உங்க ஊரு காற்று சுத்தமானதா? இந்த செயலி இருந்தாலே தெரிஞ்சுக்கலாம்.. எப்படி என்பதை ஸ்டெப்-பை-ஸ்டெப் பாக்கலாம்!
காற்று மாசு ஒட்டுமொத்த உலகிற்குமே தலைவலியாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் காரணமாகவே சில கடுமையான நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்து வருகின்றது. பழைய வாகனங்களுக்கான தடை தொடங்கி பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு சில நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லாம் டெல்லி அரசு விடுமுறை அறிவித்திருக்கின்றது. ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளவும் அது கடந்த காலங்களில் அறிவுறுத்தி இருக்கின்றது.
அந்த அளவிற்கே மிகப் பெரிய சிக்கலாக டெல்லியில் காற்று மாசுபாடு உருவெடுத்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கூகுள் 'ஏர் வியூ' (Air View) எனும் டூல் (Tool)-ஐ அறிமுகம் செய்திருக்கின்றது. இது நிகழ்நேர டிராஃபிக் ஜாமை போல நிகழ்நேர காற்று மாசுபாடு பற்றிய தகவலை உங்களின் செல்போனிலேயே வழங்கும்.

ஆகையால், உங்கள் உள்ளூரின் காற்று எந்த அளவிற்கு தூய்மையாக உள்ளது என்பதை இந்த ஒற்றை டூல் வாயிலாகவே தெரிந்துக் கொள்ள முடியும். இந்த செயலி எப்படி செயல்படும்? அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கூகுள் ஏர் வியூ எப்படி வேலை செய்கின்றது? தனியாக எல்லாம் இதற்காக செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டாம். கூகுள் மேப்பிலேயே இதற்கான வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், மக்கள் காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவை தெரிந்துக் கொள்ள ஏதுவாக இந்தியாவின் மிக முக்கியமான 150 நகரங்களில் காற்றின் தரத்தை கண்டறியும் சென்சார்களை கூகுள் பொருத்தி இருக்கின்றது.
இது தொடர்ச்சியாக காற்றின் தரத்தை ஆராயும். மேலும், அது கண்டெடுத்த புள்ளி விபரங்களை கூகுள் மேப் வாயிலாக அதன் பயனர்களுக்கு பகிரும். பிஎம் 2.5, பிஎம்10, கார்பன்-டை ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை ஆக்ஸைடு என அனைத்தின் அளவையும் கண்டறியும் திறன் கொண்டதே இந்த சென்சார்கள் ஆகும். இதுமட்டுமல்ல இந்த கருவி வெப்பநிலையையும் கண்டறியும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
ஆகையால், காலநிலை பற்றிய தகவலையும் இந்த சென்சார்கள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். மேலும், இந்த சென்சார்கள் வாயிலாகக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டே காண்பிக்கப்படும். ஆகையால், போலியான தகவல்கள் கிடைக்க முற்றிலும் வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
எப்படி இந்த வசதியை நாம் பயன்படுத்துவது? கூகுள் மேப் இருந்தால் போதும் கூகுளின் இந்த சேவையை நம்மால் பயன்பெற முடியும். கூகுள் மேப்-இல் 'ஏர் குவாலிட்டி லேயர்' (Air Quality layer) எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கும். இதனுள் சென்று உங்களின் நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு காற்றின் மாசுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
இதேபோல், வெதர் (Weather) எனும் ஆப்ஷன் வாயிலாக காலநிலையை பற்றிய தகவல்களையும் அதில் அறிந்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக, மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி நம்மையும், நம்மை சார்ந்தோரையும் காற்று மாசின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
மேலும், இந்த தகவலை கூகுள் சில மாற்று நிறுவனங்களுடன் இணைந்தே வழங்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்காக உள்ளூர் க்ளைமேட் டெக் நிறுவனங்களான ஆராஸ்சூர் (Aurassure) மற்றும் ரெஸ்பைரர் லிவிங் சைன்சஸ் (Respirer Living Sciences) ஆகியோருடனேயே கூகுள் மேப் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இவர்களே சென்சார் நெட்வொர்க்குகளை அமைக்கும் பணியில் உதவியிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வானிலை தகவல்களை அறிந்துக் கொள்வதைப் போல உள்ளூர் காற்றின் மாசுபாட்டை அறிந்துக் கொள்வதும் தற்போது அவசியமாகி உள்ளது. இப்போது வேண்டுமானால் பலருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். விரைவில் இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே கூகுள் தன்னுடைய புதிய சேவையை தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








