ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த டாடா அதிரடி... ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
ஏர் இந்தியா நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதற்காக டாடா குழுமம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. கடன் சுமை அதிகமானதால், ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்தது. ஆனால் லாபகரமான நிறுவனமாக மாற்றாமல், தனியாருக்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல என்று பலரும் விமர்சித்தனர்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஏர் இந்தியா நிறுவனத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்திற்கு (Tata) மத்திய அரசு விற்பனை செய்தது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு சமீபத்தில்தான் டாடா குழுமத்திடம் முறைப்படி ஒப்படைத்தது. தற்போது டாடா குழுமம்தான் ஏர் இந்தியா நிறுவனத்தை நிர்வகித்து கொண்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்கும், பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் டாடா குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியாவின் 'கேபின் க்ரூ' (Cabin Crew) எனப்படும் விமான ஊழியர்களுக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 'கேபின் க்ரூ' மிகவும் குறைவான அளவில் மட்டுமே அணிகலன்களை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகளில் தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'இமிக்ரேஷன் செயல்முறைகள்' (Immigration Process) நிறைவடைந்த பிறகு ட்யூட்டி-ஃப்ரீ ஷாப்களுக்கு (Duty-free Shops) செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடும் நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக டாடா குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போதைய உத்தரவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்போ அல்லது போர்டிங் செயல்முறைகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதோ பானங்களை அருந்த வேண்டாம் என்றும், உணவு உட்கொள்ள வேண்டாம் என்றும் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் விரைவாக ஏறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விமானத்தின் கதவை மூடுவதில், கேபின் க்ரூ தரப்பில் எந்தவிதமான தாமதமும் ஏற்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இந்த உத்தரவுகள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியாவை லாபகரமானதாக மாற்றுவதற்கு வரும் காலங்களில் இன்னும் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே ஏர்ஏசியா இந்தியா (AirAsia India) மற்றும் விஸ்தாரா (Vistara) ஆகிய விமான நிறுவனங்கள் உள்ளன. இந்த சூழலில்தான் ஏர் இந்தியா நிறுவனமும் தற்போது டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

டாடா குழுமத்தை பொறுத்தவரையில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், எலெக்ட்ரிக்கல், ரியல் எஸ்டேட், டெலிகாம் என பல்வேறு துறைகளில் டாடா குழுமம் காலடி எடுத்து வைத்துள்ளது. இதுதவிர ஆட்டோமொபைல் துறையிலும் டாடா குழுமம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஆட்டோமொபைல் பிரிவான டாடா மோட்டார்ஸ் சமீப காலமாக கார் விற்பனையில் புதிய உயரங்களை தொட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டியாகோ, டிகோர், நெக்ஸான், பன்ச், அல்ட்ராஸ், புதிய சஃபாரி மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களை போல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற மகுடத்தை டாடா மோட்டார்ஸ் சூடியுள்ளது.

வெகு சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதை தொடர்ந்து இன்னும் நிறைய சிஎன்ஜி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் எந்த வாகனங்களுக்கு தேவை மிகவும் அதிகமாக இருக்குமோ, அந்த தொழில்நுட்பத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே வேகமாக தயாராகி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல், ஏர் இந்தியா நிறுவனமும் கூடிய விரைவில் லாபம் ஈட்டும் வெற்றிகரமான பாதைக்கு திரும்பும் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








