விலையுயர்ந்த பென்ஸ் காரை யூஸ்டு-கார் மார்க்கெட்டில் வாங்கியது இந்த பிரபல நடிகரா? புதுசாவே வாங்கியிருக்கலாமே!
விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ லக்சரி எஸ்யூவி காரை புதியதாக இல்லாமல், பயன்படுத்தப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். யார் அந்த பாலிவுட் நடிகர்? பழையதாக இருந்தாலும் பரவாயில்லை என அவர் வாங்கியுள்ள இந்த பென்ஸ் காரில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர்களையும் விலையுயர்ந்த கார்களையும் பிரிக்க முடியாது என கூறலாம். நம் தமிழ் நடிகர், நடிகைகளும் சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்கள் என்றாலும், பாலிவுட் நடிகர்கள் அளவிற்கு கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இந்தி சினிமா திரையுலகம் பெரியது என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனாலேயே, பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் புதியதாக கார் வாங்கியது குறித்த செய்திகளை மாதத்திற்கு குறைந்தது ஒன்றையாவது பார்த்து விடலாம். இந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி (Boman Irani) விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ லக்சரி காரை வாங்கியுள்ளார். ஆனால் பொமன் இரானி வாங்கி இருப்பது புதிய கார் கிடையாது, ப்ரீ-ஓவ்ண்டு கார் ஆகும். அதாவது, இந்த காரை வேறு யாரோ ஒருவர் இதற்கு முன்னர் பயன்படுத்தினார் என்பது அர்த்தம் ஆகும்.
முந்தைய உரிமையாளர் காரை ஒரு காலம் வரையில் பயன்படுத்தி, பின்னர் அதனை ஓர் ப்ரீ-ஓவ்ண்டு ஷோரூம் வாயிலாக நடிகர் பொமன் இரானிக்கு விற்றுள்ளார். இதில், இடையில் தரகர் வேலை பார்த்த ப்ரீ-ஓவ்ண்டு ஷோரூம், ஆட்டோ ஹங்கர் அட்வாண்டேஜ் என்ற ஷோரூம் ஆகும். நடிகர் பொமன் இரானி தனது ப்ரீ-ஓவ்ண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ லக்சரி காரை தங்களது ஷோரூமுக்கு குடும்பத்துடன் வந்து டெலிவிரி எடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஆட்டோ ஹங்கர் அட்வாண்டேஜ் வெளியிட்டுள்ளது.
ப்ரீ-ஓவ்ண்டு காராக இருப்பினும், கேக் கட் செய்து பொமன் இரானி குடும்பத்தினர் கொண்டாட்டத்துடன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இந்த காரை முன்பு பயன்படுத்திய உரிமையாளர் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. ஆட்டோ ஹங்கர் அட்வாண்டேஜ் ஷோரூம் வெளியிட்டுள்ள படங்களின் மூலம் பார்க்கும்போது, கார் அவ்வளவு பழையதாக தெரியவில்லை.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விற்பனையில் இருக்கும் தற்போதைய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் போன்று இந்த ப்ரீ-ஓவ்ண்டு கார் புத்துணர்ச்சியானதாகவே காட்சியளிக்கிறது. மெர்சிடிஸின் இந்த லக்சரி எஸ்யூவி காரை தற்சமயம் புதியதாக வாங்க போனால், விலை எப்படி இருந்தாலும் ரூ.1 கோடி என்ற அளவில் இருக்கும். நடிகர் பொமன் இரானி எவ்வளவு விலை கொடுத்து இந்த காரை வாங்கினார் என்பது குறித்த விபரங்கள் இல்லை.
இந்தியாவில் தற்சமயம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார்கள் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் விலை குறைவான ஜி.எல்.இ 300டி வேரியண்ட்டில் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் மூலமாக அதிகப்பட்சமாக 245 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும்.

அடுத்த நிலை வேரியண்ட்டான ஜிஎல்இ 400டி -இல் பொருத்தப்படும் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 325 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. விலைமிக்க உயர் நிலை வேரியண்ட்டான ஜிஎல்இ 450மேட்டிக் ஓர் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இதில் பொருத்தப்படுகின்ற பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 365 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த 3 வேரியண்ட்களில் எந்த வேரியண்ட்டை பொமன் இரானி வாங்கியுள்ளார் என்பதும் தெரியவில்லை. இந்த 3 வேரியண்ட்களிலும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே ஒரே தேர்வாக வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த மெர்சிடிஸ் லக்சரி எஸ்யூவி காரில் 4மேட்டிக் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம், காற்று சஸ்பென்ஷன், மல்டி பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், பனோராமிக் சன்ரூஃப் உள்பட ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ப்ரீ-ஓவ்ண்டு கார்களை ஒரு காலத்தில் நம் இந்தியாவில் குறைவானவர்களே வாங்கினார். ஆனால், தற்போதைய காலத்தில் விராட் கோலியில் இருந்து ஷில்பா ஷெட்டி வரையில் பிரபலங்கள் பலர் ப்ரீ-ஓவ்ண்டு காரை வாங்கியுள்ளனர். இந்த வரிசையில் புதியதாக பாலிவுட் நடிகர் பொமன் இரானி இணைந்துள்ளார். லக்சரி கார்களை பிரபலங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக வாங்குவதற்கு காரணமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








