10 வருட உழைப்புக்கான பரிசு... புதுசா வாங்கிய ஆடி காருக்கு முன் போஸ் கொடுக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
ஆடி (Audi) கார்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இந்தியாவிலும் மெர்சிடிஸ் (Mercedes), பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஆடி விளங்குகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பிரபலமான சொகுசு கார் ஒன்றை நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள விலையுயர்ந்த ஆடி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்டோமொபைல் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். முன்னர் எல்லாம் பைக் & கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்து பயன்படுத்துவதை கேரளாவில் அதிகமாக பார்த்திருக்கிறோம். சமீப காலமாக தான் போலீசாரின் நடவடிக்கைகளினால் அவ்வாறான மாடிஃபிகேஷன்கள் குறைந்துள்ளன.

இருப்பினும், கேரளாவில் உள்ள பணக்காரர்கள் அவ்வப்போது தங்களது விலையுயர்ந்த கார்களை மாற்றிக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுபவமிக்க மற்றும் கேரள மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஒருவர் விலையுயர்ந்த ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவரது பெயர், லக்மேன் அவாரன் (Lukman Avaran). இந்த பெயரை நம் தமிழ் மக்களில் நிறைய பேர் கேள்விப்படாமல் இருக்கலாம், ஆனால் இவரது முகத்தை நிறைய மலையாள திரைப்படங்களில் பார்த்த ஞாபகம் இருக்கும். முதன்முதலாக 2013ஆம் ஆண்டில் 'தாயோம் பந்த்ராந்தம்' என்கிற திரைப்படம் லக்மேன் அவாரனின் நடிப்பில் வெளிவந்தது.

இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த லக்மேனுக்கு அதன்பின் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் முதன்முதலாக 'ஆப்ரேஷன் ஜாவா' என்கிற படத்தில் முக்கிய ஹீரோ கதாபாத்திரத்தில் லக்மேன் அவாரன் நடித்தார். இருப்பினும், இப்போதுவரையில் மலையாள சினிமாவை தாண்டி இவரால் வெளியே வர முடியவில்லை.
அடுத்ததாக இவரது நடிப்பில் 'ஆலப்புழா ஜிம்கானா' உள்பட இரு திரைப்படங்கள் திரைக்குவர உள்ள நிலையில், லக்மேன் அவாரன் புதியதாக ஆடி க்யூ5 (Q5) காரை வாங்கி உள்ளார். புதியதாக வாங்கிய காருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆடி க்யூ5 காரை இவர் அடர் பச்சை நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த பச்சை நிறத்தை ஆடி நிறுவனம் 'ட்ரிஸ்டிரிக்ட் க்ரீன் மெட்டாலிக்' என அழைக்கிறது. இது இல்லாமல், நவர்ரா ப்ளூ மெட்டாலிக், கிளாசியர் வெள்ளை, மைதோஸ் பிளாக் மெட்டாலிக், மன்ஹட்டான் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் ஆடி க்யூ5 கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி காரை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக உள்ளது. ஆனால், அந்த கனவை எல்லாம் லக்மேன் அவாரன் போன்றோர் எளிதாக நிஜமாக்கி வருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மலையாள சினிமாவில் லக்மேன் அவாரன் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் வெளிப்பாடே இந்த ஆடி கார் ஆகும்.


Click it and Unblock the Notifications









