88 வயது முதியவர் மாதிரியா தெரிகிறார்? சினிமாவுக்கு நடுவிலும் முதல் பைக்கை இப்போதும் சும்மா பளபளனு வைத்துள்ளார்
சல்மான் கான் (Salman Khan), பிரபல பாலிவுட் நடிகர். இந்தி நடிகர் என சுருக்கிவிடாமல், இந்திய நடிகர் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு சல்மான் கானுக்கு இந்தியளவில் பலத்தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கொலை மிரட்டல் உள்ளிட்டவற்றினால், சமீப காலமாக சல்மான் கானை பற்றிய செய்திகளை அதிகளவில் பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் வேறொரு விஷயத்திற்காக நடிகர் சல்மான் கானின் லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தற்போதைய காலக்கட்டத்தில், இந்தியாவின் இரு முக்கியமான நடிகர்களை சொல்லுங்கள் என கேட்டால், பெரும்பாலானவர்கள் கூறும் பதில்களில் சல்மான் கானின் பெயர் இருக்கும். அந்த அளவிற்கு இவர் நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளார். குறிப்பாக, வட இந்தியாவில் சல்மான் கானுக்கு கோடிக் கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர். உலகளவிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சல்மான் கானின் அடையாளமே அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு தான். இதை பார்த்தே சல்மான் கானை நிறைய பேர் ரசிக்க ஆரம்பித்தனர். சல்மான் கானின் தந்தை சலீம் அப்துல் ரஷீத்கானும் பிரபலமான பாலிவுட் ஸ்டார் ஆவார். சுருக்கமாக சலீம் கான் என அழைக்கப்படும் சல்மான் கானின் தந்தை 1970, 80 காலக்கட்டங்களில் பாலிவுட்டின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தார்.
இந்திய சினிமா உலகில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களாக விளங்கும் தீவார் மற்றும் சோலே திரைப்படங்களின் கதை ஆசிரியர்களுள் சல்மான் கானின் தந்தையும் ஒருவர் ஆவார். 1990ஆம் காலக்கட்டத்தில், வயது மூப்பின் காரணமாக சலீம் கான் சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். ஏதேனும், நிகழ்ச்சிகளில் மட்டுமே சலீம் கானை பார்க்க முடிகிறது. நடிகர் சல்மான் கான் தனது தந்தை குறித்து ஏதேனும் ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது, தந்தை சலீம் கானுடன் இருக்கும் புகைப்படத்தை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவிற்கு லைக் செய்தவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 30 இலட்சத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. சல்மான்கானின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், சலீம் கானின் முதல் பைக்கையும் பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், சல்மான் கானின் இந்த பதிவு ஆனது சலீம் கானின் முதல் பைக்கை மையப்படுத்தியே ஆகும்.
சலீம் கான் வாங்கிய முதல் பைக், டிரையம்ப் டைகர் 100 (Triumph Tiger 100) ஆகும். இந்த பைக்கை 1956ஆம் ஆண்டில் சலீம் கான் வாங்கினார். இந்த வகையில் பார்த்தால், கிட்டத்தட்ட சுமார் 68 வருடங்களாக இந்த 100சிசி டிரையம்ப் பைக் சலீம் கானின் குடும்பத்தில் உள்ளது. சலீம் கானுக்கு தற்போது 88 வயதாகிறது. அப்படியென்றால், தனது 20ஆவது வயதின்போது இந்த பைக்கை சலீம் கான் வாங்கியுள்ளார்.
சல்மான் கான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டுள்ள படங்களில் ஒன்றில் சலீம் கான் அவரது பழமையான டிரையம்ப் டைகர் 100 பைக் மீது அமர்ந்திருப்பதையும், மற்றொரு படத்தில் சல்மான்கான் பைக்கின் மீது அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. டைகர் 100 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த பைக்கின் பெயரில் உள்ள '100' ஆனது பைக்கின் டாப்-ஸ்பீடை குறிக்கிறது. அதாவது, இந்த பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லலாம் என்று கூறியே விளம்பரம் செய்தனர்.
பிரிட்டிஷ் பைக் நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் 1939ஆம் ஆண்டில் முதல் டைகர் 100 பைக்கை உருவாக்கியது. அந்த சமயத்தில் பார்ப்பதற்கு அசத்தலான தோற்றத்தில் இருந்தாலும், அடுத்த 1 வருடத்திலேயே 2ஆம் உலக போரினால் டைகர் 100 பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பின், 1946ஆம் ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்ட இந்த பைக்கின் உற்பத்தி 1973ஆம் ஆண்டு வரையில் நீடித்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் பிரபலமான டிரையம்ப் பைக்குகளுள் டைகர் 100 ஒன்றாகும். குறிப்பாக, அந்த காலத்திலேயே மணிக்கு 100 மைல் வேகத்தில் இயங்கக்கூடிய பைக் ஆக டைகர் 100 இருந்திருக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பைக்கை தான் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் 1956ஆம் ஆண்டிலேயே வாங்கியுள்ளார். இதில் இருந்து, அந்த சமயத்திலேயே சலீம் கான் எந்த அளவிற்கு ஸ்போர்ட்ஸ் பைக் ஆர்வலராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








