சோதனை செய்த போலீஸாரிடம் தெலுங்கில் பேசி, செல்போனை தள்ளிவிட்ட பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ! என்னம்மா இதெல்லாம்
போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றே. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் போலீஸார் கொஞ்சம் தீவரமான கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தெலங்கானா மாநில போலீஸாரிடம் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இருவரும் தெலுங்கில் உரையாடுவதையும் நம்மால் கேட்க முடிகின்றது. மேலும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நிவேதா பெத்துராஜ், அவர்கள் செல்போனில் படம்பிடிப்பதை அறிந்து அந்த செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
போலீஸார், நிவேதா பெத்துராஜ் வந்த காரின் பின் கதவை திறக்கும்படி கூறியதானலேயே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட தொடங்கி இருக்கின்றது. ஒன்றிற்கு இரண்டு முறை காவலர்கள் கதவை திறக்கும்படி கூறுகின்றனர். ஆனால், நிவேதா பெத்துராஜ் கார் கதவை திறக்கவில்லை. கார் கதவை திறக்க முடியாது என்று கூறி காருக்குள் அமர்ந்தபடியே பதில் கூறுகின்றார்.

இந்த நிலையிலேயே அவர் ஒரு காவலர் படம் பிடிப்பதை அறிந்துக் கொண்டு அந்த செல்போனை தட்டிவிட்டுள்ளார். பின் பக்கத்தில் முக்கியமான பொருள் ஒன்றை பதுக்கி வைத்து எடுத்துச் செல்வதைப் போலவே அவரின் இந்த செயல் அமைந்திருக்கின்றது. ஆனால், இந்த சம்பவம் உண்மை சம்பவமா அல்லது சினிமா படத்திற்காக எடுத்த காட்சிப்பதிவா என்பது துள்ளியமாக தெரியவில்லை.
நிகழ்வுகளை வைத்து பார்க்கையில் இது ஏதோ புதிய படத்திற்கான புரமோஷன் என்பதைப் போலவே தெரிகின்றது. நிவேதா பெத்துராஜ் தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பிற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். அந்தவகையில் தெலுங்கு திரையுலகிலும் இவர் நடித்து வருகின்றார். எனவே இது தெலுங்கு படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிப்பதிவாகவே இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

அதேவேளையில், நிவேதா பெத்துராஜ் போன்று நம்மால் போலீஸிடம் இதுபோன்று நடந்துக் கொள்ள முடியுமா? குறிப்பாக, வாகனத்தை ஆய்வு செய்யவிடாமல் தடுக்க முடியுமா என்கிற சந்தேகமே நமக்கு எழும்பி இருக்கின்றது? இந்த சந்தேகத்திற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் உள்ள சட்டங்கள் சில நிபந்தனைகளின் கீழ் வாகனத்தை சோதனை செய்ய போலீசாரை அனுமதிக்கின்றன. இந்த சூழலைப் புரிந்துகொள்வது, மேலும், இதுபோன்ற நிகழ்வுகளின் போது நம்முடைய உரிமைகள் என்ன என்பது தெரிந்துகொள்ளவது மிகவும் அவசியமானது. வழக்கமாக, காரைத் தேட காவல்துறைக்கு வாரண்ட் அல்லது வேறு ஏதேனும் சாத்தியமான காரணம் தேவை. இருப்பினும், இவை எதுவும் இல்லாமலும் தேடலைச் செய்யக் கூடிய சூழ்நிலைகளும் போலிசாருக்கு உள்ளன.
வாரண்ட் இல்லாமல் போலீசார் எப்போது உங்கள் வாகனத்தை ஆராய முடியுமா? இந்தியாவில் உள்ள காவல்துறையினர் உங்கள் வாகனத்தை வாரண்ட் இல்லாமல் சோதனை செய்யலாம். உங்கள் காரில் குற்றம் நடந்து கொண்டிருக்கிறது அல்லது குற்றம் நடப்பதற்கான ஆதாரம் இருக்கின்றது என்ற நியாயமான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்போது அதை அவர்கள் செய்யலாம். குறிப்பாக, சந்தேகத்திற்கிடமாக நடந்துக் கொள்வதே இதை அவர்களைச் செய்ய தூண்டுகின்றது. இவ்வாறு செய்து பிடிக்கப்பட்ட சட்டவிரோத செயல்கள் பல என்பது குறிப்பிடத்தகுந்தது.
