ஸ்டைலுக்காக அல்ல... பைக் சக்கரத்தில் ஏன் ஸ்டாண்டு மாட்டி வைக்கறாங்க தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!
பைக் சக்கரங்களில் ஏன் வித்தியாசமான ஒரு ஸ்டாண்டை மாட்டி வைக்கிறார்கள்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கின் முன் சக்கரத்திலோ அல்லது பின் சக்கரத்திலோ வித்தியாசமான ஸ்டாண்டு (Stand) பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் அனைத்து இடங்களிலும் இந்த ஸ்டாண்டை பார்க்க முடியாது. சர்வீஸ் சென்டர், ரேஸ் டிராக் போன்ற இடங்களில்தான், இந்த வித்தியாசமான ஸ்டாண்டு பொருத்தப்பட்ட பைக்குகளை நீங்கள் பார்க்க முடியும்.

இதனை பேடக் ஸ்டாண்டு (Paddock Stand) என அழைக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. சர்வீஸ் செய்வது போன்ற பணிகளின்போது பேடக் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். அல்லது சென்டர் ஸ்டாண்டு போட்டால் பைக் எப்படி நிற்குமோ, அதேபோல் நிலையாக நிறுத்தி வைக்கவும் பேடக் ஸ்டாண்டு பயன்படுகிறது.

சமீப காலமாக பார்த்தால் பெரும்பாலான பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு சாதாரண கம்யூட்டர் வகை (Commuter Bike) பைக்குகள் விதிவிலக்கு. கம்யூட்டர் வகை பைக்குகள் என்பது, பயணிகள் பைக் ஆகும். இந்த வகை பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு எப்போதும் போல தொடர்ந்து வழங்கப்படுகிறது.

ஆனால் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்றவற்றில் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவதில்லை. எடை குறைவாக இருந்தால்தான் இன்ஜின் செயல்திறன் நன்றாக இருக்கும். எனவே எடையை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், விலையை ஓரளவிற்கு குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்றவற்றில் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவதில்லை.

இத்தகைய பைக்குகளை நிமிர்ந்த நிலையில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது முடியாது. ஏனெனில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு இருந்தாலும், நிமிர்ந்த நிலையில் நிறுத்த வாய்ப்புகள் இல்லை. ஒரு பக்கம் சாய்ந்த வகையில்தான் நிறுத்த முடியும். இங்குதான் பேடக் ஸ்டாண்டுகள் உதவிக்கு வருகின்றன.

சென்டர் ஸ்டாண்டு இல்லாத பைக்குகளை நிமிர்ந்த நிலையில் நிறுத்துவதற்கு அவை உதவி செய்கின்றன. பைக்கை பொறுத்து, பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் பேடக் ஸ்டாண்டுகள் வருகின்றன. அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பேடக் ஸ்டாண்டுகளும் இருக்கின்றன. இவை அனைத்து பைக்குகளுக்கும் பொருந்தும்.

முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் என இரண்டு சக்கரங்களுக்கும் பேடக் ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. பேடக் ஸ்டாண்டுகள் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சரை சரி செய்யும் பணிகளுக்கு இவை உதவி செய்கின்றன. மேலும் டயரை மாற்றுவதற்கும் பேடக் ஸ்டாண்டுகளை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் வீல் பேலன்சிங் பணிகளிலும் பேடக் ஸ்டாண்டுகளின் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர செயினை சுத்தப்படுத்துவது மற்றும் பராமரிப்பது போன்ற பணிகளிலும் பேடக் ஸ்டாண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அத்துடன் ஒட்டுமொத்தமாக பைக்கை சுத்தப்படுத்துவதற்கும் பேடக் ஸ்டாண்டுகள் உதவி செய்கின்றன.

பொதுவாக சென்டர் ஸ்டாண்டு போட்டுதான் பலரும் பைக்கை சுத்தம் செய்வார்கள். ஆனால் சென்டர் ஸ்டாண்டு இல்லாத பைக்குகளில் பேடக் ஸ்டாண்டு போட்டு, பைக்கை சுத்தம் செய்யலாம். அத்துடன் பைக்கை முழுமையாக சர்வீஸ் செய்யும் பணிகளுக்கும் பேடக் ஸ்டாண்டுகளை தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

எனவேதான் சர்வீஸ் சென்டர்கள் போன்ற இடங்களில் பேடக் ஸ்டாண்டு போடப்பட்ட பைக்குகளை நீங்கள் பார்க்க முடியும் என இந்த செய்தியின் தொடக்கத்தில் கூறினோம். நீங்களும் கூட உங்கள் பைக்கிற்கு பேடக் ஸ்டாண்டை வாங்க முடியும். இதன் மூலம் பைக் பராமரிப்பு பணிகளை வேகமாகவும், திறம்படவும் செய்து முடிக்கலாம்.

ரேஸ் பைக்குகளிலும் எடை குறைப்பு முயற்சியாக பெரும்பாலும் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவது இல்லை. எனவே ரேஸ் பைக்குகளை நிமிர்ந்த நிலையில் நிறுத்தி வைத்து பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பேடக் ஸ்டாண்டுகள் உதவுகின்றன. இதன் காரணமாக ரேஸ் டிராக்குகளிலும் பேடக் ஸ்டாண்டுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








