சாதாரணமா டாடா காரில் ஆரம்பித்த வாழ்க்கை, இப்போது எங்கேயோ போய்ட்டாரு!! ரோல்ஸ்-ராய்ஸ் கார் பிரச்சனை இல்லைனா...
நடிகர் விஜய் (Vijay), இவரை தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக விளங்கும் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி துவங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய் இன்று (ஜூன் 22) தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முன்னணி நடிகர் என்றாலே லக்சரி கார்களை அதிகமாக வைத்திருப்பர் என்பது நமக்கு தெரியும். நடிகர் விஜய் அவரது சிறு வயதில் இருந்தே ஓர் கார் பிரியர் ஆவார்.
சிறிய வயதில் பொம்மை கார்களை வாங்கி குவிப்பதில் விஜய் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பெரியவர் ஆன பின்பு தனது வருவாயில் தனக்கு பிடித்தமான கார்களை வாங்க நடிகர் விஜய் ஆரம்பித்தார். தற்சமயம் விஜய்யிடம் பழமையான கார்களில் இருந்து மாடர்னான மினி கூப்பர் கார் வரையில் உள்ளன.

1990ஆம் காலக்கட்டத்தில் நடிக்க வந்த புதியதில் விஜய்க்கு டாடா எஸ்டேட் கார் என்றால் தனி ஆர்வம் இருந்துள்ளது. அந்த நேரத்தில் விற்பனையில் இருந்த டாடா எஸ்டேட் கார் ஒன்றை ரூ.2.52 லட்சத்திற்கு விஜய் வாங்கியுள்ளார். தற்சமயம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் அதன் ஆரம்ப காலக்கட்டத்தில் தயாரித்த தரமான மற்றும் பிரபலமான கார்களுள் ஒன்று எஸ்டேட் ஆகும்.
நன்கு நீளமானதாக, அந்த சமயத்தில் விலையுயர்ந்த லக்சரி காராக பார்க்கப்பட்ட டாடா எஸ்டேட் காரில் தனது நண்பர்களுடன் சென்னையில் பல பகுதிகளில் நடிகர் விஜய் சுற்றியுள்ளாராம். அதன்பின், கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து பழமையான பிரீமியர் 118 என்.இ காரை விஜய் வாங்கினார். பழமையான கிளாசிக் கார் என்பதால், அந்த சமயத்திலேயே இந்த பிரீமியர் காரை ரூ.6 லட்சத்தில் விஜய் வாங்கினார்.

இந்த பிரீமியர் காரை வாங்கிய ராசியோ என்னமோ தெரியவில்லை விஜய்க்கு அதன்பின் பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய்யின் ரேஞ்ச் உயர ஆரம்பித்தது. அந்த தைரியத்தில், ரூ.15 லட்சத்தில் விலையுயர்ந்த டாடா சியாரா காரை வாங்கிய நடிகர் விஜய், அதனை தொடர்ந்து ரூ.20 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரையும் வாங்கினார். இன்னோவா விஜய்யின் மிகவும் விரும்பமான காராக விளங்கியது.
இதனால், பல வருடங்களுக்கு இன்னோவா கிரிஸ்ட்டாவை தனது அன்றாட போக்குவரத்துக்காக விஜய் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இன்னோவாவை பயன்படுத்திய அந்த காலங்களில் விஜய்யின் சினிமா பயணம் படிக்கட்டில் இல்லாமல், லிஃப்ட்டில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. இன்னோவாவை காட்டிலும் விலையுயர்ந்த சொகுசு கார்களை புதிய புதியதாக வாங்க ஆரம்பித்தார்.

சொகுசு கார்களை நிறுத்துவதற்காகவே தனது வீட்டின் மேல்மாடியில் ஒரு பகுதியை விஜய் தயார் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கார்கள் லிஃப்ட் மூலமாக மாடிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த லக்சரி கார்களுள் முக்கியமானது ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் ஆகும். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் விஜய்க்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை தந்ததோ அந்த அளவிற்கு கஷ்டங்களையும் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், விஜய்யிடம் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடங்களை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த கார் மட்டுமின்றி, நடிகர் விஜய்யிடம் மற்றொரு ரோல்ஸ்-ராய்ஸ் காராக கோஸ்ட் பாண்டோம் மாடலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டும் ரூ.8 - 9 கோடியாக உள்ளன. இவற்றுடன் ஆடி ஏ8 எல், நிஸான் எக்ஸ்-டிரைல் மற்றும் மினி கூப்பர் என்கிற லக்சரி கார்களும் விஜய்யிடம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமாவில் நடிகராக இருக்கும் பலருக்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், நடிகர் விஜய் 2 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து நடிகர் விஜய் எந்த அளவிற்கு கார் பிரியர் என்பதை அறிய முடிகிறது. மேலும், விஜய்யின் மனைவி சங்கீதாவும் கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









