குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்துனது அவரா! யார் என்னனு பாக்காம நடு ராத்திரியில் ஆளை தூக்கிய போலீஸ்!
உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) அதிக உயிரிழப்புகளை சந்தித்து கொண்டுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. இதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது (Drunk Driving) மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு சில சமயங்களில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் மனிதர்களும், குடிபோதையில் வாகனம் ஓட்டி சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றனர். இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி, சாலை விபத்தை ஏற்படுத்திய புகாரில் காவல் துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் நேற்று இரவு (அக்டோபர் 13) சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. கார் ஒன்று டூவீலர் மீது மோதிய காரணத்தால், இந்த சாலை விபத்து நிகழ்ந்தது. சாலை விபத்திற்கு காரணமான கார், டூவீலர் மீது மட்டும் மோதவில்லை. கூடவே அங்கிருந்த மின் கம்பம் மீதும் மோதியது.

இதன் காரணமாக இயக்க முடியாத அளவிற்கு கார் பழுதானது. இந்த சாலை விபத்து குறித்த தகவலை கேள்விபட்டதும், காவல் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை விபத்திற்கு காரணமான காரை ஓட்டியது பைஜூ சந்தோஷ் (Baiju Santhosh) என தெரியவந்தது.
இவர் கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர் ஆவார். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எனவே மலையாள திரையுலகை கடந்து, மற்ற மொழி திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பைஜூ சந்தோஷ் மிகவும் பிரபலமான ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.

சம்பவம் நிகழ்ந்தபோது பைஜூ சந்தோஷ் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். இதன் காரணமாகவே சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டூவீலரில் பயணம் செய்த நபருக்கு, பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சாலை விபத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக பைஜூ சந்தோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அபாயகரமான முறையில் கார் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சரியாக நள்ளிரவு 12.30 மணியளவில் நடிகர் பைஜூ சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குடிபோதையில் அவர் ஓட்டி வந்த காரும், காவல் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்தால் மட்டுமே, இது போன்ற சாலை விபத்துக்கள் நிகழாமல் இருக்கும். ஒருவேளை மது அருந்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டால், மது அருந்தாத நண்பர்களை காரை இயக்க சொல்லலாம். அல்லது ஓலா (Ola), உபேர் (Uber) போன்ற டாக்ஸிகளை பயன்படுத்தி வீட்டிற்கு செல்லலாம்.
இந்த வழிமுறையை பின்பற்றினாலே, சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை ஓரளவிற்கு குறைக்க முடியும். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் அனைத்து சமயங்களிலும் நேரம் சாதகமாக இருக்காது என்பதை நினைவில் கொண்டு, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








