தமிழக அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான நிகர்ஷாஜி பற்றி உங்களுக்கு தெரியுமா?
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ நாளை செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்த போகும் ஆதித்யா எல் 1 விண்களத்தின் திட்ட இயக்குனரும் தமிழர் தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தொடர்ந்து இஸ்ரோவில் தமிழர்கள் சாதனை படைத்து வரும் நிலையில் இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் பத்திரமாக திரையரங்கியது. இது மிகப்பெரிய உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோவின் இந்த தொடர் சாதனைகளுக்கு பின்னால் பல்வேறு தமிழர்கள் பணியாற்றி வரும் தகவல்கள் நாம் இப்போது காண முடிகிறது. சந்திரயான் 3 விண்களத்தின் திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் என்று தமிழர் தான் பணியாற்றினார். அவரின் தலைமையில் தான் சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ அடுத்த ஆய்வு திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு தயாராகிவிட்டது. இதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை நாளை செப்டம்பர் 2ம் தேதி காலை 11:05 மணிக்கு விண்ணில் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இஸ்ரோவின் அடுத்த சாதனைக்காக மக்கள் எல்லோரும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்த மற்றொரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி என்ற பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிகர்ஷாஜியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். ஷேக் மீரான்-சைதுள்பீவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக நிகர்சுல்தான் என்பவர் பிறந்துள்ளார். இவர் தற்போது தனது பெயரை நிகர்ஷாஜி என மாற்றிக்கொண்டு இஸ்ரோவில் பணியாற்றி வந்துள்ளார். இவரது திறமையை பார்த்து இஸ்ரோ இவருக்கு ஆதித்யா எல் 1 விண்களத்தின் திட்ட இயக்குனராக நியமித்தது.
இவர் செங்கோட்டையில் உள்ள எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை படித்தவர். இவர் பள்ளியில் படிக்கும் போது பள்ளியில் முதல் மாணவியாக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் பின்பு இவர் நெல்லையில் உள்ள அரசு என்ஜினியரிங் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்துள்ளார். அதன் பின்பு தனது திறமையால் இவர் இஸ்ரோவில் பணியில் சேர்ந்து உள்ளார்.
தற்போது பெங்களூருவில் இவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் வெளிநாட்டில் இன்ஜினியரிங் பயின்று வருகிறார். தற்போது இவர் இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராகப் பணியாற்றி வருவது தமிழர்களுக்கு மற்றொரு பெருமையை கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் என்பவர் பணியாற்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ள நிலையில் தற்போது நிகர்ஷாஜியும் தமிழகத்திற்கு மற்றொரு பெருமையை தேடித் தர உள்ளார். நாளை விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 விண்களம் அடுத்த நான்கு மாதம் தொடர்ந்து பயணித்து சூரியனை சுற்றியுள்ள எல் 1 என்ற பகுதிக்கு சென்று சூரியனை ஆய்வு செய்யப் போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இஸ்ரோ படைக்கும் பல சாதனைகளுக்கு தமிழர்கள் தலைமை வைத்து வருகின்றனர். மயில்சாமி அண்ணாதுரை முதல் சிவன், வனிதா முத்தையா, வீரமுத்துவேல் ஆகியோரை தொடர்ந்து தற்போது நிகர்ஷாஜியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இது தமிழர்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என்று சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications