சென்னை மவுண்ட் ரோட்டில் சீறி பாயவுள்ள கார்கள்... இந்த நடிகரை நேரில் பார்க்கலாம் - டிக்கெட்டை எப்படி பெறுவது?
நம் சென்னையில் பலத்த எதிர்பார்ப்புக்கும், விவாதங்களுக்கும் மத்தியில் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் இரவில் தெரு சாலைகளில் ஃபார்முலா 4 பந்தயம் நடத்தப்பட உள்ளது. இந்தியன் ரேசிங் லீக்கின் ஒரு பகுதியாக சென்னையில் இந்த பந்தயம் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 6 அணிகள் இந்த பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளன. இந்த நிலையில், இதில் ஒரு அணியை பிரபல நடிகர் ஒருவர் தலைமை தாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியன் ரேசிங் லீக் 2024 பந்தயங்கள் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை சர்வதேச ரேஸ் டிராக்கில் துவங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் இந்தியன் ரேசிங் லீக் 2024 பந்தய தொடரின் 2வது சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதலாவது சுற்று பந்தயங்களை காட்டிலும் 2வது சுற்று பந்தயங்களை காணவே நிறைய பேர் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஏனெனில், 2வது சுற்று போட்டிகள் சென்னையின் முக்கியமான மவுண்ட் ரோடு உள்ளிட்ட சாலைகளில் நடத்தப்பட உள்ளன. ஆனால், சென்னை சாலைகள் ஃபார்முலா 4 ரேஸ் நடத்தும் அளவிற்கு தரமானது இல்லை என்றும், ஆதலால் இந்த பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்களும் ஒருபக்கம் கிளம்பியுள்ளன. இருப்பினும், பலத்த விவாதங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் சென்னையின் தெருக்களில் ஃபார்முலா 4 கார் பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன.
சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் நடத்தப்பட்டாலும், பொது மக்களின் வாகன போக்குவரத்தை பாதிக்காத வகையில் இரவு நேரத்தில் இந்த பந்தயத்தை நடத்த சென்னை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த ஃபார்முலா-4 பந்தயங்களில் சென்னை டர்போ ரைடர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர்ஸ், கொல்கத்தா ராயல் டைகர்ஸ், ஸ்பீடு டெமோன்ஸ் டெல்லி, கோவா ஏஸஸ் ஜேஏ ரேசிங் என மொத்தம் 6 அணிகள் கலந்துக் கொள்ள உள்ளன.

இதில், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியை பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தலைமை தாங்க உள்ளார். இது, ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணிக்கு மட்டுமின்றி, இந்தியன் ரேசிங் லீக் 2024 தொடருக்கும் பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. முன்னணி தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவுக்கு சமீபத்தில் நடிகை சோபிதா உடன் 2வது திருமணம் நடைபெற்றது.
ஃபார்முலா 1 கார் பந்தய பிரியரான நாக சைதன்யா அதிவேகமான சூப்பர் கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர் ஆவார். இந்திய ரேசிங் லீக்கில் ஹைதராபாத் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து நடிகர் நாக சைதன்யா கூறுகையில், "நான் சிறுவயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலராக இருக்கிறேன்.

ஃபார்முலா 1இன் அதிவேக சுவாரஸ்யம் முதல் சூப்பர் கார்கள் மற்றும் பைக்குகளை ஓட்டுவதில் உள்ள சுவாரஸ்யம் வரை அனைத்தின் மீதும் அதிக அன்பு கொண்டவன். இந்திய ரேசிங் லீக் ஒரு போட்டி என்பதை விட அதிகம். இது இந்த சீசனில் ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியை முன்னின்று நடத்துவதற்கான சரியான தருணம். அடுத்த தலைமுறை பந்தய திறமைகளை ஊக்குவிக்க இந்த மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை போன்று, பாலிவுட் நடிகர்கள் அர்ஜூன் கபூர், ஜான் ஆபிரகாம் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்டோரும் இந்திய ரேசிங் லீக் 2024 அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். பிரபல இந்தியா ஃபார்முலா கார் ரேசர்கள் அகில் ராபிந்திரா, நிகில் போஹ்ரா போன்றோரும், சுவிட்சர்லாந்து நாட்டின் ரேசர் நீல் ஜானி போன்ற வெளிநாட்டு ஃபார்முலா ரேசர்களும் இந்த பந்தயங்களில் கலந்துக் கொள்ள உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரேசிங் லீக் 3 வருடங்களுக்கு முன்னர் தான் துவங்கப்பட்டது. இதனால், பைக் ரேசர்களை தாண்டி இந்த ஃபார்முலா பந்தயம் பொது மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஆதலால், இந்த பந்தய தொடரை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டுமெனில், நடிகர் நாக சைதன்யா போன்றவர்களின் முகம் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications









