெயர் தான், தெய்வம் நின்று கொல்லும் என சொல்வார்கள்.
Image Courtesy: Car Crazy Calcutta


Click it and Unblock the Notifications









