நடிகர் விஜய் பனையூருக்கு போகும் போது நடந்தது இது தான்! டிராஃபிக் விதிமீறல் சம்பவத்தின் உண்மை ரிப்போர்ட்!
சிக்னலில் நிற்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் ரூ 500 அபராதம் விதித்துள்ளனர். நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் சிக்னலை மதிக்காமல் செல்லும் காட்சி வீடியோவாகவும் பதிவாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாக்களில் நடித்ததின் மூலம் தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவருக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் அரசியலில் இறங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னையை அடுத்த பனையூர் பகுதியில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்து பேசினார். இந்த சந்திப்பு அவரது அரசியல் நகர்வுக்கு மிக முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் இவரது இந்த சந்திப்பை அனைத்து ஊடகங்களும் மிக முக்கியத்துவம் கொடுத்து கவர் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரையில் உள்ள அவரது பங்களாவில் இருந்து பனையூருக்கு காரில் சென்றார். டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரில் இவர் தனது பயணத்தை மேற்கொண்டார். இவர் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் பனையூர் செல்லும் வரை இவர் காரை துரத்திக் கொண்டே செய்தியாளர்களும் வீடியோ எடுத்தபடி பயணித்தனர்.

பல செய்தி சேனல்கள் இதை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தனர். அப்பொழுது நடிகர் விஜய் சென்ற கார் சாலையில் சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்தும் அதை மதிக்காமல் அதைத் தாண்டி சென்றுள்ளது பதிவாகி இருந்தது. நடிகர் விஜய்யின் கார் சிக்னலை மதிக்காமல் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதற்கு பலர் தங்கள் கண்டனங்களையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் ரூ500 அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராத ரசீதை போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு அனுப்பி வைத்துள்ளனர். நடிகர் விஜய்யும் தான் விதிமீறல் செய்ததை ஒப்புக்கொண்டு இதற்கான அபராத தொகையை செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

நடிகர் விஜய் போன்ற பெரும் பிரபலங்கள் இதுபோன்று டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் செல்வது அவரை பின்தொடர்பவர்களுக்கு தவறான உதாரணமாக மாறிவிடும். சாலையில் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். செய்திகளில் இது போன்று வருவது அவரது ரசிகர்களையும் இது போன்ற விஷயங்களை செய்ய வைத்துவிடும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்தி விடும். தினமும் இதேபோன்று ஏகப்பட்ட மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும் நடிகர் விஜய் போன்ற பிரபலமான நபர்கள் மீறும் போது இது மீடியா வெளிச்சத்திற்கு வருகிறது.
இந்தியாவில் போக்குவரத்து சிக்னல்களில் நிற்காமல் செல்ல ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சைரன் வைத்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அரசியல் தலைவர்களின் வாகனங்கள், நீதிபதிகள் உள்ளிட்ட இந்தியாவின் உயர் மட்ட பதவியில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விதிகள் என்பது மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. நடிகர் விஜய் சாலை விதிகளை மதிக்காமல் சிக்னலை மீறி சென்றதற்கு போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது தான். இதுபோன்ற தவறுகளை இனி நடக்காமல் பிரபலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறுகளை பிரபலங்கள் செய்தாலும் அவர்கள் மீது போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
