நடிகர் பிரசாந்த் பிறந்தநாளுக்கு ரூ1.63 கோடிக்கு கார் வாங்கி பரிசளித்த தந்தை! என்ன கார் தெரியுமா?
நடிகர் பிரசாந்தின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன் மகனுக்காக ரூபாய் 1.60 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்த பிரசாந்த், தற்போது வாங்கியுள்ள இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருத்தராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். வருங்காலங்களில் ரஜினி,கமலுக்கு இணையாக மிகப்பெரிய ஆளுமையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக மார்க்கெட்டை இழந்தார். அதன் பின்பு மார்க்கெட்டை பிடிக்க அவர் எவ்வளவு முயற்சி செய்து முடியவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் கோட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 6ம் தேதி இவரது 51 வது பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்தநாளுக்கு இவரது தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் மகனுக்காக ரூபாய் 1.60 கோடி மதிப்பிலான கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
அவர் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின்படி ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் வாசலில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அதன் உள்ளே இருந்து நடிகர் பிரசாந்தை அவரது தந்தை அழைத்து வருகிறார். வெளியே வெள்ளை நிறத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 எக்ஸ்டிரைவ் 40ஐ எம்ஸ்போர்ட் என்ற கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் அருகே வந்த தியாகராஜன் மற்றும் பிரசாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென நடிகர் பிரஷாந்தின் தந்தை தனது பையில் இருந்து இந்த காரின் சாவியை எடுத்து பிறந்தநாள் பரிசாக இந்த காரை தனது மகனுக்கு பரிசளித்தார். இந்த சாவியை வாங்கிய நடிகர் பிரசாந்த் தனது தந்தை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
தனது 51 வயது குழந்தைக்கு ரூபாய் 1.60 கோடி செலவில் தியாகராஜன் வாங்கிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ் 7 எக்ஸ்டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் கார் ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ் காராக இருக்கிறது. இந்த கார் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டு இந்த கார் இயங்கும்.

இந்த கார் மொத்தம் 4 விதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. டான்ஸனைட் ப்ளூ மெட்டாலிக், கார்பன் பிளாக் மெட்டாலிக், டிராவிட் கிரே மெட்டாலிக் மற்றும் மினரல் ஒயிட் மெட்டாலிக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. நடிகர் பிரசாந்துக்கு பரிசளிக்கப்பட்ட கார் மினரல் ஒயிட் மெட்டாலிக் நிறக்கார் ஆகும்.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2,998 சிசி சிலிண்டர் ஆன்லைன் 4 வால்வு மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 375 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 11.29 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரை ஒரு தடவை முழுவதுமாக பெட்ரோல் நிரப்பினால் 937 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இது ஒரு ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரில் 8கியர் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸை கண்ட்ரோல் செய்ய பெடல் ஸ்ஷிஃப்டர் ஆப்ஷன் இருக்கிறது. முக்கியமாக இது ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார் என்பதால் ஸ்போர்ட்ஸ் மோட் இந்த காரில் முக்கியமான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 1.30 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இந்த காரை பதிவு செய்து வாங்க வேண்டும் என்றால் ரூ1.63 கோடி செலவு செய்துதான் இந்த காரை புதிதாக வாங்க முடியும். இப்படியாகத்தான் தனது மகன் பிரசாந்துக்கு தந்தை தியாகராஜன் இந்த காரை வாங்கி பரிசளித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா பிரபலங்கள் எல்லாம் காஸ்ட்லியான காரை வாங்கி பயன்படுத்தி வருவது சாதாரண விஷயம் தான். அப்படியாக நடிகர் பிரசாந்தும் தற்போது ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான விலை உள்ள காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த கார் தற்போது வெளியே பிரசாந்த் வாங்கிய கார் என்று மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









