ககன்யான் திட்டத்திற்கு ரெடியான இஸ்ரோ! அதுக்குள்ள அடுத்த சாதனையா என வியக்கும் உலக நாடுகள்!
சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1 ஆகிய விண்கலங்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ள நிலையில், தற்போது தனது அடுத்த கட்ட திட்டத்திற்காக இஸ்ரோ தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ககன்யான் திட்டத்தின் சோதனை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சமீபகாலமாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளியில் உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் வியக்கத்தக்க வகையில் இஸ்ரோ அடுத்தடுத்து தனது சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.

சந்திரயான் 3 விண்கலம் தனது பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு தற்போது உறக்க நிலைக்கு சென்றுள்ள நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலமும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு தற்போது சூரியனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து 4 மாதங்கள் பயணம் மேற்கொண்டு எல் 1 என்ற இடத்திலிருந்து சூரியனை இந்த விண்கலம் ஆய்வு செய்யப் போகிறது. இதன் மூலம் இஸ்ரோ மிக முக்கியமான உலக சாதனைகளை எல்லாம் வரிசையாக படைத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்த முக்கியமான திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான். இதற்கான தீவிர முயற்சியில் தான் இஸ்ரோ இறங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு தரையிறக்க முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு மனிதர்களை பத்திரமாக கொண்டு சென்று அங்கு மூன்று நாட்கள் ஆய்வு செய்த பின்பு அவர்கள் பத்திரமாக பூமியில் தரை இறங்குவதற்கான இந்த திட்டம் தற்போது சோதனை கட்டத்தில் இருக்கிறது.
இஸ்ரோ மனிதர்களை நேரடியாக விண்வெளிக்கு அனுப்பும் முன் அந்தத் திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் செய்து ஆளில்லாத ரோபோ கொண்ட ஒரு ராக்கெட்டை இரண்டு முறை விண்வெளிக்கு செலுத்தி அதன் மூலம் ஆய்வுகள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை பொறுத்தே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதித்யா எல் ஒன் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்பு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் இது குறித்து பேசினார். அப்பொழுது அவர் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் எல்லாம் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்திற்கான இன்ஜின் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் சோதனைகள் முடிந்து விட்டன. தற்போது அதில் மனிதர்கள் பயணிக்கும் கேப்சூலுக்கான சோதனை மட்டுமே பாக்கி இருக்கிறது. அந்த சோதனையும் அடுத்த மாதம் முடிந்து விட்டால் அடுத்ததாக சோதனை முயற்சியாக ஆளில்லா ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி அதை பத்திரமாக மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சி எடுக்கப்படும் என தெரிகிறது.
இரண்டு கட்டமாக இப்படியாக ஆளில்லா ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பி சோதனை செய்த பின்பு வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யாவின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோவின் தற்போதைய அடுத்த மிக முக்கியமான திட்டமாக இருக்கிறது.
இதற்கிடையில் தற்போது ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் இது எல் 1 என்ற இடத்திற்கு சென்று தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் இது அங்கிருந்து அனுப்பும் தரவுகளை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இங்கு ஆய்வு செய்து சூரியனைக் குறித்து மேலும் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்வார்கள் இதன் மூலம் சோலார் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது அதன் அடிப்படையில் ககன்யான் திட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வெகு சில நாடுகளே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications