விமானங்களின் பாத்ரூமில் ஒரு ரகசிய பட்டன் இருக்கும்... எதற்காக தெரியுமா? தெரியாத்தனமா அதை அழுத்தீராதீங்க!
விமானங்களின் கழிவறையில் ஒரு ரகசிய பட்டன் இருக்கும். அது எதற்காக? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த முறை நீங்கள் விமானத்தில் கழிவறையை பயன்படுத்தும்போது கதவின் மேல் எதற்கும் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் விமானத்தின் கழிவறை கதவில் ரகசிய பட்டன் ஒன்று இருக்கும். இந்த பட்டனை அழுத்தினால், வெளியில் இருந்தும் கூட கதவை திறக்க முடியும். நீங்கள் உள்ளே கதவை பூட்டியிருந்தாலும், வெளியில் இருந்து இந்த பட்டனை அழுத்தினால் கதவு திறந்து கொள்ளும்.

அப்படியானால் விமானத்தில் நிம்மதியாக கழிவறையை கூட பயன்படுத்த முடியாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. உள்ளே பூட்டியிருந்தாலும், வெளியில் இருந்து யாராவது கதவை திறந்து விடுவார்களோ? என்ற பயத்துடனே இருந்தால், யாராலும் நிம்மதியாக கழிவறையை பயன்படுத்த முடியாது என்பது நிச்சயம் உண்மைதான்.

எனினும் விமானங்களில் இப்படி ஒரு வசதி இருப்பதற்கு பின்னால் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. விமானத்தின் கழிவறை கதவில் இந்த ரகசிய பட்டன் எங்கே இருக்கும்? விமானங்களில் எதற்காக இப்படி ஒரு பட்டன் உள்ளது? என்பது உள்பட தற்போது உங்கள் மனதில் எழுந்திருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த செய்தியில் முழுமையாக பதில் வழங்கியுள்ளோம்.

விமானத்தின் கழிவறை கதவின் வெளிப்புறத்தில் 'Lavatory' (கழிவறை) என்ற குறியீடு இருக்கும். இதற்கு அடியில்தான் நாம் தற்போது பேசி கொண்டிருக்கும் ரகசிய பட்டன் அமைந்திருக்கும். இந்த பட்டனை அழுத்தினால், உள்ளே பூட்டப்பட்டிருந்தாலும் கூட, கதவு திறந்து கொள்ளும். பயணிகளை அசௌகரியப்படுத்துவதற்காக இந்த பட்டன் வழங்கப்படுவதில்லை.

மிக முக்கியமான பாதுகாப்பு காரணத்தை மனதில் வைத்துதான் இந்த பட்டன் வழங்கப்படுகிறது. ஒருவேளை ஏதாவது அவசர சூழல் என்றால், வெளிப்புறத்தில் இருந்து கதவை திறப்பதற்கு இந்த பட்டன் பயன்படுகிறது. அவசர சூழல்களில் கழிவறையின் கதவை திறப்பதற்கு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களால் இந்த ரகசிய பட்டன் பயன்படுத்தப்படும்.

அதாவது கழிவறையை பயன்படுத்தும்போது பயணிகள் யாருக்காவது திடீரென உடல் நிலை மோசமடைந்து விட்டால், கழிவறையின் உள்ளே செல்வதற்கு விமான ஊழியர்கள் இந்த பட்டனை பயன்படுத்துவார்கள். அதேபோல் குழந்தைகள் கழிவறையை பயன்படுத்தும்போது தற்செயலாக கதவை உள்ளே பூட்டி கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒருவேளை கதவை எப்படி திறந்து வெளியே வருவது? என்பது தெரியாவிட்டால், குழந்தைகள் கழிவறையில் சிக்கி கொள்ள கூடும். இதுபோன்ற இக்கட்டான சமயங்களிலும் வெளியில் இருந்து கதவை திறந்து குழந்தைகளை மீட்பதற்கு விமான ஊழியர்களால் இந்த பட்டன் பயன்படுத்தப்படும். ஆனால் தேவையில்லாமல் இந்த ரகசிய பட்டனை விமான ஊழியர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

எனவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல் மற்ற பயணிகள் இந்த ரகசிய பட்டனை அழுத்தி கழிவறை கதவை திறப்பதற்கான வாய்ப்புகளும் கூட மிகவும் குறைவுதான். எனவே உங்கள் வீட்டில் எப்படி சௌகரியமாக கழிவறையை பயன்படுத்துவீர்களோ, அதேபோன்று விமானத்தில் பறக்கும் நேரத்திலும் உங்களால் கழிவறையை பயன்படுத்த முடியும்.

விமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த வசதியை வைத்துள்ளனர். கழிவறை கதவில் இருக்கும் இந்த ரகசிய பட்டனை பயன்படுத்துவது தொடர்பாக விமான பணிப்பெண்கள் ஒரு சிலர் கூடுதல் தகவல்களையும் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு சில முறைகள் கதவை தட்டாமல், அவர்கள் இந்த ரகசிய பட்டனை பயன்படுத்த மாட்டார்கள்.

அதேபோன்று நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லைதானே? என்பது போன்ற கேள்விகளையும் விமான ஊழியர்கள் கேட்பார்கள். ஆனால் உள்ளே இருப்பவரிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் மட்டுமே, இந்த ரகசிய பட்டனை பயன்படுத்தி வெளியில் இருந்து கழிவறை கதவு திறக்கப்படும்.

அவசர சூழல்களில் ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது. எனவே கழிவறையின் உள்ளே இருப்பவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை எனும்பட்சத்தில் நேரத்தை வீணடிக்காமல் கதவு உடனடியாக திறக்கப்படும். விமானத்தின் வடிவமைப்பில் இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கு பின்னாலும் பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் அடங்கியுள்ளன என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








