மீண்டும் கார் ரேஸிற்கு வரும் நடிகர் அஜித்! இவரு இவ்வளவு சாதனை பண்ணிருக்காரா?
நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள பிரபலமான கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே கார் ரேஸ் பந்தய வீரர்களாக இருக்கும் நிலையில், அதில் நடிகர் அஜித்குமாரும் இருக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் படம் வெளியாகும் நாட்கள் எல்லாம் தமிழகத்தில் திருவிழா போல, அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இப்படி பெயர் பெற்ற நடிகராக இருக்கும் இவர் கார் ரேஸ் பந்தயத்தில் அதிக ஆர்வமாக உள்ளவர்.

ஒரு பைக் மெக்கானிக்காக தனது பயணத்தை துவங்கியவர். பைக் பந்தயங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் பிறகு கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டினார். இவர் ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் கார் ரேஸ் தொடர்பாகவும் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதற்கு முன்னர் இவர் சர்வதேச அளவில் கூட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
நடிகர் அஜித்குமார் இதற்கு முன்னர் மும்பை, சென்னை டெல்லி ஆகிய பகுதிகளில் நடந்த ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பைக் பந்தயங்களில் தான் அதிகம் பங்கேற்றார். இருந்தாலும் கார் பந்தயங்களையும் விட்டு வைக்காமல் கார் பந்தயங்களிலும் அவ்வப்போது ஆர்வம் காட்டி வந்தார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் வெகு சிலரை இருக்கிறார்கள். அதில் நடிகர் அஜித் குமாரும் இருக்கிறார்.
இவர் ஜெர்மனி மலேசியா போன்ற வெளிநாடுகளில் நடந்த கார் பந்தயங்களிலும் பங்கேற்று உள்ளார். கடந்த 2003ம் ஆண்டு நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றார். இது மட்டுமல்லாமல் 2010ம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன் ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். அப்பொழுது இவருடன் ஹார்மன் இப்ராஹிம் மற்றும் பவித்ரா சுரேஷ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கடந்த 2002ம் ஆண்டு இவர் பார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இவர் நாலாவது இடத்தை பிடித்தார். இதன் பிறகு இவர் ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி இந்த போட்டியிலும் அவர் கலந்து கொண்டார். இதுதான் இவர் கலந்து கொண்ட சர்வதேச போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இவர் 12 வது இடத்தை பிடித்தார்.
முதல் முறையாக இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் வெற்றிகரமாக போட்டியை முடிப்பதை பெரிய விஷயமாக இருக்கும். பெரும்பாலான முதல் டிரைவர்கள் இந்த போட்டியில் முழுமையாக முடிக்காமல் வெளியேறி விடுவார்கள். ஆனால் அஜித்குமார் இந்த போட்டியில் 12வது ஆளாக முடித்து பலரை ஆச்சரியப்பட வைத்தார். இதை தொடர்ந்து இவர் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டத் துவங்கினார்.
ஆனால் அடுத்த ஆறு ஆண்டுகள் இவருக்கு கார் பந்தய உலகில் மிக மோசமான ஆண்டுகளாக இருந்தன. கடைசியாக 2010 எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டிக்காக நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரை வைத்து இயக்க வேண்டிய படமே தள்ளிப்போனது.
இந்த போட்டிக்கு முன்னதாக இவர் சென்னையில் நடந்த எம் ஆர்எஃப் ரேஸிங் சிரீஸில் கலந்து கொண்டார். ஆனால் இந்த போட்டியை அவரால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ரேஸ் நடக்கும் போது ஏற்பட்ட மெக்கானிக்கல் பிரச்சனை காரணமாக இந்த ரேஸை அவரால் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்றார். 2019 ஏப்ரல் மாதம் இந்த போட்டி நடந்தது. இதில் ரெனால்ட் விசிக்ஸ் காரை இவர் ஓட்டி சென்றார்.
இந்நிலையில் கடந்த 2019 கார் ரேஸ் பந்தயங்களில் எதுவும் பங்கேற்காமல் இருந்து வந்தார். ஆனால் வாகனங்கள் தொடர்பான பல்வேறு விதமான ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் கார்பந்தய போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு வருவதாக பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இவர் நடிகர் அஜித்குமார் 2025 ம் ஆண்டு ஜிடி ரேசிங் கேட்டகிரியில் பங்கேற்க திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலர் இதற்கான அப்டேட் குறித்துகாத்திருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் ரேஸ் என்பது தற்போது பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த கார் ரேஸ் பிறகு பலர் கார் ரேஸ் குறித்த ஆர்வமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் போன்ற பிரபலங்கள் கார் ரேஸ் ஸ்கூல் நுழைவதால் இளைஞர்களுக்கு கார் ரேஸ் மீதான ஈர்ப்பு அதிகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் கார் ரேஸ் மிக முக்கியமான விளையாட்டு போட்டியாக மாறுவதற்கு கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








