உருவான கதையை கேக்கும்போதே ஒடம்பெல்லாம் புல்லரிக்குது! உலகை அண்ணாந்து பாக்க வைத்த இந்தியாவின் குட்டி விமானம்!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில், ஏரோ இந்தியா 2025 (Aero India 2025) நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்று காலை (பிப்ரவரி 13), ஹெச்டிடி-40 (HTT-40) விமானத்தில், பாஜக (BJP) முக்கிய தலைவர்களில் ஒருவரும், பெங்களூர் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா (Tejasvi Surya) பயணம் செய்தார். இந்தியாவின் ராணுவ விமான போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் ஹெச்டிடி-40 விமானத்தில் தேஜஸ்வி சூர்யா சுமார் 30 நிமிடங்கள் பயணித்தார்.
தேஜஸ்வி சூர்யா பயணம் செய்த ஹெச்டிடி-40, ஒரு அடிப்படை பயிற்சி விமானம் (Basic Trainer Aircraft) ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஹெச்ஏஎல் என சுருக்கமாக அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL - Hindustan Aeronautics Limited) நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது.

இது பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனம் ஆகும். ஹெச்டிடி-40 விமானத்தில் பறந்து முடித்த பிறகு, ஹெச்ஏஎல் நிறுவனத்தை தேஜஸ்வி சூர்யா வெகுவாக பாராட்டி பேசினார். இந்நிறுவனம் பெங்களூர் மற்றும் இந்தியாவின் பெருமை என அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய நிறுவனமான ஹெச்ஏஎல் தயாரித்த ஹெச்டிடி-40 விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. ஹெச்ஏஎல் நிறுவனம் பெங்களூர் மற்றும் இந்தியாவின் பெருமை. ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள ஹெச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானம் இந்தியாவின் ஏரோநாட்டிகல் துறையின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதில் இது ஒரு மைல்கல். இந்தியாவிலேயே சொந்தமாக அடிப்படை பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்கு பதிலாக முந்தைய காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து நிறுவனத்திடம் இருந்து பிலாடஸ் பயிற்சி விமானங்களை வாங்க முடிவு செய்தது.
ஹெச்ஏஎல் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பல்வேறு சந்தேகங்களை கொண்டது மற்றும் புதிரானது. இதன் காரணமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இதன் மூலமாக, இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களின் தலையீடு இருந்தது கடந்த 2019ம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது.
இந்த பிரச்னைகளால் இந்தியாவிலேயே சொந்தமாக அடிப்படை பயிற்சி விமானங்களை தயாரிப்பது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதியில் இந்த திட்டம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர், ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே சொந்தமாக அடிப்படை பயிற்சி விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிர்வாக ரீதியிலான உதவிகள் எல்லாம் செய்யப்பட்டன. இதன் விளைவாக ஹெச்ஏஎல் மற்றும் நமது இன்ஜினியர்கள் வெறும் நாற்பதே மாதங்களில் இந்த ஹெச்டிடி-40 விமானத்தை தயாரித்துள்ளனர்.
இந்த அடிப்படை பயிற்சி விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. ஊழலில் இருந்து சுய சார்புக்கு இந்தியா எப்படி முன்னேறியது? என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஹெச்டிடி-40 விமானம் திகழ்கிறது'' இவ்வாறு அவர் கூறினார். Hindustan Turbo Trainer-40 என்பதன் சுருக்கம்தான் HTT-40.
இந்திய விமானப்படையின் (IAF - Indian Air Force) பயிற்சி தேவைகளை மனதில் வைத்து, ஹெச்டிடி-40 உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் புதிதாக சேரும் பைலட்களுக்கு பயிற்சி வழங்க அடிப்படை பயிற்சி விமானங்கள் தேவை. ஆனால் இந்த விமானங்களுக்கு பற்றாக்குறை இருந்தது. இந்த பற்றாக்குறையை போக்குவதற்காகவே ஹெச்டிடி-40 உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிடி-40 விமானத்தின் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 2.8 டன்கள் ஆகும். இந்த விமானத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 450 கிலோ மீட்டர்களாக உள்ளது. அதே நேரத்தில் இதன் அதிகபட்ச ரேஞ்ச் 1,000 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த விமானத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இன்ஜின் ஆன் செய்து வைக்கப்பட்டிருக்கும்போதே, எரிபொருள் நிரப்ப முடியும் என்பது இதில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாஜக எம்பியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் (Annamalai) நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான தேஜஸ்வி சூர்யா கூறியபடி, ஹெச்ஏஎல் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஹெச்டிடி-40 விமானத்தை உருவாக்கியிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








