பிரபல நடிகை செய்த அந்த ஒரு செயல்!! மனம் குளிர்ந்து போன ரசிகர் - வீடு முன் குவிந்த கூட்டம்!
பெங்களூருவில் வசிக்கும் நடிகை ரச்சிதா ராம் தனது ரசிகர் வாங்கிய புதிய காரில் தனது ஆட்டோகிராஃபை போட்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவையும், நடிகை ரச்சிதா ராமின் ரசிகர் புதியதாக வாங்கியுள்ள காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகை ரச்சிதா ராம் அவர்களை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கன்னடா சினிமா துறையை சேர்ந்தவரான இவர் முதன்முதலாக 2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த 'புல்புல்' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின், கன்னட சினிமா உலகின் முன்னணி நடிகர்களான மறைந்த புனீத் ராஜ்குமார், கிச்சா சுதீப் போன்றோரது படங்களிலும் நடித்துள்ளார்.

இதன் மூலமாக கர்நாடகாவில் ரசிகர் மன்றம் துவங்கும் அளவிற்கு நடிகை ரச்சிதா ராமுக்கு ரசிகர் பட்டாளம் கூடியது. பின்னர், இயக்குனர் சுந்தர் சி தயாரித்த 'நந்தினி' என்ற தமிழ் சீரியலில் சில வருடங்களுக்கு முன்பு நடித்து தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமாகினார். தற்சமயம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துவரும் நடிகை ரச்சிதா ராமை அவ்வப்போது அவரது ரசிகர்கள் நேரில் சந்திப்பது வழக்கம்.
சில வாரங்களுக்கு முன்பு கூட, ரசிகர் ஒருவர் தான் வாங்கிய புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை நடிகை ரச்சிதா ராமிடம் காட்டி ஆசி பெற்றது பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அப்போது ரசிகரின் கிளாசிக் 350 பைக்கில் ரச்சிதா ராம் தனது ஆட்டோகிராஃபை பதிவு செய்து அவரை வாழ்த்தி இருந்தார். இந்த வரிசையில், தற்போது மற்றொரு ரசிகர் தனது புதிய காரை காட்டி ரச்சிதா ராமிடம் ஆட்டோகிராஃபை பெற்றுள்ளார்.
இதுகுறித்து நடிகை ரச்சிதா ராமின் ரசிகர்கள் பயன்படுத்திவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். நடிகை ரச்சிதா ராமின் வீடு பெங்களூரில் சந்தனாவா என்ற பகுதியில் அமைந்துள்ளது. தற்போது ரச்சிதா ராமை நேரில் சந்தித்து அவரது ஆட்டோகிராஃபை பெற்றுள்ள ரசிகர் புதியதாக வாங்கி இருக்கும் கார் மாருதி ஸ்விஃப்ட் டூர் எஸ் ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தால் டாக்ஸி போன்ற கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே விற்பனை செய்யப்படும் டூர் எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.51 லட்சத்தில் இருந்து ரூ.7.36 லட்சம் வரையில் உள்ளன. இத்தகைய காரின் எந்த வேரியண்ட்டை நடிகை ரச்சிதா ராமின் ரசிகர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ரசிகர் வாங்கிய காரின் இருக்கையில் அமர்ந்து, உட்புற டேஸ்போர்டின் மீது நடிகை ரச்சிதா ராம் தனது கையெழுத்தை போட்டுள்ளார்.

கையெழுத்துடன், "பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும்" என்பதையும் ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்றுதான், சில வாரங்களுக்கு முன்னர், வேறொரு ரசிகரின் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மீதும் தனது கையெழுத்துடன் இந்த அறிவுரை வாக்கியங்களை ரச்சிதா ராம் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரச்சிதா ராமிடம் ஆசி பெற்றுள்ள ரசிகரின் மாருதி சுஸுகி டூர் எஸ் கார் வெள்ளை நிறத்தில் உள்ளது.
பெரும்பாலும், கமர்ஷியல் பயன்பாட்டிற்கான வாகனங்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே விற்கப்படும். மொத்தமாக நிறைய எண்ணிக்கைகளில் கமர்ஷியல் கார்களை வாங்கும் கார்ப்பிரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டால் மட்டுமே கார்களின் நிறங்கள் வேறு நிறங்களில் வழங்கப்படும். மாருதி சுஸுகி டூர் எஸ் காரில் 1.2 லிட்டர் கே15சி ட்யூயல்-ஜெட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த மாருதி கமர்ஷியல் கார் சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக காரையோ அல்லது பைக்கையோ வாங்கினால் முதலாவதாக பிடித்தவர்களிடமே அதனை காட்ட நம்மில் பெரும்பாலானோர் விருப்பப்படுவர். அவ்வாறே, மாருதி சுஸுகி டூர் எஸ் காரை வாங்கிய இந்த நபர் தனது கனவு நாயகி நடிகை ரச்சிதா ராமிடம் காட்டி ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டுள்ளார். நடிகை ரச்சிதா ராமும் எத்தனை ரசிகர்கள் தன்னை தேடி வந்தாலும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அவர்களுக்கு தனது ஆட்டோகிராஃபை போட்டு, ஆசி வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications