அச்சுறுத்தும் துப்பாக்கி சூடுகள்... சல்மான் கான் அடுத்ததாக வாங்க போகும் காரை பற்றி தெரியுமா?
சல்மான் கான் (Salman Khan) இந்தியாவின் முன்னணி நடிகர்; நாடு முழுவதும் கோடிக் கணக்கிலான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர். இதன் காரணமாகவே, சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்களும் ஏராளம். குறிப்பாக, சில நிஜ உலக தாதாக்கள் நடிகர் சல்மான் கானுக்கு 'ஸ்கெட்ச்' போட்டுள்ளதாக கூட செய்திகளில் படித்திருப்பீர்கள். இதன் காரணமாகவே, நடிகர் சல்மான் கானும் அதற்கு எப்போதும் தயாராக உள்ளார். இந்த வெளிப்பாடாக, கடந்த சில வருடங்களாக புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) கார்களை பயன்படுத்திவரும் சல்மான் கான் புதியதாக மேலும் ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை வாங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பையில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மஹாராஷ்டிராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபா சித்திக் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மும்பையின் பரபரப்பான நீலம்நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த கொலை சம்பவத்தை அடுத்து அனைவரது கவனமும் அப்படியே நடிகர் சல்மான் கான் பக்கம் திரும்பியுள்ளது.

ஏனெனில், பாபா சித்திக்கை கொலை செய்த கும்பல் கடந்த சில வருடங்களாக நடிகர் சல்மான் கானையும் கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் நெருங்கிய நண்பர் நடிகர் சல்மான் கான் ஆவார். சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, கொலை நடந்த அடுத்த நாளிலேயே சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து மஹாராஷ்டிரா முதலமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.
இதனால், வழக்கத்தை காட்டிலும் கூடுதல் உஷாராகி உள்ள நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலும் ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நிஸான் பேட்ரோல் (Nissan Patrol) என்கிற பிரம்மாண்டமான எஸ்யூவி காரை புல்லட்-ப்ரூஃப் உடன் சல்மான் கான் வாங்க உள்ளாராம்.
நடிகர் சல்மான் கானிடம் ஏற்கனவே ஒரு நிஸான் பேட்ரோல் புல்லட்-ப்ரூஃப் கார் உள்ளது. அந்த வகையில் பார்த்தால், இது 2வது நிஸான் பேட்ரோல் புல்லட்-ப்ரூஃப் கார் ஆகும். இதனை துபாயில் இருந்து கப்பல் வழியாக மும்பைக்கு கொண்டுவர சல்மான் கான் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்தியாவில் நிஸான் பேட்ரோல் கார் விற்பனையில் இல்லை.
இந்தியாவில் விற்பனையில் இருந்தாலும் அதனை புல்லட்-ப்ரூஃப் தரத்திற்கு மாற்ற ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அதனால்தான், வெளிநாட்டிலேயே காரை வாங்கி அதற்கு அந்த நாட்டிலேயே புல்லட்-ப்ரூஃப்பை கொடுத்து இந்தியாவிற்கு கொண்டுவர நடிகர் சல்மான் கான் முடிவெடுத்துள்ளார். இதனால், இந்த புதிய நிஸான் பேட்ரோல் புல்லட்-ப்ரூஃப் காருக்கு சல்மான் கான் செலவழிக்க போகும் தொகை நீங்கள் நினைப்பதை விட அதிகமாக இருக்கும்.
ஏனெனில், பொதுவாகவே வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அதிகப்படியான வரி விதிக்கப்படுகிறது. கூடுதலாக, சல்மான் கான் இந்த காரை புல்லட்-ப்ரூஃப் தரத்திற்கு மாற்றி இந்தியாவிற்கு கொண்டுவர உள்ளார். ஆகையால், நிஸான் பேட்ரோல் காரின் விலையை காட்டிலும் 3 மடங்கு அதிகமான தொகையை செலவு செய்து இந்த காரை புல்லட்-ப்ரூஃப் உடன் நடிகர் சல்மான் கான் இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிஸான் பேட்ரோல் காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ரூ.2 கோடியாக உள்ளது. குறிப்பாக, நிஸான் பேட்ரோல் காரை மட்டும் நடிகர் சல்மான் கான் தேர்வு செய்வதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், நிஸான் பேட்ரோல் ஆனது வழக்கமான, சாதாரணமான கார் கிடையாது. உலக அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய விஐபி-கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்த காரில் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாபா சித்திக்கின் சமீபத்திய கொலை சம்பவத்திற்கு பிறகு நடிகர் சல்மான் கான் அவ்வளவாக வெளியே வருவதில்லை. இவர் அதிகமாக செல்வது இந்தி பிக்பாஸ் நடக்கும் செட்டிற்கு தான். இருப்பினும், ரவுடிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை உணர்ந்து மேலும் ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை சல்மான் கான் வாங்க நினைப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.


Click it and Unblock the Notifications








