முன்னணி நடிகையாக இருந்தாலும், தம்பிக்கு ரூ.1 கோடியில் கார் பரிசு எல்லாம் டூ மச்!! அப்போ கூட பென்ஸ் கார் தான்..
இளம் பாலிவுட் நடிகை ஒருவர் தனது சகோதரருக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். யார் அந்த இளம் நடிகை? என்பதையும், அவர் பரிசாக வழங்கியுள்ள பென்ஸ் கார் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே, நடிகர், நடிகையர் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்குவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக பாலிவுட் சினிமாக்காரர்கள், மார்க்கெட்டில் புதியதாக களமிறங்கும் சொகுசு காரை அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே புக் செய்து விடுகின்றனர். தங்களிடம் ஏற்கனவே நிறைய கார்கள் இருக்கும் பட்சத்தில், புதிய காரை அவர்களது பெற்றோர் அல்லது சகோதரர்கள்/ நண்பர்களுக்கு பரிசாக வழங்குகின்றனர்.

பாலிவுட் திரைப்பட பிரபலங்கள் மட்டுமின்றி, இத்தகைய செயல்களில் இந்தி சீரியல் நடிகர், நடிகைகள் கூட ஈடுப்படுவதை அங்கு பார்க்க முடியும். இந்த வரிசையில், பிரபல பஞ்சாப் நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான ஷெஹ்னாஸ் கில் அவரது சகோதரருக்கு விலையுயர்ந்த, முற்றிலும்-புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கருப்பு நிறத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை ஷெஹ்னாஸ் கில்லின் சகோதரர் ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நடிகை ஷெஹ்னாஸ் கில் மற்றும் அவரது சகோதரர் ஷெஹ்பாஸ் கில் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் வெளியிடப்பட்டு உள்ளன. ஷெஹ்பாஸ் கில்லின் இன்ஸ்டாகிராம் பதிவில், இது தனது அக்கா ஷெஹ்னாஸ் கில்லின் பரிசு என பதிவிட்டுள்ள அவர், தனது நண்பர்களுடன் காரை டெலிவிரி எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சண்டிகரில் உள்ள ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் டீலர்ஷிப் மையத்தில் கேக் வெட்டி புதிய இ-கிளாஸ் காரை ஷெஹ்பாஸ் கில் டெலிவிரி பெற்றுள்ளார். டெலிவிரி பெற்ற பின், ஷோரூமில் இருந்து ஷெஹ்பாஸ் கில் தான் காரை வெளியே எடுத்து வந்துள்ளார் என்பதை வீடியோவை பார்க்கும்போது தெரிய வருகிறது. இந்த வீடியோவுக்கு பின் வேறொரு ரீல் வீடியோவையும் ஷெஹ்பாஸ் கில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த ரீல் வீடியோவில், காரை டெலிவிரி எடுப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய ஆவணங்கள் சமர்பிப்புகள் உள்ளிட்டவை காட்டப்பட்டுள்ளன. இந்த ரீல் வீடியோவிலும், காரை பரிசளித்த தனது சகோதரி ஷெஹ்னாஸ் கில்லை பாராட்டி சில வரிகள் ஷெஹ்பாஸ் கில் பேசியுள்ளார். மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இ200 எக்ஸ்க்ளூசிவ் பெட்ரோல், இ220டி எக்ஸ்க்ளூசிவ் டீசல் மற்றும் இ350டி ஏஎம்ஜி லைன் டீசல் என 3 விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் எஸ்யூவி கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டை ஷெஹ்னாஸ் கில் தனது தம்பிக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. பெரும்பாலும், நடிகர், நடிகையர்கள் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டையே வாங்க விரும்புவர்.
அதாவது, இ350டி ஏஎம்ஜி லைன் டீசல் வேரியண்ட்டையே ஷெஹ்பாஸ் கில் பெற்றிருக்க வேண்டும். இ-கிளாஸ் காரின் இந்த விலையுயர்ந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 282 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த பென்ஸ் காரின் விலை ரூ.1 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்பது நடுத்தர பொருளாதார வர்க்கத்தினருக்கே அதிர்ச்சியான விஷயமாகும். மற்றப்படி, ஷெஹ்னாஸ் கில் போன்ற முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருக்கு இது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. கிடைத்தால் இப்படியொரு அக்கா கிடைக்க வேண்டும் என்பதுபோல், விலைமிக்க மெர்சிடிஸ் காரை அவரது சகோதரர் பெற்று உள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications