கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகரா இப்படி செய்தார்? அப்பா- மகனின் கார்கள் மட்டுமே பல கோடி ரூபாய் இருக்கும்!
மலையாள நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) சொகுசு கார் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். இவரது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் (Toyota Land Cruiser Car) வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டதை அடுத்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவர் மீது பாய்ந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் "நும்கோர்" (Numkoor) என்ற தேசிய அளவிலான நடவடிக்கையின் கீழ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கேரளாவை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியிருக்கும் பல பிரபலங்களில் நடிகர் துல்கர் சல்மானும் ஒருவர்.

கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 இடங்களில், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜின் வீடுகள் உட்பட பல இடங்களில் நேற்று உயர் மட்ட சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு ஒரு தேசிய அளவிலான பாதுகாப்பு பிரச்சினை என்பதால், தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற மத்திய அரசு சார்ந்த பிற நிறுவனங்களும் இந்த விசாரணையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மானிடம் இருந்து விளக்கம் பெற சுங்கத்துறை சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமலாக்க இயக்குநரகம் (ED) இந்த வழக்கை விசாரிக்கும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ED வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இந்த வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை வட்டத்திற்குள் நடிகர் துல்கர் சல்மான் உள்பட பிற மலையாள சினிமா துறையினரும் உட்பட்டுள்ளனர்.
மற்றொரு மலையாள நடிகர் அமித் சக்கலக்கலின் லேண்ட் ரோவர் (Land Rover) கார் உட்பட மொத்தம் ஏழு வாகனங்களை சுங்கவரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அமித் சக்கலக்கல் முகவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் எட்டு வகையான சொகுசு வாகனங்கள் வரியின்றி கொண்டு வரப்பட்டது இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்கள் முதலில் இமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பதிவு எண்களை மாற்றி நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கார் ஷோரூம்களில் தனித்தனியாக சோதனைகள் நடத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட ஷோரூம்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் என இரு தரப்பினரையும் அடையாளம் காண்பது இந்த சோதனையின் இலக்காக கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சொகுசு வாகனங்கள் பெரும்பாலும் சட்டவிரோத வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் இடம்பெறுகின்றன. ஏனெனில், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் விலையுயர்ந்த வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கும், அவற்றை இங்குள்ள ஆர்டிஓ-இல் பதிவு செய்வதற்கும் பணக்காரர்களால் கொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், அவ்வாறான சொகுசு கார்களை வாங்கும் செல்வந்தர்களுள் சிலர் அந்த வரிகளை தவிர்க்க சட்ட விரோதமான செயல்களில் ஈடுப்படுகின்றனர்.
இந்த செயல்களை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட 'நும்கோர்' நடவடிக்கையின்படி வாகனங்களின் ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட முறைகள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வழிகள் என பல கட்டங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்தி உண்மை தன்மையை ஆராய்கின்றனர். பூட்டான் ராணுவத்தால் கைவிடப்பட்ட 150-க்கும் மேற்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக கடத்தி கேரளாவில் விற்ற ஒரு கும்பலை கண்டுபிடிக்க கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் கீழ் கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 7 இடங்களில் இருந்து 11 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் ஒரு பகுதியாக, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 4 ஷோரூம்கள் மற்றும் 3 தனியார் வீடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

துல்கர் சல்மானின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவரிடம் வேறு ஏதேனும் வாகனங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் போது, பூட்டானிலிருந்து சட்டவிரோதமாக கார்களை கடத்தி விற்றவர்களின் பட்டியல் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தமிழ்நாட்டின் கரூர் விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் லேண்ட் க்ரூஸர்கள், லேண்ட் ரோவர்கள், டாடா எஸ்யூவிகள் (Tata SUVs) மற்றும் மஹிந்திரா- டாடா லாரிகள் (Mahindra- Tata Lorry) ஆகியவை அடங்குகின்றன.
இவை பூட்டான் ராணுவத்தால் கைவிடப்பட்டவை. இமாச்சலப் பிரதேசத்தில் 'HP-52' பதிவு எண்களில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, நான்கு மடங்கு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பின்னர் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட பல வாகனங்கள் 'KL' எண்களில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'நும்கோர்' நடவடிக்கை குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து சுங்கத்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் அமித் சக்கலக்கல் போன்றோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் சமூக வலைத்தளங்களிலும் கவனத்தை ஈர்த்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 40 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்ட இந்த சொகுசு கார்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Source: The Times of India


Click it and Unblock the Notifications









