படம் பார்க்க 3கோடி ரூபா காரில் தியேட்டருக்கு வந்த நயன்தாரா.. ஓஹோ இதுதான் அந்த காரா! கார சுத்து போட்டாங்களே!
சமீபத்தில் பிரபல இயக்குநரும், முன்னணி நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், அவருடைய அன்பை வெளிக்காட்டும் விதமாக மனைவி நயன்தாராவிற்கு விலை உயர்ந்த ஆடம்பர காரை பரிசாக வழங்கினார். நயன்தாராவின் 39வது பிறந்த நாளை முன்னிட்டே இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த கார் என்னவாக இருக்கும் என்பதே அவருடைய ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருந்தது. தனக்கு கிடைத்த இந்த பரிசு பற்றிய தகவலை இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிவித்த நயன்தாரா, அது என்ன என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை. காரின் சின்னத்தை மட்டுமே புகைப்படமாக எடுத்து, அதை மட்டுமே அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த படத்தை வைத்து நாம்கூட யூகத்தின் அடிப்படையில், விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு கொடுத்தது மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் (Mercedes Maybach S Class) ஆக இருக்கும் என தெரிவித்து இருந்தோம். ஆனால், அது மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் அல்ல, மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS600) என்பது தெரிய வந்திருக்கின்றது.
இன்று, அவர் நடிப்பில் வெளி வந்திருக்கும் அன்னபூரணி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க நயந்தாரா திரையரங்கம் வந்திருந்தார். இதற்கு அவர் விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்த காரையே பயன்படுத்தி இருந்தார். அப்போதே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600-தான் பரிசாக கொடுக்கப்பட்டு என்பது உறுதியாகியது.
இந்த காரிலேயே செம்ம மாஸாக அவர் திரையரங்கம் வந்திறங்கினார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் விலை 2 கோடியே 96 லட்ச ரூபாய் ஆகும். இது வெறும் அந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த காரையே பிறந்த நாள் பரிசாக விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு வாங்கிக் கொடுத்து அசத்தி இருக்கின்றார். அழகிற்கும், கவர்ச்சிக்கும் பெயர்போன கார் மாடலே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இதனை நடமாடும் சொகுசு மாளிகை என்றும் கார் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு லக்சூரி அம்சங்களை மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த காரை அலங்கரிக்கும் விதமாக மேபேக்-இன் பிரத்யேக க்ரில், 22 அங்குல அலாய் வீல்கள், மேபேக் பேட்ஜ்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சொகுசான ரைடை பயணிகள் அனுபவிக்க வேண்டி மசாஜ் செய்தல், எலெக்ட்ரிக்கலாக அட்ஜெஸ்ட்மென்ட் செய்தல், கூலிங் மற்றும் ஹீட்டிங் செய்தல் ஆகிய வசதிகளைக் கொண்ட இருக்கைகளை இந்த காரில் மெர்சிடிஸ் வழங்கி இருக்கின்றது. இத்துடன், சிறிய பொழுதுபோக்கு திரைகள், பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டி, பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மேபேக் எம்பளம் பொருந்திய ஃபூட் பெடல்கள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் மற்றும் 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், சாவியில்லாமல் நுழைவது போன்ற ஆச்சரியமளிக்கும் தொழில்நுட்ப அம்சங்களும் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரில் இடம் பெற்றிருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 557 பிஎஸ் பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், அனைத்து வீல் இயக்கம் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு உள்ளன.
இவற்றுடன், 48 வோல்ட் மைல்டு-ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இது மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இத்தகைய சூப்பரான ஆடம்பர வசதிகளைத் தாங்கிய காரையே நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பிறந்த நாள் பரிசாக வழங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நயன்தாரா கைகளுக்கு வந்திருக்கும் இந்த காரை இந்தியாவில் இன்னும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அம்பானி, ரகுல் ப்ரீத் மற்றும் துல்கர் சல்மான் போன்ற முன்னணி பிரபலங்களும், தொழிலதிபர்கள்தான் இந்த காரை இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுமிகுந்த ஆடம்பர கார் என்பதாலேயே தொழிலதிபர்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்களின் ஃபேவரிட் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications









