நடிகர் விஜய்யிடம் சொகுசு கார்கள் பல இருக்கலாம்!! ஆனால் இந்த இன்னோவா கார் ரொம்ப ஸ்பெஷல் போல!
நடிகர் விஜய் சமீபத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூருக்கு சேதமடைந்த காரில் சென்றிருப்பது அவர்களது ரசிகர்களை மட்டுமின்றி, இணையத்தில் பலரது கவனத்தை பெறக்கூடிய விஷயமாக மாறியுள்ளது. சேதமடைந்த தனது எந்த காரை நடிகர் விஜய் இந்த சந்திப்பிற்கு கொண்டுவந்தார்? கார் எந்த அளவிற்கு சேதமடைந்து இருந்தது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் அடுத்ததாக திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில், சென்னைக்கு அருகே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சமீபத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பிற்காக வந்து கொண்டிருந்தப்போது விஜய்யின் கார் ரெட் சிக்னலில் நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்காக விஜய்யின் கார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும், விஜய்யின் காருக்கு முன்னாலும், பின்னாலும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்கள் சூழ்ந்து வந்ததினால் சிக்னலில் காரை நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற எண்ணத்திலேயே விஜய்யின் கார் ரெட் சிக்னலில் நிற்கவில்லை எனவும் மறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யின் இந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் உடனான சந்திப்பு தொடர்பான வேறொரு வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமையக வளாகத்திற்குள் விஜய்யின் கார் நுழையும்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், விஜய்யின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார் சற்று சேதமடைந்து இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

விஜய்யின் கார் வளாகத்திற்குள் நுழைவதற்காக திரும்பும்போது, காரின் பின்பக்கத்தில் எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு கீழே டொக்கு விழுந்து இருப்பது நமது கவனத்தை பெறுகிறது. இன்னோவா கிரிஸ்ட்டா ஓர் கம்பீரமான மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கார் ஆகும். ஆதலால் காரில் ஒரு சிறிய டொக்கு கூட பளிச்சென்று தெரிகிறது.
இந்த ஒரு டொக்கு மட்டுமின்றி, விஜய் வந்த இன்னோவா கிரிஸ்ட்டா காரில் பல்வேறு இடங்களில் டொக்குகள் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இன்னோவா கிரிஸ்ட்டா காரை விஜய் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாகவும், இது அவருக்கு பிடித்தமான & அதிர்ஷ்டமான கார் எனவும், இதனால்தான் சற்று சேதமடைந்து இருப்பினும் இந்த காரில் விஜய் பனையூருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியவில் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்று இன்னோவா கிரிஸ்ட்டா ஆகும். 7 வருடங்களுக்கு முன் எந்த விலையில் இன்னோவாவை நடிகர் விஜய் வாங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால் தற்சமயம் இன்னோவா கிரிஸ்ட்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.13 லட்சத்தில் இருந்து ரூ.25.43 லட்சம் வரையில் உள்ளன.
இன்னோவா கிரிஸ்ட்டாவின் புதிய தலைமுறை மாடலாக இன்னோவா ஹைகிராஸ் கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னோவா ஹைகிராஸின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கார் ஸ்ட்ராங் ஹைப்ரீட் வேரியண்ட்டிலும் கிடைக்கும் என்பதாகும். இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நடிகர் விஜய் தமிழக அரசியலில் நுழையும் முனைப்பில் உள்ளது போல் தெரிகிறது. அந்த வகையில் பார்த்தால், அரசியல் நுழைவின் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் விஜய், ராசி பார்த்து தனது அதிர்ஷ்டமான இன்னோவா காரை மக்கள் இயக்க தலைமையகத்திற்கு கொண்டு வந்து இருக்கலாம். காரின் ராசி அரசியலிலும் விஜய்க்கு கை கொடுக்குமா என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications
