900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!
மும்பை-ஆமதாபாத் தொடர்ந்து நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் பாதையாக ஆமதாபாத்-டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை ஒன்றை அமைக்க தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த இரு நகரங்களையும் இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஏற்கனவே புல்லட் ரயில் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்கி விட்டன. முதல் கட்டமாக மும்பை-ஆமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் பயணிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் எல்லாம் துரிதமாக நடந்து வரும் நிலையில், 2026ம் ஆண்டு இந்த இரு நகரங்களுக்கும் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் இரண்டாவது ரயில் நிலையம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு டில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் பாதை ஒன்றை அமைக்க தற்போது ஆய்வு செய்துள்ளது0 இதன்படி இந்த இரு நகரங்களையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பதன் மூலம் இரு நகரங்களுக்கான பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையே பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயிலில் பயணம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் வந்து விட்டால் இந்த வெறும் 3.5 மணி நேரத்தில் பயணம் செய்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டு எந்தெந்த வழியாக புல்லட் ரயில் பாதை அமைய வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.

இதன்படி டெல்லியில் இருந்து துவங்கும் புல்லட் ரயில் ஹிமாத்நகர், உதய்ப்பூர், பில்வாரா, சித்தூகர்க், அஜ்மீர், கிஷான்கார்க், ஜெய்ப்பூர், ராவேரி, மானேசர் பகுதி வழியாக ஆமதாபாத்திற்கு சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஊர்களில் எல்லாம் புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அங்கெல்லாம் புல்லட் ரயில்கள் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 900 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த திட்டத்தை முதன்முதலாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு துவங்கியது. தற்போது அதற்கான ஆய்வுகள் எல்லாம் முடிக்கப்பட்டு முழு திட்டம் குறித்த வரையறை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான ஒப்புதல் வழங்கினால் உடனடியாக இந்த பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்ட போது ஏரியல்லைடர் என்ற முறையில் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு முழுவதுமாக இந்த பாதையை ஆய்வு செய்யப்பட்டு இங்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்பதையும் ஆய்வு செய்து, மேலும் ஏற்கனவே உள்ள கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்படுமா என்பதையும் ஆய்வு செய்து முடிந்த அளவுக்கு குறைவான பாதிப்பிலும் அதே நேரம் நிலம் கையகப்படுத்துவதில் தேவையில்லாத தாமதத்தை தவிர்க்கும் வகையிலும் இது திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மும்பை ஆமதாபாத் இடையே கட்டமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் பாதையில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த டெல்லி-அகமதாபாத் இடையே கட்டமைக்கப்படும் ரயில் பாதையில் 350 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 900 கிலோ மீட்டரை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் இருந்து விமான மூலம் ஆமதாபாத் வரும்போது விமானத்திலேயே பயண நேரம் 1.30 மணி நேரம் ஆகிறது. இதுவே புல்லட் ரயிலில் வெறும் 3.5 மணி நேரத்தில் வந்துவிட்டால் விமானங்களை விட மக்கள் பலர் புல்லட் ரயில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் விரைவில் கட்டமைக்கப்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற வேகமாக வளரும் நாடுகளில் இந்த புல்லட் ரயில் தேவை என்பது மிக முக்கியமாக இருக்கிறது. பல முக்கிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைத்து பயண நேரத்தை சுருக்கி விட்டால், இந்தியா இன்னும் வேகமாக வளர வேகமாக ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக ஆமதாபாத் நகரம் இந்தியாவின் மிக முக்கியமான நகரமாக மாறும்.


Click it and Unblock the Notifications









