பரிசாக கிடைத்த காஸ்ட்லீ பைக்குடன் உலா வருவது இந்த பிரபல நடிகரா? விலை வெறும் 2 லட்ச ரூபாய் தான்...
ஒரு சில திரைப்படங்களை பற்றி யோசித்தாலே உடனே அந்த படத்தில் இடம்பெற்ற வாகனங்கள் நம் நினைவிற்கு வருவது உண்டு. உதாரணத்திற்கு, நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் என்றாலே மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனம் ஞாபகத்திற்கு வருவதை போல. இவ்வாறு திரைப்படங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் விளம்பரத்திற்காக ஒரு சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அந்த திரைப்பட குழுவினருக்கு பரிசுகள் வழங்கியுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. கில்லி திரைப்பட குழுவினருக்கு வெகுமதி கிடைத்ததா என்பது தெரியவில்லை, ஆனால் சில ஹாலிவுட் திரைப்படக் குழுவினருக்கு இது நடந்துள்ளது.
நம் இந்தியாவிலும் பாலிவுட்டில் சில நடிகர், நடிகைகள் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் தனியாக கவனிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் பிரபல இந்தி நடிகர் ஒருவர் விலையுயர்ந்த யெஸ்டி பைக்கை பெற்றுள்ளார். யார் இந்த இந்தி நடிகர்? அப்படி என்ன மாதிரியான யெஸ்டி பைக் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர் விருதுகள், ஆசிய பசிபிக் திரை விருது என பல்வேறு விருதுகளை வாரி குவித்திருப்பவர் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் இவர் நடித்த 'கை போ சே!' திரைப்படம் 2013ஆம் ஆண்டில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ராஜ்குமார் ராவ்வின் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டில் திரைக்கு வந்த திரைப்படம் 'கன்ஸ் அண்ட் குலாப்ஸ்'.
இந்த திரைப்படத்தில் நிறைய இடங்களில் கார் & பைக்குகள் காட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் மெக்கானிக்காக இருப்பது போன்று கதைக்களம் உள்ளது. ராஜ்குமார் ராவ் இந்த படத்தில் நிறைய இடங்களில் பழமையான ஜாவா பைக்கில் செல்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஜாவா பைக்குகளை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக அமைந்ததை அடுத்து, ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்க்கு பிரத்யேகமான யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster) மோட்டார்சைக்கிளை வழங்கி சிறப்பித்துள்ளது. இதில் 'பிரத்யேகமான' என்கிற வார்த்தையை எதற்காக குறிப்பிட்டுள்ளோம் என்றால், யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் கஸ்டம் டிசைனில் ராஜ்குமார் ராவ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பைக் முழுவதும் பிரவுன்-க்ரோம் என இரட்டை நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பைக்கில் சில மாடிஃபிகேஷன்களும் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், பைக்கில் இருந்து பின் இருக்கை நீக்கப்பட்டு, சிங்கிள் இருக்கை உடன் பாப்பர்-ஸ்டைலில் நடிகர் ராஜ்குமார் ராவ்க்கு யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 'கன்ஸ் அண்ட் குலாப்ஸ்' திரைப்படத்தை பெருமைப்படுத்தும் விதமாக படத்தின் பெயர் பைக்கின் பின்பக்க மட்கார்ட் மற்றும் சைடு பேனலில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பிரத்யேகமான யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் உடன் நடிகர் ராஜ்குமார் ராவ் இருக்கும் வீடியோவை மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ்தான் ஜாவா & யெஸ்டி பைக் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரவுன்-க்ரோம் பெயிண்ட்டில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. சிங்கிள்-சீட், பைக்கின் அழகை இன்னும் அதிகமாக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பைக்கின் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வளையத்தில் பளபளப்பான க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, பைக்கின் என்ஜின், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் ஃப்ரேம் உள்ளிட்டவை எல்லாம் வழக்கம்போல் கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யெஸ்டி ரோட்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.2.09 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் சில ஆயிரங்கள் அதிகமாக இருக்கும். இவ்வளவு விலை கொண்ட பைக்கையா யெஸ்டி நிறுவனம் நடிகர் ராஜ்குமார் ராவ்க்கு பரிசாக வழங்கியுள்ளது? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், கன்ஸ் அண்ட் குலாப்ஸ் திரைப்படத்தின் மூலமாக இதனை காட்டிலும் பல இலட்சங்களுக்கு யெஸ்டி நிறுவனம் வியாபாரத்தை பார்த்திருக்கும்.


Click it and Unblock the Notifications









