தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காதா? வக்கீல் சொல்லும் உண்மை சம்பவம்
ஆம்னி பஸ் விபத்தில் சிக்கினால் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என வழக்கறிஞர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால் தற்போது தமிழக முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
தற்போது நீண்ட விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்கள் எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழக முழுவதும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழக அரசு சில ஆம்னி பஸ்களை ஜப்தி செய்திருந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை தற்போது தமிழக முழுவதும் பெரிதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அதே நேரம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் விடுமுறை காலத்தை குறிவைத்து மக்களிடம் கொள்ளை அடிப்பதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதே நேரம் ஆம்னிபஸ் உரிமையாளர்கள் சார்பில் தாங்கள் வசூலிக்கும் கட்டணம் சராசரியாக பார்த்தால் பெரிய அளவில் லாபமான கட்டணமாக இருக்காது. செலவுகளை பார்க்கும்போது கட்டணம் சரியாக தான் வசூலிக்கிறோம் என விவாதம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் ஆம்னிபஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவில் அவர் தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான ஆம்னி பஸ்களில் விபத்து நடந்தால் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் சட்ட விதிமுறைகளை மீறி இயங்குகிறதா என்ற கேள்வி எழுப்பி உள்ளது.
அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதன் படி: " தமிழகத்தில் இயங்கும் 98% ஆம்னி பஸ்கள் ஆந்திரா, தெலங்கானா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட டூரிஸ்ட் பஸ்களாக இருக்கிறது. இவை தமிழ்நாட்டில் ஸ்டேஜ் கேரேஜ் பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு காரைக்குடி-சென்னை ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கி தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகளாகியும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வருவதில் சிக்கல் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த பஸ்கள் பதிவு செய்யப்படும் போது டூரிஸ்ட் கேரேஜ் பஸ்கள் என பதிவு செய்யப்பட்டு அதற்காக இன்சூரன்ஸ் பெறப்படுகிறது. ஆனால் இந்த பஸ்கள் எல்லாம் தமிழகத்தில் ஸ்டேஜ் கேரேஜ் பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
டூரிஸ்ட் கேரேஜ் பஸ்கள் என்றால் சுற்றுலா செல்வதற்கு மட்டுமே அனுமதி பெற்று பஸ்கள் ஆகும். இதில் பொதுமக்களிடம் தனித்தனியாக டிக்கெட் வசூலிக்க கூடாது. இது இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மீறிய செயல் என்பதால் அந்நிறுவனம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் பணத்தை இதுவரை வழங்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாம் ஆங்காங்கே பார்க்கும்போது பெரும்பாலான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. இந்த பஸ்கள் எல்லாம் தமிழகத்தில் சுற்றுலா பஸ்களாக பெர்மிட் எடுக்கப்பட்டு இயக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பஸ்களில் பயணம் செய்வதால் இந்த பஸ்கள் விபத்தில் சிக்கும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் சிக்கலாக இருக்கிறது. பலர் இப்படியாக இன்சூரன்ஸ் பணம் பெற முடியாமல் தவித்து வருவது வழக்கறிஞர் அருள் சுவாமிநாதன் போட்டுள்ள பேஸ்புக் பதிவில் நமக்கு தெளிவாக தெரிகிறது.
இதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் ஸ்டேஜ் கேரேஜ் அனுமதி இல்லாத பஸ்கள் ஆம்னி பஸ்களாக இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அப்படி இயக்கப்பட்டால் அந்த பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை அளிக்க வேண்டும் எனவும், மேலும் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்கள் ஏன் தமிழகத்தில் அதிகம் இயக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அந்த பிரச்சனையையும் தீர்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் குறித்து நீண்ட ஆண்டுகளாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. ஆம்னி பஸ் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் முறையாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதை எல்லாம் நீக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications