அவரை போலவே ஸ்டைலான பிராண்ட்-நியூ காருடன் பிரபல சீரியல் நடிகை - ஷோரூமுக்கு நேரா கணவருடன் போயிட்டாரு!!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான கார்கள் விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி மட்டும் மாதத்திற்கு ஏறக்குறைய 2 லட்சம் கார்களை விற்பனை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவிற்கு, நம் நாட்டில் அதிகப்படியான கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் வாங்கும் கார்களை பற்றி மட்டுமே நம் செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிரபலமான டிவி சீரியல் நடிகை வாங்கியுள்ள செயல்திறன்மிக்க காரை பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பெரிய நடிகர், நடிகைகளை காட்டிலும் குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கவனத்தை பெறுவது சீரியல் நடிகைகளே ஆகும். இந்த வகையில், நம் தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் குறிப்பிட்ட சின்னத்திரை நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு, கேரள மக்களிடையே பிரபலமானவராக இருக்கும் டிவி சீரியல் நடிகை மாளவிகா கிருஷ்ணாதாஸ். 2018ஆம் ஆண்டில் திறமைசாலிகளை கண்டறியும் ஒரு ரியால்டி நிகழ்ச்சி மூலமாக மலையாள மக்கள் மத்தியில் கவனத்தை பெற்ற மாளவிகா கிருஷ்ணாதாஸ், இந்துலேகா என்கிற தொலைக்காட்சி சீரியல் தொடரின் மூலமாக கேரள இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒருவராக மாறினார்.
நடிகை மட்டுமில்லாமல், சிறந்த பரதநாட்டிய நடனருமான மாளவிகா கிருஷ்ணாதாஸ் கடந்த 2023ஆம் ஆண்டில் தேஜஸ் ஜோதி என்பவரை மணந்தார். 1999ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிறந்தவரான நடிகை மாளவிகா கிருஷ்ணாதாஸுக்கு வயது 24 ஆகிறது. பிறந்த நாளை சமீபத்தில்தான் இவர் கொண்டாடினார். இந்த நிலையில், தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மாளவிகா கிருஷ்ணாதாஸ் புத்தம் புதிய ஹூண்டாய் காரை வாங்கியுள்ளார்.

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார். மாளவிகா வாங்கியிருப்பது ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் ஆகும். ஹூண்டாய் ஐ20 காரின் செயல்திறன்மிக்க என் லைன் வெர்சன் இதுவாகும். எந்த அளவிற்கு செயல்திறன்மிக்கது என்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று ஹூண்டாய் ஐ20 என் லைன் ஆகும்.
மார்க்கெட்டில் தற்போதைக்கு, அபிஸ் பிளாக், ஸ்டார்ரி நைட், தண்டர் ப்ளூ, டைட்டன் கிரே, அட்லாஸ் வெள்ளை என 5 மோனோ-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும், தண்டர் ப்ளூ-அபிஸ் பிளாக் ரூஃப், அட்லாஸ் வெள்ளை-அபிஸ் பிளாக் ரூஃப் என 2 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் ஐ20 என் லைன் காரை ஹூண்டாய் விற்பனை செய்கிறது. இந்த அனைத்து பெயிண்ட் ஆப்ஷன்களிலும் காருக்கு அடியில் சிவப்பு நிற ஹைலைட்கள் கிடைக்கும்.

நடிகை மாளவிகா கிருஷ்ணாதாஸ் அபிஸ் பிளாக் என்கிற பெயிண்ட் ஆப்ஷனில் ஐ20 என் லைன் காரை வாங்கியுள்ளார். மாளவிகாவின் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருந்தாலும், காருக்கு அடியில் சிவப்பு நிறம் இருப்பது பார்ப்பதற்கு சூப்பராக உள்ளது. மாளவிகா கிருஷ்ணாதாஸின் ஐ20 என் லைன் கார் கேங்க்ஸ்டர் கார் போன்று உள்ளது. இந்த பவர்ஃபுல்லான ஹூண்டாய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.12.52 லட்சம் வரையில் உள்ளன.
ஐ20 என் லைன் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜினை மேனுவல் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் பெறலாம். விற்பனையில் ஹூண்டாய் ஐ20 காருக்கு டாடா அல்ட்ராஸ், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்சா உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் ஐ20 காருக்கு விற்பனையில் இத்தனை கார்கள் போட்டியாக இருந்தாலும், ஐ20 என் லைன் காரை போன்று டர்போ என்ஜின் உடன் கிடைப்பது டாடா அல்ட்ராஸ் மட்டுமே ஆகும். ஐ20 என் லைன், பலேனோ, கிளான்சா கார்களில் கிடைக்காத டீசல் என்ஜின் ஆப்ஷன் கூட அல்ட்ராஸில் கிடைக்கிறது. இருப்பினும், டாடா அல்ட்ராஸை வாங்காமல், ஹூண்டாய் ஐ20 என் லைன் காரை சீரியல் நடிகை மாளவிகா கிருஷ்ணாதாஸ் வாங்கியிருப்பதன் மூலம் தோற்றத்தில் ஸ்டைலான காரை வாங்க வேண்டும் என அவர் நினைத்திருப்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









