தமிழ் சினிமாவில் க்ரூப் டேன்சராக துவங்கிய பயணம்! காரை ஷோரூமில் இருந்து வீட்டிற்கே கொண்டுவந்து டெலிவிரி!!
ஏ.ஆர் ரகுமான் (A.R Rahman) இசையில் 1999இல் நடிகர் அரவிந்த் சுவாமியின் நடிப்பில் வெளியான 'என் சுவாச காற்றே' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கே.எஸ் ரவிகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக, கவிஞர் வாலியின் கை வண்ணத்தில் உருவான 'ஜும்பலக்கா' பாடல் இப்போதும் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் அரவிந்த் சுவாமி இல்லாமல், நடன கலைஞர் ராஜூ சுந்தரத்தை வைத்து இளைஞர்களுக்காகவே எடுக்கப்பட்ட இந்த பாடலையும், அதில் சிவப்பு நிற ஆடையில் வரும் இளம் பெண்ணின் முகத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால், இந்த பாடலில் அருகே ஆரஞ்சு நிற ஆடையில் இருக்கும் பெண்ணை கவனித்திருக்கிறீர்களா? அடுத்த முறை இந்த பாடலை பார்க்கும்போது கவனித்து பாருங்கள். ஏனெனில், அவர் அதன்பின் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விட்டார். அவரது பெயர் 'தியா மிர்சா' (Dia Mirza). இவருக்கு சினிமாவில் கிடைத்த முதல் வாய்ப்பு தான் தமிழில் அந்த ஜூம்பலக்கா பாடலில் ஒரு ஓரத்தில் நடந்து செல்வது ஆகும்.

ஆனால், அடுத்த இரண்டு வருடங்களிலேயே தமிழ் நடிகர் ஆர் மாதவனுடன் பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை நடிகை தியா மிர்சா பெற்றார். 'ரெஹ்னா ஹாய் தெர்ரா தில் மெயின்' என்கிற பெயரில் வெளியான அந்த இந்தி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் வேறு எதுவுமில்லை, தமிழில் வெளியான 'மின்னலே' திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
தமிழில் நடிகை ரீமா சென் அடைந்த வெற்றியை போல, இந்தியில் மின்னலே பட கதையின் மூலமாக வளர்ந்தவர் நடிகை தியா மிர்சா ஆவார். முதல் திரைப்படம் கொடுத்த வெற்றியின் மூலமாக பாலிவுட்டில் அடுத்த சில வருடங்களுக்கு படுபிசியாக நடித்துக் கொண்டிருந்த தியா மிர்சாவுக்கு இடையில் பெங்காலி மற்றும் ஈரான் நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசியாக இவரது நடிப்பில் 'நடானியன்' என்கிற இந்தி திரைப்படம் கடந்த மார்ச் மாதத்தில் திரைக்கு வந்த நிலையில், நடிகை தியா மிர்சா புதியதாக எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த இந்த பாலிவுட் நடிகை புதியதாக வாங்கியிருப்பது, பி.எம்.டபிள்யூ ஐ.எக்ஸ் (BMW iX) என்கிற சொகுசு எலக்ட்ரிக் காரை ஆகும்.
நடிகை தியா மிர்சாவின் வீட்டிற்கே வந்து ஐஎக்ஸ் எலக்ட்ரிக் கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு எக்ஸ் டிரைவ்50 என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.40 கோடியாக உள்ளது.

அளவில் பெரியதான 105.2kWh பேட்டரி பேக் உடன் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக சுமார் 635கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஆனது உலகிலேயே பெரிய அளவிலான பேட்டரியை பெறும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. மொத்தம் ஏழு விதமான கலர்களில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் காரை முற்றிலும் கருப்பு நிறத்தில் நடிகை தியா மிர்சா வாங்கியுள்ளார்.
இதனை 'பிளாக் சாப்பியர்' என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது. முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்களை பெறும் ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரில் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்-அப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் அதிகப்பட்சமாக 523 பிஎஸ் மற்றும் 765 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களில், தொடர்ச்சியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்களுள் ஐஎக்ஸ் ஒன்றாகும். இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு பங்களிக்கும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் என்கிற லேட்டஸ்ட் மாடர்ன் எலக்ட்ரிக் காரை நடிகை தியா மிர்சா வாங்கியுள்ளார். இதனால், இனி இவரை வெளியில் பார்க்கும்போது, இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் உடன் தான் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