உதாரணமாக, குட்கா பறிமுதல், ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் காரில் இருப்பதாக தெரிய வந்தாலும் போலீஸார் உங்கள் சோதனைச் செய்ய முடியும். உதாரணமாக, ஒரு அதிகாரி இருக்கையில் போதைப்பொருள் அல்லது ஆயுதம் ஏதேனும் இருப்பதைக் கண்டால், அவர்கள் வாரண்ட் இல்லாமலேயே சோதனை நடத்தலாம். சாத்தியமான குற்றங்களைத் தடுப்பதில் அதிகாரிகள் விரைவாகச் செயல்பட இந்தக் கோட்பாடு உதவுகிறது.
சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைத் தடைகளை ஏற்படுத்தி சோதனை மேற்கொள்ள முடியுமா? கட்டாயம் முடியும். இவை பொதுவாக மேற்கொள்ளப்படும் பொது பாதுகாப்பு மற்றும் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அமைக்கப்படுகின்றன. இந்த நிறுத்தங்களின் போது, உங்களின் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் காப்பீட்டு ஆவணங்களைப் பார்க்க அதிகாரிகள் கேட்பார்கள். இதில் ஏதேனும் சிக்கல் இருக்கும் எனில் அபராதம் அல்லது வாகன பறிமுதல்கூட நடக்க நேரிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
கார் சோதனையை தவிர்க்க நமக்கு உரிமை உண்டா? ஒரு அதிகாரி உங்கள் காரைத் தேட அனுமதி கேட்டால், மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. வாரண்ட் இல்லாமல் காரை சோதிக்க அனுமதி வழங்கிவிட்டு பின்னர், அந்த தேடுதல் சட்டவிரோதமானது என்று உங்களால் கூற முடியாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அவசரகால சூழல்: அவசர காலங்களில், போலீசார் வாரண்ட் இல்லாமல் வாகனங்களை சோதனை செய்யலாம். பொது பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகள் அல்லது உடனடி நடவடிக்கை தேவைப்படும் போதும் போலீஸார் இந்த விதியை கையில் எடுத்துக் கொள்வர். உதாரணமாக, சென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல் அல்லது தீவிரவாதி தப்பிவிட்டார் என செய்தி வெளியாகும் எனில் போலீஸார் உடனடியாக நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அனைத்து வாகனங்களை சோதனைச் செய்வர்.
உங்கள் உரிமை என்ன? போலீசாரின் வாகன தணிக்கைச் செயல் சட்டவிரோதமானது என நீங்கள் கருதினால், அதனை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து போராடலாம். அந்தவகையிலேயே சமீபத்தில் எல்லை தாண்டி வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட ஓர் காவலருக்கு அரசின் உயர் பொருப்பில் இருக்கும் அதிகாரியின் மனைவி நீதிமன்றால் உரிய தண்டனை வாங்கி கொடுத்தார். அதேநேரத்தில், காவலர்களின் இந்த சோதனைப் பணியில் அமைதியாக இருப்பதே நல்லது. அடிப்படை கோரிக்கைகளுக்கு இணங்கவும் வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காவலர்களின் சோதனை பணி மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தலை தடுப்பதில் இந்த வாகன தணிக்கையே முக்கிய பங்காற்றுகின்றது. இதுதவிர, தீவிரவாத செயல், வாகன திருட்டு மற்றும் வாகனம் சார்ந்து நடைபெறும் பிற சட்ட விரோத செயல்களை தடுக்கவும் வாகன தணிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
எனவேதான், வாகன தணிக்கையின்போது முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, காவலர்கள் நம் மீது சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க நேரிடலாம். குறிப்பாக, கைது செய்யவும் நேரிடலாம். அதுதவிர, அவர்களால் வாகனத்தை பறிமுதல் செய்யவும் முடியும்.
இதுதவிர, பணி செய்ய விடாமல் தடுத்தது, வாகன தணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காதது என பல பிரிவுகளில் நம் மேல் வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், அவர்களால் உரிய வாரண்ட் இல்லாமலும் நம்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








