உடைந்த சீட்டில் பயணியை அமர வைத்ததால், ஏர் இந்தியாவிற்கு ரூ1 லட்சம் அபராதம்! மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு!
பிரீமியம் டிக்கெட் முன்பதிவு செய்த பயணி ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் பயணத்தின் போது உடைந்த சீட்டை வழங்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போக பயணத்துக்கு அவர் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான பணத்தையும் வட்டியுடன் செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதுவும் ஒரு முறை இல்லை இரு முறை இந்த தவறு நடந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நீண்ட தூரம் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பலர் அதிக நேரம் விமானத்தில் பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், பிரீமியம் ரக சீட்டுகளை புக் செய்வார்கள். இதனால் அவர்களுக்கு போதுமான அளவு வசதி கிடைக்கும். இந்த சீட்டுகளை சாய்வு வசதியுடன் சாய்த்து கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதால் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என இப்படியான டிக்கெடுகளை புக் செய்வார்கள்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி டெல்லியிலிருந்து அமெரிக்காவில் உள்ள டொரென்டோவிற்கும் அதே மாதம் 24ம் தேதி டொரன்டோவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு வருவதற்காக ஒய்வு பெற்ற கடற்படை ரியர் அட்மிரலான அணில் குமார் சக்க்ஷேனா என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் பிரீமியம் ரக டிக்கெட் ஒன்றை பதிவு செய்துள்ளார். திட்டமிட்டபடி இவர் விமான பயணத்திற்கும் தயாராக சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து டொரன்டோவிற்கு விமான பயணத்திற்காக விமானத்தில் போர்டு செய்தவுடன் இவருக்காக ஒதுக்கப்பட்ட சீட்டிற்கு சென்று அமர்ந்துள்ளார். அந்த சீட்டில் சென்று அமர்ந்த பின்பு தான் இவருக்கு அந்த சீட் சரியாக வேலை செய்யவில்லை என தெரிந்துள்ளது. இதனால் அவருக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளது.

இவர் புக் செய்தது பிரீமியம் ரக சீட்டு என்பதால் அது சாய்வு வசதியுடன் இருக்க வேண்டும். இப்படியாகத்தான் இவருக்கு டிக்கெட் புக் செய்யும் போது தகவல் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த சீட் சாய்வதில் பிரச்சினை இருந்துள்ளது. சரியாக இந்த சீட்டு இல்லாததால் இவர் விமான பணி ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து விமான ஊழியர்கள் இந்த சீட்டை சரி செய்ய முயன்று வேறு வழியில்லாமல் இவருக்கு பிரிமியம் அல்லாத சீட்டு ஒன்றை மாற்று சீட்டாக வழங்கியுள்ளார்கள். இவர் 14 மணிநேரமும் பிரீமியம் அல்லாத சீட்டில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இவர் முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானார். இது ஒரு முறை அல்ல இவர் மீண்டும் டொரட்டோவில் இருந்து டெல்லிக்கு திரும்ப வரும்போது இதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த இரண்டு பயணத்திற்காக டிக்கெட் புக் செய்ததற்கு நஷ்டஈடு வழங்கும் படி இவர் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு கடிதம் மூலமும் ஈமெயில் மூலமும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். அதற்கு ஏர்இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தனது வக்கீல் மூலம் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு நஷ்டஈடு வழங்க நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் மீது உள்ள தவறை ஒப்புக்கொண்டு சக்க்ஷேனாவிற்கு ரூபாய் 1.18 லட்சம் மதிப்பு உள்ளான டெல்லியில் இருந்து டொரன்டோ வரை விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் வவுச்சர்களை ஒரு ஆண்டு வேலிடிட்டியுடன் வழங்கியது. இது மட்டுமல்லாமல் கூடுதலாக டொரட்டோவில் இருந்து டெல்லி வருவதற்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கான தனி வவுச்சரையும் வழங்குவதாக தெரிவித்திருந்தது.
இதை சக்ஷேனா நிராகரித்துவிட்டார். தனக்கு தான் டிக்கெட்டுக்காக செலுத்திய பணம் மற்றும் நஷ்ட ஈடு வேண்டுமென கேட்டார். அதற்கு ஏர்இந்தியா தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் இவர் உடனடியாக இந்த வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்தார். கோர்ட்டில் இவர் தான் டிக்கெட்டுக்காக செலுத்திய ரூ2.36 லட்சம் பணம் மற்றும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ1 லட்சமும் வழக்கு செலவிற்காக ரூ50,000 வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கியும், அந்நிறுவனம் தரப்பிலிருந்து யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து மும்பை கோர்ட் இதை சக்க்ஷேனா பக்கம் ஆதரவாக தீர்ப்பளித்தது. அதன்படி ஏர்இந்தியா நிறுவனம் சக்க்ஷேனாவிற்கு நஷ்டஈடாக ரூ80,000 ,அவரது மன உளைச்சலுக்கு ரூ20,000 மற்றும் அவர் டிக்கெட்டிற்காக செலுத்தியை தொகையை 18% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது இதையடுத்து 30 நாட்களுக்குள் கட்டாயம் வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான டிக்கெட்களை புக் செய்யும் போது பயணிகள் சீட் வசதிக்காகவே பிரீமியம் சீட்டுகளை புக் செய்கிறார்கள். இந்த நேரத்தில் விமான சேவை நிறுவனங்கள் இந்த சீட்டுகளை சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் கூடுதல் விலை கொடுப்பதை இந்த சீட்டுக்காக தான். அந்த சீட்டில்லையே பிரச்சனை வந்தால் அவர்கள் கூடுதல் விலை கொடுப்பதில் அர்த்தமே இல்லை. இது போன்ற பிரச்சனைகள் நடக்காமல் ஏர்இந்தியா நிறுவனம் தடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









