நடிகர் அஜித்குமாரை மயக்கிய வாகனம்... அடுத்த கணமே வாங்கி போட்டாச்சு! இந்தியாவுக்கு கொண்டு வருவாரா?
நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar), சினிமாவை தாண்டி சமீப காலமாக கார் பந்தயங்களிலும், பைக் பயணங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது. ஏனெனில், துபாயில் மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயங்களில் அஜித்குமாரின் குழுவினர் பதக்கங்களை வென்றதை நிறைய பேர் செய்திகளில் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அதுவும், கடந்த சில மாதங்களாக சூப்பர் கார்களை அடுத்தடுத்து நடிகர் அஜித்குமார் வாங்கி வருகிறார். அந்த வகையில், தற்போது மேலும் ஒரு விலையுயர்ந்த காரை அஜித்குமார் வாங்கியுள்ளார். இதற்கு முன்னர் அஜித் வாங்கியது எல்லாம் ஃபெராரி (Ferrari), போர்ஷே (Porsche) போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் (Sports Cars) ஆகவே இருந்த நிலையில், தற்போது அஜித் வாங்கியிருப்பது அவற்றில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட கார் ஆகும்.

நடிகர் அஜித்குமார் தற்போது டெலிவிரி (Delivery) பெற்று இருப்பது, பிராண்ட்-நியூ ஃபோர்டு எஃப்-150 ராப்டர் (Ford F-150 Raptor) என்கிற பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட, பவர்ஃபுல்லான அமெரிக்கன்-ஸ்டைல் பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனம் ஆகும். இதுதொடர்பான விபரங்கள் அஜித்குமாரின் ரசிகர் ஒருவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஃபோர்டு எஃப்-150 பிக்-அப் டிரக் வாகனம் விற்பனை செய்யப்படாததால், இந்த வாகனத்தை அஜித்குமார் இந்தியாவில் வாங்கவில்லை என்பது மட்டும் உறுதி. நடிகர் அஜித் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் பெரும்பாலானவற்றை துபாயில் தான் வாங்கியுள்ளதால், இந்த ஃபோர்டு எஃப்-150 பிக்-அப் டிரக்கையும் துபாயில்தான் வாங்கியிருப்பார் என எதிர்பார்க்கிறோம்.

பொதுவாகவே, அமெரிக்கர்கள் அவர்களது உருவத்திற்கு ஏற்ப பெரிய அளவிலான பிக்-அப் டிரக் வாகனங்களையே அதிகம் விரும்பக்கூடியவர்கள். அத்தகைய அமெரிக்கர்களிடம் கேட்டாலே ஃபோர்டு எஃப்-150 ஆனது அளவில் பெரியதான பிக்-அப் டிரக் வாகனம் என சொல்வார்கள். அந்த அளவிற்கு பெரிய அளவிலான பிக்-அப் டிரக்கை இளம் நீல நிறத்தில் நடிகர் அஜித்குமார் வாங்கி உள்ளார்.
இந்த ஃபோர்டு வாகனத்தின் சிறப்பம்சங்களை டீலர்ஷிப் ஷோரூமில் ஷோரூம் அதிகாரி ஒவ்வொன்றாக கூற, அதனை அஜித்குமார் பொறுமையாகவும், கவனமாகவும் கேட்டறிந்தார். மேலும், எஃப்-150 ராப்டர் வாகனத்தை பற்றிய தனது சந்தேகங்களையும் நடிகர் அஜித் கேட்டறிந்தார். நடிகரில் இருந்து, ஒரு முழு கார் ஆர்வலராகவே அஜித்குமார் மாறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஃபோர்டு எஃப்-150 ராப்டர் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது வழக்கமான ஃபோர்டு எஃப்-150 வாகனத்தை காட்டிலும் செயல்படுதிறன் மிக்கது ஆகும். மேலும், எஃப்-150 ராப்டர் வாகனம் பின்பக்கத்தில் பொருட்களை வைக்க பெரிய அளவிலான படுக்கை வசதியை கொண்டுள்ளது. அதேநேரம், கேபினுக்குள் ஐந்து பேர் வரையில் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
பொதுவாகவே, பிக்-அப் டிரக் வாகனங்கள் எந்தவொரு கரடு முரடான பாதைகளுக்கும் கொண்டு செல்லக் கூடியவை ஆகும். இந்த விஷயத்திலும் எஃப்-150 ராப்டர் ஆனது எவரொருவரையும் கவரக்கூடிய வாகனமாக உள்ளது. இந்த வாகனத்தில் ஃபோர்டு நிறுவனம் பொருத்தும் 5.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 720 பிஎஸ் மற்றும் 867 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமாவில் நடிப்பதுடன், கார் பந்தயங்களில் ஈடுப்பவதற்கு இடையில் அவ்வப்போது நடிகர் அஜித்குமார் தொலைத்தூர பயணங்களையும் மேற்கொள்கிறார். இதனால் ஃபோர்டு எஃப்-150 ராப்டர் போன்ற பிக்-அப் டிரக் வாகனம் அஜித்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், புதியதாக இந்த வாகனத்தை அஜித் இந்தியாவிற்கு கொண்டுவர போகிறாரா? என்பதுதான் தற்போதைக்கு கேள்வியே.


Click it and Unblock the Notifications









