இந்த காரியத்தை அஜித் இந்தியாவில் மட்டும் பண்ணி இருந்தாரு நடக்கறதே வேற!! டிடிஎஃப் வாசனுக்கு எல்லாம் குரு
தமிழ் திரைப்பட நட்சத்திரம் நடிகர் அஜித்குமார் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பைக் & கார்களை ஓட்டுவதிலும் ஆர்வமிக்கவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. விலையுயர்ந்த பைக்குகளில் நடிகர் அஜித் பயணம் செய்துள்ளதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது, ஆடி காரில் மணிக்கு 234கிமீ வேகத்தில் அஜித் நெடுஞ்சாலையில் பறந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எங்கு இந்த சம்பவம் நடந்தது? எந்த ஆடி காரை நடிகர் அஜித் ஓட்டினார்? என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தல தோனியை போன்று நடிகர் அஜித்குமாரும் குறிப்பாக, அதிவேகமான மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதை விரும்பக் கூடியவர். இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்துள்ள அஜித், ஐரோப்பாவிலும் பைக் டிராவல் செய்துள்ளார். பைக்குகளில் செல்வதுதான் இவருக்கு பிடித்தமானது என்றாலும், அவ்வப்போது கார்களையும் அதிவேகத்தில் ஓட்டிப்பார்த்து சந்தோஷப்படும் நபர் நடிகர் அஜித் ஆவார்.

சில மாதங்களுக்கு முன், படப்பிடிப்பிற்காக ஆக்ரோஷமாக கார் ஓட்டிய அஜித் விபத்தில் சிக்கிய சம்பவத்தை எல்லாரும் வீடியோவில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், ஆடி காரை நடிகர் அஜித் மணிக்கு 234கிமீ வேகத்தில் ஓட்டியுள்ளார். அப்போது காரின் உள்ளே இருந்து வேறொருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், அஜித் ஓட்டும் காரில் ஸ்டேரிங் சக்கரம் காருக்கு இடதுப்பக்கத்தில் உள்ளது. அதேபோல், வெளியில் எதிர்திசையில் செல்லும் லாரிகள் நம்ம ஊரில் இருப்பதை போன்று இல்லை. ஆதலால், நிச்சயமாக இது இந்தியாவில் கிடையாது; இடதுகை டிரைவிங் கொண்ட வெளிநாடுகளுள் ஒன்று. ஜெர்மனியின் ஆட்டோபான் பகுதியாக இருக்கலாம். ஏனெனில், இந்த பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் சில குறிப்பிட்ட தூரங்களுக்கு ஸ்பீடு லிமிட் கிடையாது.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச வேகம், மணிக்கு 120கிமீ மட்டுமே ஆகும். வீடியோவில், ஸ்டேரிங் சக்கரத்தில் உள்ள லோகோவை வைத்து இது ஆடி கார் என்பதை மட்டுமே கண்டுப்பிடிக்க முடிந்தது; ஆடியில் எந்த கார் என்பதை அறிய முடியவில்லை. வீடியோவின் துவக்கத்தில் மணிக்கு 204கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த அஜித் போக, போக வேகத்தை கூட்டி பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் குறைந்துக் கொண்டார்.
அவர் எட்டிய அதிகப்பட்ச வேகம், மணிக்கு 234கிமீ ஆகும். காரின் வேகத்தை காட்ட ஸ்பீடோமீட்டரை வீடியோவில் காட்டியுள்ளனர். வீடியோ முழுக்க அஜித்குமாரின் கவனம் முழுவதும் சாலையில் உள்ளது. இது ஒரு நல்ல கார் ரேசருக்கான அறிகுறி ஆகும். சினிமாவில் நடித்துக் கொண்டே 2023 ஃபார்முலா ஆசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்ஸ், 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்துக் கொண்டவர் ஆவார்.
புதுசு, புதுசாக பைக் & கார்களை வாங்குவதை அஜித்குமார் மிகவும் விரும்பக்கூடியவர். சமீபத்தில் கூட பவர்ஃபுல்லான ஃபெராரி எஸ்.எஃப்90 ஸ்ட்ராடேல் காரை வாங்கி இருந்தார். இது ஒரு பிளக்-இன் ஹைப்ரீட் சூப்பர் கார் ஆகும். இதில், 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 1000 பிஎஸ் வரையிலான பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஃபெராரி காரை துபாயில் நடிகர் அஜித்குமார் வாங்கினார்.
ஃபெராரி எஸ்.எஃப்90 ஸ்ட்ராடேல் கார் அம்பானி குடும்பத்திலும் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், நடிகர் அஜித்துக்கு விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் என்றால் தான் ஆர்வம் அதிகம். இவரிடம், பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் மற்றும் கவாஸாகி இசட்.எக்ஸ்-14ஆர் உள்ளிட்ட விலைமிக்க பவர்ஃபுல்லான பைக்குகள் உள்ளன. வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் என்கிற பெயரில் பைக் டூருக்கு வழிக்காட்டும் நிறுவனத்தை அஜித் சமீபத்தில் துவங்கினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் பண்பில் மிகவும் மென்மையானவர் என்பதை பலர் கூற கேட்டிருக்கிறோம். ஆனால், அத்தகைய மனிதர் தான் இவ்வாறான ஆக்ரோஷமான பயணங்களை அதிகமாக மேற்கொள்கிறார். ஆனால் இந்தியாவில் யார் சொன்னாலும் அஜித் இவ்வளவு வேகமாக கார் ஓட்ட மாட்டார். இதற்கிடையில், தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருவது நடிகர் அஜித்குமாரின் சிறப்பு ஆகும்.


Click it and Unblock the Notifications








