13 வருஷமா ஏர் இந்தியா கண்டுக்கல... ஒரு காலத்தில் கடிதங்களை தூக்கிட்டு பறந்துக்கிட்டு இருந்துச்சு!!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Tata Sons And Singapore Airlines)-க்கு விற்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 737 (Boing 737) விமானம், தற்போது வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்படுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த குறிப்பிட்ட போயிங் விமானம் 3 வருடங்களுக்கு முன் வேறொரு நிறுவனத்தின் வசம் சென்றாலும், கடந்த சுமார் 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, இப்படியொரு விமானம் தங்களுக்கு சொந்தமானதாக உள்ளது என்பதையே ஏர் இந்தியா மறந்துவிட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானம், ஏர் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. போயிங் 737-200 என பெயர் கொண்ட இந்த சரக்கு விமானத்தின் உரிமையைப் பற்றி ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகத்திற்கு சமீபத்தில்தான் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, விமானத்தின் வரலாற்றை ஆராயும் பணியில் ஏர் இந்தியா ஈடுபட்டது. 2012ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இந்த விமானம், முன்னர் இந்திய அஞ்சல் சேவைக்காக ஏர் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது. பின்னர், கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கிங் பகுதியில் தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டது. தொலைதூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால், இப்படியொரு விமானம் இருப்பதையே ஏர் இந்தியா ஏர்லைன்ஸை சேர்ந்த பலரும் மறந்துவிட்டனர்.
இந்த விமானம் இருந்ததை ஏர் இந்தியா அண்மையில்தான் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கேம்ப்பெல் வில்சன் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய தகவலில், "பழைய விமானத்தை அப்புறப்படுத்துவது கடினமானது அல்ல என்றாலும், எங்களிடம் இருக்கும் ஒரு விமானம் எங்களுக்கே தெரியாமல் இருந்தது இதுதான் முதல் முறை" என்று தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டிலேயே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது என்றால், இந்த விமானம் எவ்வளவு பழமையானது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். நமக்கு கிடைத்துள்ள தகவல்படி, இந்த போயிங் 737-200 (வரிசை எண் 22863) விமானத்தை 1981 ஆகஸ்ட் 30 அன்று முதல்முறையாக இயக்கி பார்த்து சோதனை செய்தனர். பின்னர், 1982 செப்டம்பர் 8 அன்று இந்தியன் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்டு, VT-EHH என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப காலத்தில், இந்தியன் ஏர்லைன்ஸில் பறந்த இந்த விமானம், பின்னர் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்படி, அல்லையன்ஸ் ஏர் (முன்னர் ஏர் இந்தியா கீழ் செயல்பட்ட ஏர்லைன்ஸ்) கீழ் மாற்றப்பட்டு, 1998 பிப்ரவரி 2 முதல் 2007 ஜூலை 4ஆம் வரை இந்திய பிராந்தியங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையில் பயன்படுத்தப்பட்டது.

பின்னர், இந்த விமானத்தை சரக்கு விமானமாக மாற்றி, இந்திய அஞ்சல் சேவைக்காக ஏர் இந்தியா இயக்கியது. இருப்பினும், 2007 ஆகஸ்டிற்கு பின் இந்த விமானம் பெரியதாக பயன்படுத்தப்படவில்லை என்று பதிவுகள் காட்டுகின்றன. 2019 ஜூலை முதல் இந்த விமானம் உணவகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக விமானங்களை பற்றிய விபரங்களை வழங்கும் ஏர்ஃப்ளீட்ஸ் இணையத்தளம் தெரிவிக்கிறது.
போயிங் 737-200 சரக்கு விமானம், ஒரு பல்துறைத் திறன் கொண்ட இரட்டை எஞ்சின் விமானமாகும். இது தனது வலிமைக்காகவும், சவாலான தரையிறங்கும் தளங்களிலும் செயல்படும் ஆற்றலுக்காகவும் அறியப்படுகிறது. பெரும்பாலான பெரிய விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி ஓய்வு பெற்ற பிறகும், சரக்கு போக்குவரத்துக்காக தொலைதூரப் பயணங்களிலும் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் விமானத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது.
போயிங் 737-200 விமானத்தில் பிராட் & வைட்னி (Pratt & Whitney) JT8D-17A என்ஜின்கள் உள்ளன. தற்போதைய ஏர் இந்தியாவின் சேவையில் ஏர்பஸ் ஏ319, ஏ320, ஏ320 நியோ, ஏ321, ஏ321 நியோ போன்ற குறுகிய மற்றும் அகலமான விமானங்கள் உள்ளன. இவை உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களின் பயன்பாடு எந்த அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவ்வளவு பெரிய விமானத்தையே பல வருடங்களுக்கு கண்டுக்கொள்ளாமல் ஏர் இந்தியா பிசியாக தனது பணியை வழங்கி கொண்டிருப்பதில் இருந்து அறியலாம். இந்த பழைய சரக்கு விமானத்தை வாங்கியது யார் என்பது குறித்த விபரங்கள் இல்லை. அதேபோல், டாடா குழுமத்திற்கு இந்த விமானத்தை விற்றதினால் எவ்வளவு பணம் கிடைத்தது என்கிற விபரமும் கிடைக்க பெறவில்லை.


Click it and Unblock the Notifications








