பேருந்து டிப்போவில் நடிகர் ரஜினிகாந்த்!! எந்த டிப்போ என்று தெரிகிறதா? ஆமாங்க அதே இடம் தான்!! பெங்களூர் விசிட்
தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் நுழைவதற்கு முன்னர் பெங்களூரில் அவர் நடத்துனராக பணியாற்றிய பேருந்து டிப்போவிற்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில் திடீரென வருகை தந்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வைரலாகி வரும் படங்களையும், வீடியோக்களையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
"சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால், சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே நன்கு பரீட்சையமான நபர் நடிகர் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு மிக நீண்ட வருடங்களாக, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனுபவம் வாய்ந்தவர். இதுமட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இன்று சென்னை, போயஸ் கார்டனில் ராஜா போல் வாழ்ந்தாலும், சினிமா துறையில் நுழைவதற்கு முன் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ஜெயாநகர் பகுதியில் பேருந்து நடத்துனராக ரஜினிகாந்த் பணியாற்றி வந்தது நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நடத்துனராக பணியாற்றிய சமயத்தில், ரஜினிகாந்த் பேருந்துக்குள் ஏறி, இறங்கும் ஸ்டைலை பார்த்தும், விசிலடிக்கும் அழகை பார்த்தும் தான் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்ததாக கூறுவர்.
இவ்வாறு, தனது தற்போதைய உச்சப்பட்ச நிலைக்கு அடித்தளமாக விளங்கிய பெங்களூர், ஜெயாநகர் BMTC பேருந்து டிப்போவிற்கு நடிகர் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 29) முற்பகல் 11.30 மணியளவில் ஜெயாநகர் டிப்போவிற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்த பேருந்து டிப்போ ஊழியர்கள் மற்றும் பொது மக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு 11.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

அதாவது, வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அங்கு நேரத்தை செலவழித்தாலும், நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அதற்குள்ளாக ஜெயாநகர் டிப்போவில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனை அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வந்தவர்கள் கூட்டத்தை கலைப்பார்கள் என்று பார்த்தால், முதலாவதாக நடிகர் ரஜினிகாந்த் உடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, பின்னரே கூட்டத்தை கலைந்து செல்ல வற்புறுத்தியுள்ளனர்.
அந்த அளவிற்கு, போலீஸார் உள்பட மொத்தம் ஜெயாநகர் பேருந்து டிப்போவையும் தனியொரு ஆளாக நடிகர் ரஜினிகாந்த் அந்த 15 நிமிடங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த திடீர் வருகைக்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் எளிமையை விரும்பக்கூடியவர் மற்றும் கடந்த காலங்களை எப்போதும் மனதில் வைத்திருப்பவர் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

ஆதலால், பெங்களூருக்கு வந்தவர் ஜெயாநகர் வழியாக சென்ற போது திடீரென அவர் முன்னர் வேலை பார்த்த பேருந்து டிப்போவை சென்று பார்க்க தோன்றி இருக்கலாம். ரஜினிகாந்த் நடத்துனராக பணியாற்றிய காலத்தில் இருந்தவர்களுள் சிலர் இப்போதும் ஜெயாநகர் டிப்போவில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததினால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து பேச சென்றிருக்கலாம்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர், காந்தி பஸாரில் உள்ள வித்யார்தி பவன் மற்றும் ராகவேந்திரா சுவாமி மடத்திற்கு சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில் ஜெயிலர் திரைப்படம் இதுவரையில் 525 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், அவ்வப்போது கீழே தரையை பார்க்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நடிகர் ரஜினிகாந்த் ஆவார். பேருந்து நடத்துனராக பணியாற்றிய சமயத்தில் முழு கவனத்துடன், ஈடுப்பாட்டுடன் வேலை பார்த்த காரணத்தினாலேயே நடிகர் ரஜினியால் மகிழ்ச்சியுடனும், ஸ்டைல் உடனும் பணியாற்ற முடிந்தது. அதுவே, அவருக்கு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, இன்று உலகம் அறிந்த நபராக முன்னிறுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
