எதிர்காலத்தில் விமான பயணங்களில் இப்படியொரு பிரச்சனை வர உள்ளதா!! எதனால் தெரியுமா? எச்சரிக்கும் அறிவியலாளர்கள்..
அடுத்த 10 ஆண்டுகளில் பயணத்தின்போது விமான தடுமாற்றங்கள் (Airplane Turbulence) அதிகளவில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளிக்காட்டியுள்ளது. எதனால் இவ்வாறு ஏற்படும்? எவ்வாறு இது கணிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன் உருவான நமது பூமி இத்தனை வருடங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. ஆனால் அவை அனைத்தை காட்டிலும் உலக வெப்பமயமாதல் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக விளங்கக்கூடும் என விஞ்ஞானிகள் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.

தொழிற்சாலைகள் & எரிபொருள் என்ஜின் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரும் புகை மற்றும் காடுகள் அழிப்பு போன்ற காரணிகளால் மெல்ல மெல்ல நிகழ்ந்துவரும் உலக வெப்பமயமாதலினால், துருவங்களில் பனி உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்தல் மற்றும் தொடர் வறட்சியான சூழல் உருவாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் உலக வெப்பமயமாதலினால் வானத்திலும் அசாதாரண நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பால் வில்லியம்ஸ். இதன் காரணமாக, விமானங்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தடுமாற்றங்களை சந்திக்க நேரிடலாம் என இவர் எச்சரிக்கிறார். 30,000 - 40,000 அடி உயரத்தில் காற்று வெவ்வேறு விதமான வேகங்களில் வீசுவதால் விமானங்கள் தடுமாற்றங்களை சந்திக்கின்றன.

வானிலை சீராக இல்லாத போதும், இடியுடன் கூடிய கனமழையின்போதும் ஏற்படும் இத்தகைய தடுமாற்றங்களை இப்போதும் விமானங்கள் சந்திக்கின்றன. ஆனால் சற்று அரிதாகவே எதிர்கொள்கின்றன. ஏனெனில் வானிலை சரியில்லை என்றால், விமான பயணங்களை ரத்து செய்தல் அல்லது தாமதமாக மேற்கொள்ளுதல் அல்லது அவசரகால தரையிறக்கம் போன்ற முன்னெச்சரிகை நடவடிக்கைகளை தற்சமயம் துரிதமாக மேற்கொள்கின்றனர்.

இதனால் எதிர்பாராத வானிலை மாற்றங்களுக்கு மட்டுமே விமானங்கள் தடுமாற்றங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வானிலை மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படும் என்றும், இதனால் விமான தடுமாற்றங்களும் அடிக்கடி ஏற்படலாம் எனவும் ஆராய்ச்சியாளர் பால் வில்லியம்ஸ் பயமுறுத்துகிறார்.

யுகே-வில் உள்ள ரீடிங் பல்கலைகழகத்தில் வளிமண்டல அறிவியல் துறையின் பேராசிரியரான பால் வில்லியம்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "குறை விமான தடுமாற்றங்கள் உள்ளன. இந்த தடுமாற்றத்தின்போது பயணிகள் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தாலே போதும். உணவு சேவைகளை எப்போதும் போல் தொடரலாம்.

அதுவே மிதமான தடுமாற்றத்தில், சீட் பெல்ட்டை இறுக்கமாக அணிதல் அவசியம்; பொருட்கள் அனைத்தும் ஆட்டம் காணும்; நடப்பது கடினம்; இத்தகைய தடுமாற்றங்களில் அனைவரும் தங்களது இருக்கையை விட்டு எழ வேண்டாம் என விமான பணிப்பெண்கள் அறிவுறுத்துவர். மிகவும் வலுவான தடுமாற்றங்களும் உள்ளன. இவை புவியூர்ப்பு விசையை காட்டிலும் வலிமையானதாக இருக்கும்.

இத்தகைய சமயத்தில் நீங்கள் இருக்கையோடு அழுத்தப்படுவீர்கள். ஒருவேளை நீங்கள் சீட்பெல்ட் அணியவில்லையெனில் கேபினுக்குள் தூக்கி வீசப்படுவீர்கள். இத்தகைய தடுமாற்றங்களின்போது எலும்பு முறிதல் உள்பட படுகாயங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நாங்கள் சில கணினி சிமுலேஷன்களை இயக்கி பார்த்தோம்.

அவற்றின் மூலமாக வரும் பத்தாண்டுகளில் மிகவும் வலுவான தடுமாற்றங்கள் வழக்கத்தை காட்டிலும் இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்கக்கூடும் என்பதை கண்டறிந்தோம்" என்றார். மேலும், இந்த 3 விதமான தடுமாற்றங்களை காட்டிலும் பயங்கரமானதாக 'க்ளியர் ஏர் டர்புலன்ஸ்' என்ற புதியதொரு விமான தடுமாற்றம் எதிர்காலத்தில் வரவுள்ளதாகவும் பால் வில்லியம்ஸ் பீதியை கிளப்பியுள்ளார்.

க்ளியர் ஏர் டர்புலன்ஸ் குறித்து இவர் கூறுகையில், "மின்னல்கள் அல்லது மேகங்கள் இல்லாத போதிலும், க்ளியர் ஏர் தடுமாற்றம் எதிர்பாராத நேரத்தில் வந்து விமானத்தை தாக்கும். இதனை தவிர்ப்பது கடினம். இத்தகைய தடுமாற்றங்கள் 2050- 2080ஆம் காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அந்த சமயத்தில் மிகவும் வலுவான தடுமாற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டிருக்கும்" என்றார்.

விமான சேவை அதிகளவில் உள்ள நாடுகளுள் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவில் வருடத்திற்கு சராசரியாக 65 ஆயிரம் மிதமான தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் 5,500 அதாவது 10இல் 1 மிதமான தடுமாற்றம், மிகவும் வலுவான தடுமாற்றமாக மாறுகிறது. ஆராய்ச்சியாளர் பால் வில்லியம்ஸ் கூறியதுபடி பார்த்தால், அமெரிக்காவில் இந்த வலிமையான தடுமாற்றங்களின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் வருடத்திற்கு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரையில் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








