சினிமாவில் யாரை பார்த்தாலும் இந்த பென்ஸ் கார் வைத்துள்ளனர்! அந்த பிரபல நடிகையின் மகனா இவர்?
பாலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை வாங்குவது ஒரு புதிய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது புதிய மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் வலம் வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே, ஏராளமான பிரபலங்கள் இந்த ஆடம்பரமான காரை விரும்பி வாங்கி வருவதன் காரணம், இந்த காரின் செயல்பாடு, கவர்ச்சி, சாலையில் இயங்கும் அழகு, உட்புற வடிவமைப்பு மற்றும் மெர்சிடிஸ் பிராண்ட் இமேஜ் என அனைத்திலும் சிறந்து விளங்குவதினால் ஆகும். நடிகர் ஃபர்ஹான் அக்தர், இத்தகைய உயர்ரக சொகுசு கார்கள் மீது பெரும் விருப்பம் கொண்டவர்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஃபர்ஹான் ஒரு திறமையான திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பாடகரும் ஆவார். மேலும், இவர் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் ஜாவேத் அக்தரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபர்ஹான் அக்தரின் தாயார் ஹனி இரானியும் பழமையான பாலிவுட் நடிகை ஆவார்.
இவ்வாறு, சினிமா நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்த வந்த ஃபர்ஹான் அக்தர் தனது புதிய மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் மனைவி ஷிபானி தண்டேகர் உடன் ஒரு பொது இடத்தில் காட்சியளித்து உள்ளார். மும்பையில் இருவரும் தங்களது பிரம்மாண்டமான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் இருந்து இறங்கி, புகைப்படக்காரர்களை சந்தித்தனர்.

பின்னர், அவர்கள் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ஒரு கட்டிடத்திற்குள் சென்றனர். இது தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வு போல தோன்றியது. மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆடம்பர எஸ்யூவி காரில், 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.
48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைத்து வழங்கப்படும் இந்த பை-டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 557 குதிரைத்திறன் மற்றும் 730 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம், மெர்சிடிஸின் 4MATIC சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை இந்த என்ஜின் அனுப்புகிறது.

சக்திவாய்ந்த என்ஜின் + எலெக்ட்ரிக் மோட்டார் கலவையால், பிரம்மாண்டமான எஸ்யூவி காராக இருப்பினும் இதில் வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்ட முடிகிறது. தற்போது, மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.17 கோடியில் இருந்து ரூ.3.71 கோடி வரையில் உள்ளன.
இத்தகைய மெர்சிடிஸ் காருடன் நடிகர் ஃபர்ஹான் அக்தர் கலந்துக் கொண்ட இதே தீபாவளி நிகழ்ச்சியில், இவரது சகோதரியும், பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான சோயா அக்தர் பி.எம்.டபிள்யூ எக்ஸ்3 காரில் வந்திறங்கினார். இந்த ஜெர்மன் எஸ்யூவி கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டதாகும்.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 190 குதிரைத்திறன் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை காருக்கு வழங்கக் கூடியதாக உள்ளது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் BMW நிறுவனத்தின் எக்ஸ்-டிரைவ் சிஸ்டம் வழியாக என்ஜினின் இயக்க ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா பிரபலங்கள் புதிய சொகுசு கார்களுடன் வலம் வருவதைக் காண்பது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான விஷயமாகவே உள்ளது. குறிப்பாக, இவ்வாறான வீடியோக்கள் மற்றும் படங்களை அதிகமாக மும்பையில் பார்க்க முடியும். அவ்வாறு தற்போது வெளியாகியுள்ள படங்களில் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது புதிய மெர்சிடிஸ் காரில் காட்சி தந்துள்ள நிலையில், வரும் நாட்களில் பொது வெளியில் இந்த காரில் அதிகமாக காட்சி தருவார் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









