18 ஆயிரம் கிமீ இடை நில்லாமல் பயணிக்கும் விமானத்தை வாங்கிய ஏர் இந்தியா... இதுல இத்தனை பேரால பயணிக்க முடியுமா?
ஏர் இந்தியா (Air India)-வின் முதல் அகலமான உடல் கொண்ட ஏர்பஸ் ஏ350-900 (Airbus A350-900) விமானம் இன்று (டிசம்பர் 23) தேசத்தின் தலைநகர் டெல்லியில் தரையிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஏர் இந்தியா (Air India) நிறுவனம், அதன் விமான போக்குவரத்து சேவையில் ஏர்பஸ் ஏ350-900 (Airbus A350-900) விமானத்தை இணைக்க இருக்கின்றது. முதல் கட்டமாக அது ஆறு ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை இணைக்க இருக்கின்றது. இதற்கான ஆர்டர் ஏற்கனவே ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியா வழங்கிவிட்டது.

இந்த நிலையிலேயே, சனிக்கிழமை (டிசம்பர் 23) அன்று ஏர் இந்தியாவிற்கான முதல் ஏர்பஸ் ஏ350 - 900 விமானம் இந்தியாவை வந்தடைந்தது. இது தலைநகர் டெல்லியில் தரையிறங்கியது. இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி கேம்ப்பெல் வில்சன் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
ஏர்பஸ் ஏ350 - 900 ஓர் அகலமான உடலைக் கொண்ட விமானம் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட விமானம் ஆகும். இந்தியா விமான பிரிவில் இதுபோன்ற அகலமான உடலமைப்பைக் கொண்ட விமானம் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை என கூறப்படுகின்றது.

மேலும், முதல் கட்டமாக இந்த விமானம் குறைந்த தூர இடைவெளிகளைக் கொண்ட வழித்தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்து இருக்கின்றது. இதற்கு பின்னரே நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. புதிய விமானத்தை சேவையில் இணைக்க இருப்பதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான சீருடையையும் மாற்ற இருக்கின்றது.
இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கின்றார். பல மாத திட்டமிடலுக்கு பின்னரே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. புதிதாக இணைக்கப்பட இருக்கின்ற ஏர்பஸ் ஏ350-900 விமானம் முதலில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட இருக்கின்றது.

இதற்கு முன்னதாக சுங்க அனுமதி, டிஜிசிஏ சோதனைகள் உள்ளிட்டவற்றை அது மேற்கொள்ள இருக்கின்றது. இவற்றிற்கு பின்னரே பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு விமானம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், ஏற்கனவே கூறியதைப் போல சில மாதங்களுக்கு குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமே இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.
ஏர்பஸ் ஏ350-900 விமானத்தில் 300-350 பயணிகளால் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். மூன்று விதமான வகுப்புகளைக் கொண்ட விமானமே இது ஆகும். குறைவான தூரம் முதல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இந்த விமானம் காட்சியளிக்கின்றது. இதனால் 18 ஆயிரம் கிமீ இடைநில்லாமல் பறக்க முடியும்.
அதிக இடவசதி, சொகுசான பறக்கும் அனுபவத்தை வழங்கக் கூடிய விமானமாகவும் இதனை ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இதனால்தான் வருகை இந்தியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக ஏர் இந்தியாவின் விமான போக்குவரத்து சேவையை அடிக்கடி பயன்படுத்துவோரை இந்த தகவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அந்த அளவிற்கு ஓர் உலக தரம் வாய்ந்த விமானமே ஏர்பஸ் ஏ350 - 900 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், ஏற்கனவே ஏ350 விமானங்களை பராமரிப்பதற்கான அனுமதியை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. இந்த அனுமதி அதன் தடையில்லா ஏ350 - 900 சேவைக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மிக முக்கியமாக பட்ஜெட் விலையில் இந்த விமானத்தின் வாயிலாக போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









