நடிகர் அஜித் ஓட்டி பார்த்த ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியது இவரா? தேசிய கொடி உடனான ஆடையில் த்ரில்லிங்கான பயணம்!
நடிகர் அஜித் குமார் (Actor Ajithkumar) ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ளார். வெள்ளித்திரையில் இருந்து ரேஸ் களத்திற்கு மாறிய அஜித்குமாருக்கு இந்த ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங் வேகம் மற்றும் வளைவுகள் உடன் திரில்லிங்கான அனுபவத்தை அள்ளித் தந்துள்ளது.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அஜித்தின் இந்த சாகசத்தை "சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன்" என்று ட்விட்டரில் புகழ்ந்துள்ளார். அஜித்தின் இந்த டெஸ்ட் டிரைவ் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல. அது அதிநவீன ஸ்போர்ட்ஸ் கார் உலகின் ஒரு புதிய தயாரிப்பை ரசிகர்களுக்குக் காட்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பாராட்டு, இந்த சம்பவத்திற்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்த்துள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அஜித்தின் ஆற்றல், அவரது வயதிற்கு அப்பாற்பட்ட இளமை, வேகம், ஆர்வம், கிளாஸ் ஆகியவற்றை இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர். சிலர் அவரை ஃபார்முலா 1 (Formula 1) பந்தயத்தில் பங்கேற்கக் கூட கிண்டலாகக் கோரியுள்ளனர்.
திரையில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் அஜித் குமார் ஒரு பந்தய வீரர் ஆவார். கடந்த பல ஆண்டுகளாக, சென்னை, மும்பை, டெல்லி போன்ற இந்திய நகரங்களில் நடைபெற்ற பந்தயங்களில் அவர் பங்கேற்றுள்ளார். மேலும் சர்வதேச பந்தயப் போட்டிகளிலும், FIA சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

அஜித்குமாரின் பந்தய வாழ்க்கை ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளிலும் தொடர்ந்தது. நடிகர் அஜித் சமீப காலமாக தான் இவ்வாறான பந்தயங்களில் ஈடுப்படுகிறார் என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், 2003ஆம் ஆண்டிலேயே ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் மற்றும் 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சக இந்திய வீரர்களான அர்மான் இப்ராஹிம் மற்றும் பார்த்திவா சுரேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றார்.
இந்தியா டுடே (India Today)-க்கு நடிகர் அஜித்குமார் சமீபத்தில் அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது மோட்டார்ஸ்போர்ட் மீதான ஆர்வம் எப்படி ரசிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது என்று பகிர்ந்து கொண்டார். பார்சிலோனா, துபாய், ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் மற்றும் நர்பர்க்ரிங் போன்ற இடங்களில் நடைபெறும் பந்தயங்களுக்கு அவருடன் வரும் பெருந்திரளான ரசிகர் பட்டாளத்தைப் பற்றியும் பேசினார்.

மேலும், 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் லோகோவை தனது ரேஸ் காரில் இடம்பெறச் செய்து இந்திய சினிமாவை மேம்படுத்தும் திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தினார். மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்கள் இந்தியத் திரைப்படங்களைக் கண்டறிவதாகவும், இந்திய ரசிகர்கள் மோட்டார்ஸ்போர்ட்ஸைப் பின்பற்றுவதாகவும், இது ஒரு சிறந்த வெற்றி-வெற்றி சூழ்நிலை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், சென்னையில் நடத்தப்பட்ட முதல் தெரு இரவுப் பந்தயம் போன்ற தமிழ்நாட்டு அரசு வளர்ச்சி ஆணையத்தின் மோட்டார்ஸ்போர்ட் முயற்சிகளுக்கான தனது ஆதரவுகளையும் அஜித்குமார் தனது இந்த நேர்காணலில் குறிப்பிட்டார். மறுப்பக்கம், மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரையில் இது 2014ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இடையேயான பந்தயத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அவ்வாறான பந்தயங்களில் பயன்படுத்துவதற்கான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை ஃபார்முலா இ பிளாட்ஃபாரத்தில் இருந்து மஹிந்திரா உருவாக்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சினிமா ஸ்டார் (Cinema Star) மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 போன்ற நவீன சூப்பர்காரை எளிதாகக் கையாண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இது, ஸ்போர்ட்ஸ் கார்களை இயக்குவதில் நடிகர் அஜித்தின் திறன்களையும் வெளிக்காட்டுகிறது. இதனால், அஜித்குமாரின் அடுத்த சாகசத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









