அஜித் வாங்காத கார் எதுதான் மார்க்கெட்டில் இருக்கு! துபாயில் ஷோரூம் ஷோரூமா ஏறி இறங்குறாரு!
நடிகர் அஜித்தையும் (Actor Ajith) கார்களையும் பிரிக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே கார் பந்தயங்களில் ஈடுப்பாட்டுடன் உள்ள நடிகர் அஜித்குமார், சினிமாவில் தற்சமயம் உச்சத்தில் உள்ள போதிலும் தனக்கு பிடித்தமான கார் பந்தயங்களில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருவதை கடந்த சில வருடங்களாகவே பார்க்க முடிகிறது.
பைக் & கார் பயணங்கள் மீதான தனது ஆர்வத்தை சினிமாவிற்காக அடக்கி வைத்திருந்த அஜித் குமார் கடந்த 2018-19 சமயங்களில் இருந்து பைக் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார். விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW), டுகாட்டி (Ducati) பைக்குகளில் நடிகர் அஜித் இந்தியா முழுவதும் நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டதை பார்த்து இருந்தோம்.

விலையுயர்ந்த பைக்கில் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கூட அஜித் பைக் பயணங்களை மேற்கொண்டு இருந்தார். இதற்கிடையில் சினிமா திரைப்படங்களிலும் நடித்த அஜித்குமார், பைக் பயணங்களை தொடர்ந்து கார் பந்தயங்களில் ஈடுப்பட ஆரம்பித்தார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் துபாய், ஐரோப்பா என பல பகுதிகளில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் கார் பந்தயங்களில் நடிகர் அஜித் பங்கேற்றதை பார்த்துள்ளோம்.
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு கார் பந்தயங்களில் மீண்டும் ஈடுப்பட துவங்கியதை அடுத்து, விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களையும் அஜித் அதிகமாக வாங்குவதை பார்க்க முடிகிறது. துபாயில் கார் பந்தயத்தில் பங்கேற்ற சமயத்தில் அந்த நாட்டிலேயே போர்ஷே (Porsche) கார் ஒன்றை நடிகர் அஜித்குமார் வாங்கினார். அதன்பின்பும் மேலும் சில ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கிய அஜித் தற்போது அந்த வரிசையில் செவ்ரோலெட் (Chevrolet) நிறுவனத்தின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

அமெரிக்கன் கார் நிறுவனமான செவ்ரோலெட் உலகளவில் பல நாடுகளில் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் செவி எனப்படும் செவ்ரோலெட் கார்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. இருப்பினும், நம் இந்தியாவில் மட்டும் செவ்ரோலெட் நிறுவனத்தால் தனக்கான இடத்தை பெற முடியவில்லை.
இந்த நிறுவனம் உருவாக்கும் கார்கள் மிகவும் தாழ்வானதாக இருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம். தற்போது நடிகர் அஜித்குமார் வாங்கி இருக்கும் செவ்ரோலெட் கொர்வெட் சி8 இசட்06 (Corvette C8 Z06) காரும் நன்கு தாழ்வான உடலமைப்பை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். வழக்கமான கொர்வெட் சி8 காரை காட்டிலும் இசட்06 வெர்சன் ஆனது செயல்திறன்மிக்கது ஆகும்.

இந்த செவ்ரோலெட் காரையும் நடிகர் அஜித்குமார் துபாயில் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) ஒன்றிற்கு நேரில் சென்று டெலிவிரி பெற்றுள்ளதாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்ரோலெட் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்ட போது கொர்வெட் காரும் விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படும் சமயத்தில் கொர்வெட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.50 லட்சத்தில் இருந்தன.
ஆனால், தற்போது நடிகர் அஜித் எவ்வளவு விலையில் இந்த கொர்வெட் காரை துபாயில் வாங்கியுள்ளார் என பார்த்தால், 6 லட்சத்து 24,800 திர்கம் ஆகும். இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு ரூ.1.4 கோடி. உலகளவில் செவ்ரோலெட் கொர்வெட் சி8 இசட்06 கார் 2021ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. விற்பனையில் இந்த செவ்ரோலெட் காருக்கு போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3) போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதை காட்டிலும், அவற்றை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலை ஆகும். தற்போது கொர்வெட் காரை வாங்கி இருக்கும் நடிகர் அஜித்குமார் கூட இந்த காரை எவ்வாறு இந்திய சாலைகளில் ஓட்ட போகிறார் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









